ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து 2018: தோல்வியே சந்திக்காத ஸ்பெயின்... மீண்டும் சாம்பியன் ஆகுமா?

ஒன்றரை ஆண்டுகளில் எந்தப் போட்டியிலும் ஸ்பெயின் தோற்கவில்லை

ஆசைத் தம்பி

FIFA World Cup Foot Ball 2018: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 14-ம் தேதி ரஷ்யாவில் தொடங்குகிறது. சுமார் ஒருமாத காலம் நடக்கும் இந்த தொடர் ஜூலை 15ம் தேதி முடிகிறது.

ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவூதி அரேபியா, தென் கொரியா, எகிப்து, மொரோக்கோ, நைஜீரியா, செனெகல், துனிசியா, கோஸ்டா ரிக்கா, மெக்சிகோ, பனாமா, அர்ஜென்டினா, பிரேசில், கொழும்பியா, பெரு, உருகுவே, பெல்ஜியம், குரோஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ரஷிய, செர்பியா, ஸ்பெயின், சுவீடன், ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட 32 அணிகள் இந்த தொடரில் களமிறங்குகின்றன.

போட்டியை நடத்தும் நாடு என்பதால் ரஷ்யா நேரடியாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. மற்ற 31 அணிகளும் தகுதி சுற்றின் அடிப்படையில் தேர்வாகி உள்ளன.

உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் ஒவ்வொரு அணிகள் குறித்தும் தினம் நாம் இங்கே அலசி வருகிறோம். அதன்படி, இன்று ஸ்பெயின் அணியைப் பற்றி பார்க்கலாம்.

ஸ்பெயின்…. 1904ம் ஆண்டே ஃபிபாவின் உறுப்பினராக இணைந்துவிட்டது. ஆனால், முதன்முதலாக 1920ம் ஆண்டுதான் தேசிய ஸ்பெயின் கால்பந்து அணி கால்பந்து உலகிற்குள் அடியெடுத்து வைத்தது. 1930ல் ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை தொடங்கிய போது, அதில் ஸ்பெயின் பங்கேற்கவில்லை. அதற்கடுத்ததாக 1934ல் நடந்த உலகக் கோப்பையில் தான் ஸ்பெயின் அணி முதல் முறையாக பங்கேற்றது. அது முதல் இதுவரை நடந்துள்ள 20 உலகக் கோப்பைத் தொடரில் 14 முறை விளையாட தகுதிப் பெற்றுள்ளது. இதேபோல் ஃபிபாவின் மற்றொரு மிகப்பெரிய தொடரான UEFA ஐரோப்பிய சாம்பியன்ஷிப்ஸ் தொடரில், 10 முறை விளையாட தகுதிப் பெற்று இருக்கிறது. உலகின் தலைசிறந்த அணிகளில் ஸ்பெயினும் ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை.

இதன் நீட்சியாக, கடந்த 2010ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில், இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதன்முறையாக உலகக் கோப்பையை உச்சி முகர்ந்தது ஸ்பெயின் அணி. இதன்மூலம், ஐரோப்பிய கண்டத்திற்கு வெளியே, முதன் முதலாக உலகக் கோப்பையை வென்ற ஐரோப்பிய அணி என்ற பெருமையை பெற்றது ஸ்பெயின். அதுமட்டுமின்றி, உலகக் கோப்பையை இதுவரை வென்றுள்ள எட்டு அணிகளில் ஒன்றாக இடம் பிடித்தது ஸ்பெயின்.

அவர்களது திறமைக்கு மேலும் சிறப்பூட்டும் வகையில் அமைந்தது இரு தொடர்கள். யூரோ 2008 மற்றும் யூரோ 2012 தொடர்களை அடுத்தடுத்து வென்று அசத்தியது. இவ்விரு தொடரிலும் முறையே ஜெர்மனி மற்றும் இத்தாலி அணிகளை இறுதிப் போட்டியில் வீழ்த்தியிருந்தது ஸ்பெயின். ஆக, 2008ல் யூரோ கோப்பை, 2010ல் உலகக் கோப்பை, 2012ல் மீண்டும் யூரோ கோப்பை என கால்பந்து உலகில் சாம்ராஜ்யம் நடத்தியது ஸ்பெயின்.

ஆனால், அதன்பிறகு 2014ல் நடந்த உலகக் கோப்பையில் லீக் சுற்றோடு வெளியேறிய ஸ்பெயின் 23வது இடத்தைப் பிடித்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில், தற்போது 2018 உலகக் கோப்பைக்கு தகுதிப் பெற்று, மீண்டும் கோப்பையை வெல்ல எதிர்நோக்கியுள்ளது ஸ்பெயின்.

2018 உலகக் கோப்பை ஸ்பெயின் அணி வீரர்களின் விவரம்,

கோல் கீப்பர்கள்:

டேவிட் டே கீ, கேபா அரிசாபலகா, பெபெ ரெய்னா

டிஃபென்டர்:

டேனி கர்வாஜல், கெரார்ட் பிக், நாச்சோ, அல்வாரோ ஓட்ரியோசோலா, சேசர் அஸ்பிலிகியூடா, செர்ஜியோ ராமோஸ் (கேப்டன்), நாச்சோ மான்ரியல், ஜோர்டி அல்பா.

மிட் ஃபீல்டர்:

செர்ஜியோ பஸ்கட்ஸ், ஆண்ட்ரஸ் இனிஸ்டா, சால் நிகஸ், கோகே, தியாகோ, மார்கோ அசென்சியோ, டேவிட் சில்வா, இஸ்கோ.

ஃபார்வேட்ஸ்:

ரோட்ரிகோ மொரேனோ, லூகாஸ் வாஸ்கஸ், லாகோ அஸ்பஸ், தியாகோ கோஸ்டா.

இந்த அணியுடன் உலகக் கோப்பையில் களம் காணுகிறது ஸ்பெயின் அணி. இதில், 151 ஆட்டங்களில் ஆடியுள்ள செர்ஜியோ ராமோஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது சர்வதேச கோல்களின் எண்ணிக்கை 13. மற்றொரு முக்கியமான வீரர் ஆண்ட்ரஸ் இனிஸ்டா. 126 ஆட்டங்களில் ஆடியுள்ள இனிஸ்டா 14 கோல்கள் அடித்துள்ளார். இதுதவிர 120 ஆட்டங்களில் ஆடியுள்ள டேவிட் சில்வா 35 கோல்கள் அடித்துள்ளார்.

இனியஸ்டா, டேவிட் சில்வா, செர்ஜியோ ரமோஸ், ஜோர்டி ஆல்பா, ஜெரார்டு பிக்யூ உள்ளிட்டோர் அணிக்கு பக்கபலமாக திகழ்கிறார்கள். அதே சமயம் தகுதி சுற்றில் விளையாடிய ஆல்வரோ மோரட்டா மற்றும் மார்கஸ் அலோன்சோ நீக்கப்பட்டுள்ளனர். முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் அணி, போர்ச்சுகல், மொராக்கோ, ஈரான் ஆகிய அணிகளுடன் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு (2017) நடைபெற்ற உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் மேசிடோனியா அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோற்ற ஸ்பெயின் அணி, இத்தாலியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. தொடர்ந்து லைச்டென்ஸ்டின் அணியை 0-8 என்ற கோல் கணக்கிலும், அல்பானிய அணியை 3-0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது ஸ்பெயின். அதேபோல் இஸ்ரேலை 1-0 என்றும், கோஸ்டா ரிகா அணியை 5-0 என்றும் வீழ்த்திய ஸ்பெயின், 3-3 என ரஷ்யாவுடன் டிரா செய்தது.

இந்தாண்டு நட்பு ரீதியில் நடந்த ஆட்டத்தில் ஜெர்மனியிடம் 1-1 என சமன் செய்த ஸ்பெயின் அணி, 6-1 என அர்ஜென்டினாவை புரட்டி எடுத்தது. தொடர்ந்து சுவிட்சர்லாந்து அணியிடம் 1-1 என டிரா செய்தது ஸ்பெயின்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எந்தப் போட்டியிலும் ஸ்பெயின் தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி, டிரா என மாறி மாறி தோல்வியை தவிர்த்து வருகிறது. இம்முறை எப்படியும் மீண்டும் கோப்பையை கைப்பற்றிவிட வேண்டும் என்று உறுதியாக உள்ள ஸ்பெயின் வீரர்கள், தலைமை பயிற்சியாளர் ஜூலன் மேற்பார்வையில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இளம் வீரர்கள் மற்றும் சீனியர் வீரர்கள் என சரியான கலவையில் இருக்கும் ஸ்பெயின், இந்த உலகக் கோப்பையில் மற்ற அணிகளுக்கு கடும் டஃப் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

×Close
×Close