ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து 2018: பெரிய எதிர்பார்ப்பின்றி களமிறங்கும் ஸ்வீடன்! ஒரு பார்வை

ஆக, போர்ச்சுகல், பிரான்ஸ், இத்தாலி என பலம் வாய்ந்த அணிகளை கடந்தாண்டு வீழ்த்தி இருந்தது ஸ்வீடன். 

ஆசைத் தம்பி

FIFA World Cup Foot Ball 2018: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் நாளை மறுநாள் ஜூன் 14ம் தேதி ரஷ்யாவில் தொடங்குகிறது. சுமார் ஒருமாத காலம் நடக்கும் இந்த தொடர் ஜூலை 15ம் தேதி முடிகிறது.

ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவூதி அரேபியா, தென் கொரியா, எகிப்து, மொரோக்கோ, நைஜீரியா, செனெகல், துனிசியா, கோஸ்டா ரிக்கா, மெக்சிகோ, பனாமா, அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா, பெரு, உருகுவே, பெல்ஜியம், குரோஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ரஷிய, செர்பியா, ஸ்பெயின், சுவீடன், ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட 32 அணிகள் இந்த தொடரில் களமிறங்குகின்றன.

போட்டியை நடத்தும் நாடு என்பதால் ரஷ்யா நேரடியாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. மற்ற 31 அணிகளும் தகுதி சுற்றின் அடிப்படையில் தேர்வாகி உள்ளன.

உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் ஒவ்வொரு அணிகள் குறித்தும் தினம் நாம் இங்கே அலசி வருகிறோம். அதன்படி, இன்று ஸ்வீடன் அணியைப் பற்றி பார்க்கலாம்.

1908ல் தனது முதல் சர்வதேச கால்பந்து போட்டியில் ஆடிய ஸ்வீடன் அணி, நார்வே அணியை 11-3 என அபாரமாக வென்றது. இது தவிர, அதே ஆண்டில் இங்கிலாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய அணிகளுக்கு எதிராக ஸ்வீடன் அனைத்திலும் தோற்றது.

ஸ்வீடன் கால்பந்து அணி முதன் முதலாக 1934ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்றது. இதுவரை 11 உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள ஸ்வீடன் ஆறு முறை ஐரோப்பிய சாம்பியன்ஷிப்ஸ் தொடரில் பங்கேற்றுள்ளது. 1958ல் நடந்த ஃபிபா உலகக் கோப்பையில் இரண்டாம் இடமும், 1950 மற்றும் 1994 உலகக் கோப்பைத் தொடர்களில் மூன்றாம் இடமும் பிடித்தது. உலகக் கோப்பைகளில் ஸ்வீடன் அணியின் சிறந்த செயல்பாடுகள் இதுவே. அதேசமயம், 1948ம் ஆண்டு நடந்த கோடை ஒலிம்பிக்ஸில் தங்கப் பதக்கமும், 1924 மற்றும் 1952 கோடை ஒலிம்பிக்ஸில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளது ஸ்வீடன். மேலும், 1992ல் நடந்த UEFA யூரோ தொடரில் அரையிறுதி வரை முன்னேறியது ஸ்வீடன் கால்பந்து அணி.

ஸ்வீடன் கால்பந்து வரலாற்றிலேயே, கிரேட் பிரிட்டன் அணிக்கு எதிராக ஒலிம்பிக்ஸில் நடந்த போட்டி ஒன்றில் 1-12 என்ற கோல் கணக்கில் தோற்றதே, இன்று வரை அந்த அணியின் மிகப்பெரிய தோல்வியாகும்.

கடந்த 2010 மற்றும் 2014 உலகக் கோப்பைக்கு தகுதி பெறாத ஸ்வீடன் அணி, நடப்பு உலகக் கோப்பையில் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பின்றி களமிறங்குகிறது. இருப்பினும், குறைந்தபட்சம் காலிறுதி சுற்றையாவது அடைந்துவிட வேண்டும் என தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

2018 உலகக் கோப்பை ஸ்வீடன் அணி வீரர்கள் விவரம்,

கோல் கீப்பர்கள்:

ராபின் ஆல்சன், கார்ல்-ஜோஹன் ஜான்சன், கிறிஸ்டோபர் நோர்ட்ஃபெல்ட்

டிஃபென்டர்:

மிகேல் லஸ்டிக், விக்டர் லெண்டலஃப், ஆன்ட்ரியாஸ் க்ராங்விஸ்ட்(கேப்டன்), மார்டின் ஓல்சன், லுட்விக் ஆகஸ்டின்சன், ஃபிலிப் ஹெலாண்டர், எமில் க்ராஃப்த், போண்டஸ் ஜான்சன்.

மிட்ஃபீல்டர்:

செபாஸ்டியன் லார்சன் (துணை கேப்டன்), அல்பின் எக்டல், எமில் ஃபோர்ஸ்பெர்க், குஸ்டவ் ஸ்வென்சன், ஆஸ்கர் ஹில்ஜெல்மார்க், விக்டர் க்ளாசன், மார்க்ஸ் ரோடன், ஜிம்மி டுர்மஸ்

ஃபார்வேர்ட்ஸ்:

மார்கஸ் பெர்க், ஜான் கிடெட்டி, ஓலா டோய்வோனன், ஐசக் கீஸ் தெலின்.

தலைமை பயிற்சியாளர் – ஜேன் ஆண்டர்சன்

துணை மேனேஜர் – பீட்டர் வெட்டர்க்ரென்

கோல் கீப்பிங் பயிற்சியாளர் – மேத்ஸ் எல்ஃப்வெண்டல்

பெர்ஃபாமன்ஸ் மேனேஜர் – பால் பால்சம்

பிசியோதெரபிஸ்ட் – ஜோஹன் சான்ட்பெர்க்

அணி மேலாளர் – லார்ஸ் ரிச்ட்

இப்படி 23 வீரர்களுடனும், ஸ்டாஃப்களுடனும் ரஷ்யா சென்றுள்ளது ஸ்வீடன் அணி.

கடந்தாண்டு (2017) நடைபெற்ற போட்டிகளில் ஸ்வீடன் அணி சில பெரிய அணிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. கடந்தாண்டு தொடக்கத்தில் ஐவரி கோஸ்ட் அணியுடனான முதல் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்ற ஸ்வீடன், ஸ்லோவேகியாவை 6-0 என வென்றது. பின் பெலாரஸ் அணியை 4-0 என வீழ்த்திய ஸ்வீடன், போர்ச்சுக்கலை 2-3 என வீழ்த்தியது. பின் பிரான்ஸ் அணியை 2-1 என்று வீழ்த்திய ஸ்வீடன், பல்கேரியாவிடம் 3-2 என தோற்றது. பின் மீண்டும் பெலாரஸ் அணியை 4-0 என வீழ்த்திய ஸ்வீடன், 8-0 என லூக்ஸம்பெர்க் அணியை பந்தாடியது. அதன்பின் இத்தாலியை 1-0 என வீழ்த்தியது.

ஆக, போர்ச்சுகல், பிரான்ஸ், இத்தாலி என பலம் வாய்ந்த அணிகளை கடந்தாண்டு வீழ்த்தி இருந்தது ஸ்வீடன்.

அதேசமயம், இந்தாண்டு (2018) நடைபெற்ற உலகக் கோப்பை பயிற்சிப் போட்டிகளில் எஸ்டோனியா அணியிடம் 1-1 என டிரா, டென்மார்க் XI அணியிடம் 1-0 என வெற்றி, சிலி அணியிடம் 1-2 என தோல்வி, ரோமானியா அணியிடம் 1-0 என தோல்வி, டென்மார்க், பெரு அணியிடம் 0-0 என டிரா என்று சற்று பின்னடைவாக ஆட்டத்தையே ஸ்வீடன் வெளிப்படுத்தியுள்ளது.

உலகக் கோப்பைத் தொடரில் F பிரிவில் இடம் பெற்றிருக்கும் ஸ்வீடன், ஜெர்மனி, மெக்சிகோ, கொரியா ரிபப்ளிக் அணிகளுடன் மோதுகிறது. கடினமான ஒரு பிரிவில் தான் ஸ்வீடன் சிக்கியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

ஸ்வீடன் மோதும் போட்டி நடைபெறும் நாள்:

ஜூன் 18 – ஸ்வீடன்  vs கொரியா ரிபப்ளிக்

ஜூன் 23 – ஜெர்மனி vs ஸ்வீடன்

ஜூன் 27 – மெக்சிகோ vs ஸ்வீடன்

எமில் ஃபோர்ஸ்பெர்க், விக்டர் லெண்டலஃப், கேப்டன் செபாஸ்டியன் லார்சன் ஆகிய இந்த மூன்று வீரர்களைத் தான் ஸ்வீடன் அணி மலை போல் நம்பியிருக்கிறது. தற்போது ஃபார்மில் தடுமாறிக் கொண்டிருக்கும் ஸ்வீடன், நிச்சயம் உலகக் கோப்பையில் மற்ற அணிகளுக்கு அதிர்ச்சி அளிப்பார்கள் என நம்பலாம். அதற்கான தகுதி அந்த அணிக்கு உள்ளது. உலகின் சிறந்த அணிகளையும் வீழ்த்தும் திறமை அவர்களிடம் இருக்கிறது. இருப்பினும், அதை தொடர்ச்சியாக வெளிப்படுத்தும்பட்சத்தில் காலிறுதி வரை ஸ்வீடன் முன்னேற வாய்ப்புள்ளது என்றே வல்லுனர்கள் கருதுகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

×Close
×Close