ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து 2018: தட்டித் தூக்குவாரா ரொனால்டோ? போர்ச்சுகல் அணி... ஒரு பார்வை!

ரொனால்டோ தான் போர்ச்சுகல் அணியின் யானை பலம்

ஆசைத் தம்பி

FIFA World Cup Foot Ball 2018: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 14-ம் தேதி ரஷ்யாவில் தொடங்குகிறது. சுமார் ஒருமாத காலம் நடக்கும் இந்த தொடர் ஜூலை 15ம் தேதி முடிகிறது.

ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவூதி அரேபியா, தென் கொரியா, எகிப்து, மொரோக்கோ, நைஜீரியா, செனெகல், துனிசியா, கோஸ்டா ரிக்கா, மெக்சிகோ, பனாமா, அர்ஜென்டினா, பிரேசில், கொழும்பியா, பெரு, உருகுவே, பெல்ஜியம், குரோஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ரஷிய, செர்பியா, ஸ்பெயின், சுவீடன், ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட 32 அணிகள் இந்த தொடரில் களமிறங்குகின்றன.

போட்டியை நடத்தும் நாடு என்பதால் ரஷ்யா நேரடியாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. மற்ற 31 அணிகளும் தகுதி சுற்றின் அடிப்படையில் தேர்வாகி உள்ளன.

உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் ஒவ்வொரு அணிகள் குறித்தும் தினம் நாம் இங்கே அலசி வருகிறோம். அதன்படி, இன்று போர்ச்சுகல் அணியைப் பற்றி பார்க்கலாம்.

கால்பந்து உலகில் முதன் முதலாக 1921ம் ஆண்டு அடியெடுத்து வைத்தது போர்ச்சுகல் அணி. ஆனால், இதுவரை ஒரேயொரு பெரிய தொடரை மட்டும் தான் அந்த அணி வென்றுள்ளது. அதுவும் இத்தனை வருடங்கள் கழித்து, கடந்த 2016ம் ஆண்டில் தான் UEFA ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரில் பட்டம் வென்றது. இதைத் தவிர வேறு எந்தவிதமான பெரிய தொடர்களையும் போர்ச்சுகல் வென்றதில்லை.

முதன் முதலாக உலகக் கோப்பை தொடங்கப்பட்ட ஆண்டு 1930. அப்போது போர்ச்சுகல் அணி அதில் கலந்து கொள்ளவில்லை. அதன்பின், 1934 முதல் 1962ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக எந்த உலகக் கோப்பை தொடருக்கும் தகுதிப் பெறவில்லை. 1966ம் ஆண்டு தான் முதன் முறையாக உலகக் கோப்பைக்குள் நுழைந்தது. அதேசமயம், சிறப்பாக ஆடிய போர்ச்சுகல் தனது முதல் தொடரிலேயே மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தியது. அதன்பிறகு மீண்டும் 1982 வரை தகுதி பெறாத போர்ச்சுகல், 1986 உலகக் கோப்பையில் 17வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தது.

அதன்பிறகு 2002 ஆண்டு முதல் நடப்பு 2018 உலகக் கோப்பை வரை தொடர்ச்சியாக, அனைத்து உலகக் கோப்பை தொடரிலும் தவறாமல் போர்ச்சுகல் அணி தேர்வாகி வருகிறது. அதில் 2006 உலகக் கோப்பையில் நான்காம் இடம் பிடித்தது. இப்போது வரை இவ்வளவு தான் இந்த அணியின் முன்னேற்றம். அதாவது, உலகக் கோப்பைக்கே தகுதிப் பெறாமல் இருந்த நிலையில் இருந்து, இப்போது தொடர்ச்சியாக தகுதிப் பெற்று வருகிறது.

நடப்பு 2018 உலகக் கோப்பைக்கான போர்ச்சுகல் அணி வீரர்கள் பட்டியல் குறித்து பார்ப்போம்,

கோல் கீப்பர்கள்:

ரூய் பாட்ரிசியோ, ஆந்தனி லோப்ஸ், பெடோ

டிஃபென்டர்:

புருனோ ஆல்வ்ஸ், பேபே, ரபெல் குரைரோ, ஜோஸ் ஃபோன்டே, ருபன் டயஸ், ரிகார்டோ பெரைரா, மேரியோ ரூய், செட்ரிக்.

மிட் ஃபீல்டர்:

மானுவெல் பெர்னாண்டஸ், ஜோ மவுடின்ஹோ, ஜோ மேரியோ, பெர்னார்டோ சில்வா, வில்லியம் கார்வால்ஹோ, புருனோ ஃபெர்னாண்டஸ், ஆட்ரியன் சில்வா.

ஃபார்வேட்ஸ்:

கிறிஸ்டியானோ ரொனால்டோ (கேப்டன்), ஆண்ட்ரே சில்வா, கோன்காலோ கிட்ஸ், கெல்சன் மார்டின்ஸ், ரிக்கார்டோ குரேஸ்மா.

இந்த படையுடன் தான் போர்ச்சுகல் அணி இம்முறை களம் காணுகிறது. கிரிஸ்டியானோ ரொனால்டோ…. இன்றைய கால்பந்து உலகின் டாப் வீரர்களில் ஒருவர் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்களின் ஹீரோ. ஏன்! பல சர்வதேச கால்பந்து வீரர்களின் ஹீரோவும் கூட…
சர்வதேச கால்பந்து போட்டிகளில் 81 கோல்கள் அடித்து முதலிடத்தில் இருப்பது ரொனால்டோ தான். மெஸ்ஸி 64 கோல்கள் அடித்துள்ளார்.

லயோனல் மெஸ்ஸி vs கிறிஸ்டியானோ ரொனால்டோ என்பது தான் இன்றைய கால்பந்து உலகின் உச்சம். அப்படிப்பட்ட ரொனால்டோ தான் போர்ச்சுகல் அணியின் யானை பலம். அவர் ஒருவர் தான் அணியே என்று கூட கூறலாம். இவருக்காக மட்டுமே போர்ச்சுகல் அணி விளையாடும் போட்டிகளை பார்க்க ரசிகர்கள் டிவி முன்பு குவியுவார்கள் என்பது உண்மை!.

ஆனால், உலகக் கோப்பை கைப்பற்ற ரொனால்டோ மட்டும் போதுமா? கடந்த இரு ஆண்டுகளில் போர்ச்சுகல் விளையாடியுள்ள போட்டிகளை கூர்ந்து கவனித்தால், பெரும்பாலும் பெரிய அணிகளுடன் தோல்வியையே தழுவியுள்ளது. அதேசமயம், சிறிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பெரும்பாலும் வெற்றிப் பெற்றுவிடுகிறது.

2018 உலகக் கோப்பையில் ‘பி’ பிரிவில் போர்ச்சுகல் இடம்பெற்றுள்ளது. இதில் ஸ்பெயின், மொராக்கோ, ஈரான் உள்ளிட்ட அணிகள் இடம் பெற்றுள்ளன. இப்பிரிவில் ஸ்பெயின் அணி போர்ச்சுகலுக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மற்றொரு பாசிட்டிவான விஷயம் என்னவெனில், போர்ச்சுகல் அணியின் கோச் பெர்னாண்டோ சாண்டோஸ். இவரது பயிற்சியில் போர்ச்சுகல் அணி தடுப்பாட்டத்தில் சிறப்பாக ஆடுகிறது என வல்லுனர்கள் கூறுகின்றனர்.

கடந்த 2ம் தேதி நடந்த உலகக் கோப்பை பயிற்சிப் போட்டியில் பெல்ஜியம் அணிக்கு எதிராக டிரா செய்தது போர்ச்சுகல். அதேசமயம், மார்ச் மாதம் நடந்த நெதர்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் 0-3 என்ற கோல் கணக்கில் தோற்றுள்ளது போர்ச்சுகல். ஆக, தனியொரு வீரரை நம்பியிருக்காமல், 2016ல் UEFA ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரை ஒரு அணியாக இணைந்து போராடி வென்றது போல், இம்முறையும் போராடினால் போர்ச்சுகல் அணி ரொனால்டோ என்கிற லாஜிக்கை தாண்டி மேஜிக் நிகழ்த்தலாம்!.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close