ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து 2018: சோகத்தில் போட்டியை நடத்தும் ரஷ்ய ரசிகர்கள்

ரஷ்யா தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது

ஆசைத் தம்பி

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 14-ம் தேதி ரஷ்யாவில் தொடங்குகிறது. சுமார் ஒருமாத காலம் நடக்கும் இந்த தொடர் ஜூலை 15ம் தேதி முடிகிறது.

ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவூதி அரேபியா, தென் கொரியா, எகிப்து, மொரோக்கோ, நைஜீரியா, செனெகல், துனிசியா, கோஸ்டா ரிக்கா, மெக்சிகோ, பனாமா, அர்ஜென்டினா, பிரேசில், கொழும்பியா, பெரு, உருகுவே, பெல்ஜியம், குரோஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ரஷிய, செர்பியா, ஸ்பெயின், சுவீடன், ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட 32 அணிகள் இந்த தொடரில் களமிறங்குகின்றன.

போட்டியை நடத்தும் நாடு என்பதால் ரஷ்யா நேரடியாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. மற்ற 31 அணிகளும் தகுதி சுற்றின் அடிப்படையில் தேர்வாகி உள்ளன.

உலகக் கோப்பை தொடரின் ஆட்டங்கள் மாஸ்கோ லூஸ்னிக்கி, ஸ்பார்டக், செயின்ட் பீட்டர்ஸ்பர்க், சோச்சி பிஷ்ட் ஒலிம்பிக் மைதானம், சமரா கோஸ்மோஸ், ரோஸ்டவ், நிஷ்னி நோவ்கோரோட், சரன்ஸ்க், யெகாடெரின்பர்க், கலினின்கிராட், வோல்கோகிராட், கசான் ஆகிய 12 மைதானங்களில் நடைபெறுகிறது. இதில் லூஸ்னிக்கி, யெகாடெரின்பர்க், சோச்சி பிஷ்ட் ஒலிம்பிக் மைதானம் ஆகிய மைதானங்கள் புனரமைக்கப்பட்டவையாகும். மற்ற 9 மைதானங்களும் புதிதாக கட்டப்பட்டுள்ளன. மைதான செலவுக்காக மட்டும் சுமார் ரூ.80 ஆயிரம் கோடியை ரஷ்யா செலவழித்துள்ளது.

இந்த தொடரின் மொத்த பரிசுத்தொகை சுமார் ரூ.2,700 கோடி ஆகும். இது கடந்த ஆண்டைவிட 12 சதவிகிதம் அதிகம். சாம்பியன் பட்டம் வெல்லும் அணி, ரூ.257 கோடியை தட்டிச் செல்லும்.

ஆனால், சோகம் என்னவெனில் போட்டியை நடத்தும் ரஷ்யா தொடர் தோல்விகளை சந்தித்து வருவது தான். உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், ரஷ்யா ஆஸ்திரியாவை எதிர்கொண்டது. இப்போட்டியில் 0-1 என ரஷ்யா தோல்வியடைந்தது. போட்டியை நடத்தும் ரஷியா பயிற்சி ஆட்டத்தில் தோல்வியடைந்தது அந்நாட்டு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் ஆஸ்திரியாவின் Alessandro Schopf’s அட்டகாசமான கோல் ஒன்றை அடிக்க அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது. ஆனால், அதன் பின் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. போட்டியை நடத்தும் ரஷ்யாவால் இறுதிவரை ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

இப்போட்டியில் ஆஸ்திரிய அணி பந்தை 51% தன் வசம் வைத்து இருந்தது. ஆனால், ரஷ்யா 49 சதவிகிதமே பந்தை தன் வசம் வைத்திருந்தது. அதேபோல் ஆஸ்திரியா 14 ஷாட்களை அடிக்க, ரஷ்யாவோ வெறும் 4 ஷாட்களை மட்டும் அடித்தது.

அதில் மேலும் சோகம் என்னவெனில், இலக்கை நோக்கி ஆஸ்திரியா அடித்த ஷாட்கள் 4. ஆனால், ரஷ்யா அப்படி ஒரு ஷாட்டை கூட அடிக்கவில்லை. ஆஸ்திரியா நான்கு கார்னர்ஸ் எடுக்க, ரஷ்யா 6 கார்னர்ஸ் எடுத்தது. ஆஸ்திரியா 5 ஃபவுல் அடிக்க, அதில் மட்டும் ரஷ்யா முந்திக் கொண்டது. மொத்தம் 11 ஃபவுல்கள் அடித்தது ரஷ்யா. அதுமட்டுமின்றி, ரஷ்யா தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த நான்கு போட்டிகளில் 10 கோல்களை விட்டுக்கொடுத்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.

மொத்தம் 14,500 ரசிகர்கள் இப்போட்டியை நேரில் கண்டுகளித்தனர்.

மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் ஜப்பான் – கானா அணிகள் மோதின. இதில் ஜப்பான 0-2 எனத் தோல்வியைத் தழுவியது. பெரு – ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் பெரு அணி 2 – 0 என்ற கோல் கணக்கில் வென்றது.

பனாமா – நார்தர்ன் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி டிராவில் முடிய, அர்ஜென்டினா 4 – 0 என்ற கோல் கணக்கில் ஹைதி அணியை பந்தாடியது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

×Close
×Close