ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து 2018: மீண்டும் பவர்ஃபுல்லான அணியாக உருவெடுக்குமா போலந்து?

ஆசைத் தம்பி

FIFA World Cup Foot Ball 2018: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 14-ம் தேதி ரஷ்யாவில் தொடங்குகிறது. சுமார் ஒருமாத காலம் நடக்கும் இந்த தொடர் ஜூலை 15ம் தேதி முடிகிறது.

ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவூதி அரேபியா, தென் கொரியா, எகிப்து, மொரோக்கோ, நைஜீரியா, செனெகல், துனிசியா, கோஸ்டா ரிக்கா, மெக்சிகோ, பனாமா, அர்ஜென்டினா, பிரேசில், கொழும்பியா, பெரு, உருகுவே, பெல்ஜியம், குரோஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ரஷிய, செர்பியா, ஸ்பெயின், சுவீடன், ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட 32 அணிகள் இந்த தொடரில் களமிறங்குகின்றன.

போட்டியை நடத்தும் நாடு என்பதால் ரஷ்யா நேரடியாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. மற்ற 31 அணிகளும் தகுதி சுற்றின் அடிப்படையில் தேர்வாகி உள்ளன.

உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் ஒவ்வொரு அணிகள் குறித்தும் தினம் நாம் இங்கே அலசி வருகிறோம். அதன்படி, இன்று போலந்து அணியைப் பற்றி பார்க்கலாம்.

போலந்து தேசிய கால்பந்து கூட்டமைப்பு 20 டிசம்பர் 1919ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன்பிறகு தனது முதல் சர்வதேச கால்பந்து போட்டியை 18 டிசம்பர் 1921ம் ஆண்டு விளையாடியது போலந்து அணி. புடாபெஸ்ட்டில் நடந்த அப்போட்டியில் ஹங்கேரி அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோற்றது போலந்து. அதன்பின், அவர்களது முதல் சர்வதேச வெற்றி என்பது 28 மே 1922ல் தான் கிடைத்தது. ஸ்டாக்ஹோல்மில் நடந்த போட்டியில் சுவீடன் அணிக்கு எதிராக 2-1 என்ற கோல்கள் கணக்கில் போலந்து வென்றது.

அதேபோல், 1937ல் நடந்த உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளில் யுகோஸ்லேவியா அணியை 4-0 என்று வென்ற போலந்து, 1-0 என்ற கோல் கணக்கில் அடுத்த போட்டியில் அதே யுகோஸ்லேவியா அணிக்கு எதிராக தோற்றது. இருப்பினும், 1938ல் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கு முதன் முதலாக தகுதிப் பெற்று வரலாறு படைத்தது போலந்து கால்பந்து அணி.

ஆனால், அதன்பிறகு 1974ம் ஆண்டு தான் உலகக் கோப்பைக்கு தகுதிப் பெற்றது போலந்து. அந்த தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய போலந்து, ஜெர்மனியிடம் 0-1 என தோற்றது. இருப்பினும் பிரேசிலை 1-0 என வீழ்த்தி மூன்றாம் இடத்தைப் பிடித்தது. செக்ரோஸ் லாடோ எனும் வீரர் 7 கோல்கள் அடித்ததற்காக கோல்டன் பூட் வென்றார்.

அதற்கு பின் 1982ல் நடந்த உலகக் கோப்பையிலும் போலந்து அணி மூன்றாம் இடத்தைப் பிடித்தது. அதில் பிரான்ஸை 3-2 என்று வீழ்த்தி மூன்றாம் இடம் பிடித்தது. அதுமட்டுமின்றி, 1972ல் முனிச்சில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் தொடரில் போலந்து அணி தங்கப் பதக்கம் வென்றது. அதன்பின் 1976 மற்றும் 1992ல் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் தொடர்களில் வெள்ளிப்பதக்கம் வென்றது போலந்து. ஃபிபா அங்கீகரிக்கும் மற்றொரு முக்கிய தொடரான UEFA ஐரோப்பிய சாம்பியன்ஷிப்ஸ் தொடரில் விளையாட முதன் முதலாக 2008ல் தகுதிப் பெற்றது.

இப்படி கலவையான கால்பந்து அணியாக வலம் வரும் போலந்து, இந்த உலகக் கோப்பையை கொஞ்சம் அதிகமாகவே டார்கெட் வைத்துள்ளது. அதுகுறித்து தொடர்ந்து விவாதிப்போம்.

2018 உலகக் கோப்பை போலந்து அணி வீரர்கள் விவரம்,

கோல் கீப்பர்கள்:

வோஜ்சீக் சிக்ஸ்னி, லூகாஸ் ஃபேபியான்ஸ்கி, பார்டோஸ் பியால்கௌஸ்கி

டிஃபென்டர்:

மைக்கேல் பஸ்டன், ஆர்தர் ஜெட்ர்ஜெஸ்கி, தியாகோ சியாநெக், மசிஜ் ரைபஸ், கமில் க்ளிக், லூகாஸ் பிஸ்செக், ஜேன் பெட்னாரெக், பார்டோஸ் பெரெஸ்நைஸ்கி,

மிட் ஃபீல்டர்:

ஜேசக் கோரல்ஸ்கி, கரோல் லினெட்டி, ஜெக்ரோஸ் ரைசோவியக், கமில் க்ரோசிகி, ஜேகுப் பிளாஸ்சைகௌஸ்கி, ஸ்லாவோமிர் பெஸ்கோ, பியோடர் சீலின்ஸ்கி, ரஃபல் குர்சவா.

ஃபார்வேர்ட்ஸ்:

ஆர்காடியஸ் மிலிக், ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி, லூகாஸ் தியோடர்சைக், டேவிட் கௌநாஸ்கி.

போலந்து அணி இந்த உலகக் கோப்பையில் ஹெச் பிரிவில் இடம் பெற்றுள்ளது. அதில், ஜப்பான், செனகல், கொலம்பியா உள்ளிட்ட அணிகள் இடம் பெற்றுள்ளன.

போலந்து அணியின் கேப்டன் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி, இதுவரை 93 ஆட்டங்களில் ஆடி, 52 கோல்கள் அடித்துள்ளார். தகுதிச் சுற்றில் 16 கோல்களை அடித்துள்ளார். இதுவரை ஒருமுறை கூட பைனல் போகாத போலந்து எப்படி ஃபிபா தரவரிசையில் 8வது இடத்தில் உள்ளது என்ற சந்தேகம் பலரும் எழலாம். பிபாவின் சட்டங்களில் உள்ள ஓட்டைகளை போலந்து சரியாக பயன்படுத்திக் கொண்டது. 2016 முதல் எந்த நாட்டுடனும் நட்பு போட்டிகளில் அது பங்கேற்கவில்லை. அதனால், உலகக் கோப்பைக்கான அணிகள் தரவரிசையின்போது அது 6வது இடத்தில் இருந்தது. அதனால்தான் மிகவும் சுலபமான பிரிவில் அது இடம்பெற்றுள்ளது. ஆனாலும் கொலம்பியா அணி போலந்துக்கு கடும் சவாலாகவே இருக்கும். போலந்து அணிக்கு இந்த உலகக் கோப்பையில் உள்ள மிகப் பெரிய சவால், லெவான்டோஸ்கியைவிட, அணி மிகப் பெரிய என்பதை நிரூபிப்பது ஆகும். அதாவது போலந்து அணி மிகவும் வலிமையான அணி என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் மற்ற வீரர்கள் உள்ளனர்.

2017ல் நடந்த தகுதிச் சுற்றுப் போட்டிகளில் போலந்து அணி, மோன்டேனேகரோ, ரோமானியா, கஜகஸ்தான், அர்மேனியா உள்ளிட்ட அணிகளை வீழ்த்தியது. ஆனால், மெக்சிகோ, டென்மார்க் ஆகிய அணிகளுடன் தோற்றது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நட்பு ரீதியிலான போட்டியில் நைஜீரியாவிடம் 0-1 என்று தோற்ற போலந்து, தென் கொரியாவை 3-2 என வீழ்த்தியது.

ஜூன் 19 அன்று, உலகக் கோப்பையில் தனது போட்டியில் செனகல் அணியை எதிர்கொள்கிறது போலந்து.

லீக் சுற்றில் நிச்சயம் போலந்து டாப் பொஷிசனுக்கு வரும் என கணிக்கப்படுகிறது. ஆனால், அடுத்தடுத்த சுற்றுகளில் பெரிய அணிகளை எதிர்கொள்ளும் போதுதான் போலந்து தடுமாறும். சில குறிப்பிட்ட வீரர்களை மட்டுமே முழுமையாக நம்பியிருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளின் லிஸ்டில் போலந்து இல்லை என்பது உண்மை தான். இப்போது உள்ள ஃபார்மை வைத்து பார்க்கும் பொழுது நாமும் அதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டியிருக்கிறது.

இருப்பினும், அவற்றை மீறி முடிந்தவரை உலகக் கோப்பையில் போலந்து ஜொலிக்க வேண்டும் என்றும், 1970 – 1980,90 காலக்கட்டங்களில் ஆதிக்கம் செலுத்தியது போல் மீண்டும் போலந்து அணி விஸ்வரூபம் எடுக்க வேண்டும் என்பதே அந்நாட்டு ரசிகர்களின் பேராவலாக உள்ளது. தலைமை பயிற்சியாளர் ஆடம் நவாய்காவின் போலந்து அணி, ரசிகர்களின் இந்த குறைந்தபட்ச எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close