தொடங்குகிறது கால்பந்து உலகக் கோப்பை: ஒரு பார்வை

ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை

ஆசைத் தம்பி

கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவான ஐபிஎல், முடியும் தருவாயை எட்டியுள்ளது. இதற்கு பின் விளையாட்டுப் பிரியர்கள் அதிகம் உச்சரிக்கப் போகும் வார்த்தை ஃபுட்பால்… இந்தியாவில், மட்டுமல்ல.. உலகம் முழுவதும் இந்த வார்த்தை உரக்க உச்சரிக்கப் போகிறது.

கால்பந்து ரசிகர்களின் மாபெரும் திருவிழாவான ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 14-ம் தேதி ரஷ்யாவில் தொடங்குகிறது. சுமார் ஒருமாத காலம் நடக்கும் இந்த கால்பந்து போர் ஜூலை 15ம் தேதி முடிகிறது.

ஐரோப்பா கண்டத்தில் 12 ஆண்டுகள் கழித்து நடக்கும் கால்பந்து உலகக் கோப்பை இதுதான். இதற்கு முன்னதாக, 2006ம் ஆண்டு, ஜெர்மனியில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றது.

போட்டியை நடத்தும் நாடு என்பதால் ரஷ்யா நேரடியாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. மற்ற 31 அணிகளும் தகுதி சுற்றின் அடிப்படையில் தேர்வாகி உள்ளன. 32 நாடுகளில் 20 நாடுகள் கடந்த 2014 உலகக் கோப்பையில் விளையாடிய அணிகளே. ஐஸ்லாந்து, பனாமா உள்ளிட்ட அணிகள் ஃபிபா உலகக் கோப்பை தொடருக்கு முதன்முதலாக தேர்வாகி உள்ளன.

மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் 64 ஆட்டங்கள் நடக்கிறது. இறுதிப் போட்டி மாஸ்கோவில் உள்ள லுழ்நிகி ஸ்டேடியத்தில் ஜுலை 15ம் தேதி நடக்கிறது.

2018 மற்றும் 2022ம் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான ஏல நடைமுறைகளை 2008ம் ஆண்டிலேயே ஃபிபா தொடங்கிவிட்டது. மொத்தம் 9 நாடுகள் இந்த ஏலத்தில் கலந்து கொண்டன. இதில், மெக்சிகோ தானாகவே பின்வாங்கிக் கொண்டது. இந்தோனேசியாவின் விண்ணப்பத்தை ஃபிபாவே நிராகரித்துவிட்டது. இறுதியில் பலத்த போட்டிக்கு இடையே, ரஷியா தொடரை நடத்தும் உரிமையை கைப்பற்றியது.

உலகக் கோப்பை நடத்தும் உரிமையை ரஷ்யா பெற்ற பின், அந்த நாட்டுக்கு ஆதரவாக ஒட்டளிக்க செயற்குழுவில் உள்ள ஃபிபா உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக இங்கிலாந்து பகிரங்கமாக குற்றம் சாட்டியது. ரஷ்யாவுக்கு போட்டியை நடத்தும் உரிமையை வழங்குவது என்று ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்ததாகவும் புகார் கூறியது. ஆனால் இவை அனைத்துக்கும் எந்தவித ஆதாரமும் இல்லை என பின்னர் ஃபிபா கூறிவிட்டது.

ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவூதி அரேபியா, தென் கொரியா, எகிப்து, மொரோக்கோ, நைஜீரியா, செனெகல், துனிசியா, கோஸ்டா ரிக்கா, மெக்சிகோ, பனாமா, அர்ஜென்டினா, பிரேசில், கொழும்பியா, பெரு, உருகுவே, பெல்ஜியம், குரோஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ரஷிய, செர்பியா, ஸ்பெயின், சுவீடன், ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட 32 அணிகள் இந்த தொடரில் களமிறங்குகின்றன.

உலகக் கோப்பை தொடரின் ஆட்டங்கள் மாஸ்கோ லூஸ்னிக்கி, ஸ்பார்டக், செயின்ட் பீட்டர்ஸ்பர்க், சோச்சி பிஷ்ட் ஒலிம்பிக் மைதானம், சமரா கோஸ்மோஸ், ரோஸ்டவ், நிஷ்னி நோவ்கோரோட், சரன்ஸ்க், யெகாடெரின்பர்க், கலினின்கிராட், வோல்கோகிராட், கசான் ஆகிய 12 மைதானங்களில் நடைபெறுகிறது. இதில் லூஸ்னிக்கி, யெகாடெரின்பர்க், சோச்சி பிஷ்ட் ஒலிம்பிக் மைதானம் ஆகிய மைதானங்கள் புனரமைக்கப்பட்டவையாகும். மற்ற 9 மைதானங்களும் புதிதாக கட்டப்பட்டுள்ளன. மைதான செலவுக்காக மட்டும் சுமார் ரூ.80 ஆயிரம் கோடியை ரஷ்யா செலவழித்துள்ளது.

ஒவ்வொரு அணியும் 35 வீரர்கள் அடங்கிய தங்களது முதற்கட்ட அணி பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்.
அந்த முதற்கட்ட பட்டியலில் இருந்து 23 வீரர்கள் கொண்ட இறுதிப் பட்டியலை அந்தந்த அணி நிர்வாகம் சமர்ப்பிக்க வேண்டும். இறுதிப் பட்டியலில் உள்ள வீரர்களில் யாராவது ஒருவருக்கு மிகத் தீவிரமான காயம் ஏற்பட்டால், போட்டி தொடங்குவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே தெரிவித்துவிட வேண்டும். மாற்று வீரர், முதற்கட்ட அணியில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.

இந்த உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்கும் 32 அணிகளும் மொத்தம் எட்டு குரூப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குரூப்பிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன.

எகிப்து அணி 28 வருடங்களுக்கு பிறகு இம்முறைதான் கால்பந்து உலகக் கோப்பையில் விளையாடத் தகுதிப் பெற்றுள்ளது. கடைசியாக அந்த அணி 1990-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் விளையாடியிருந்தது. இதேபோல் மொராக்கோ அணி 1998-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் களமிறங்குகிறது. பெரு அணி 36 வருடங்களுக்கு பிறகு களம் இறங்குகிறது.

2002-ம் ஆண்டு காலிறுதிப் போட்டி வரை முன்னேற்றம் கண்டிருந்த செனகல் அணி 2-வது முறையாக தற்போதுதான் உலகக் கோப்பைக்கு தகுதிப் பெற்றுள்ளது. நார்டிக் நாடுகளை சேர்ந்த டென்மார்க், ஐஸ்லாந்து, சுவீடன் ஆகியவையும், அரபு நாடுகளான எகிப்து, சவுதி அரேபியா, துனிசியா, மொராக்கோ ஆகியவை கூட்டாக தகுதி பெற்றுள்ளது இதுவே முதன்முறையாகும்.

அதேசமயம், நான்கு முறை சாம்பியனான இத்தாலி இந்த உலகக்கோப்பை தொடருக்கு தகுதிப் பெறவில்லை என்பது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமான விஷயம் தான்.

இந்த தொடரின் மொத்த பரிசுத்தொகை சுமார் ரூ.2,700 கோடி ஆகும். இது கடந்த ஆண்டைவிட 12 சதவிகிதம் அதிகம். சாம்பியன் பட்டம் வெல்லும் அணி, ரூ.257 கோடியை தட்டிச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

×Close
×Close