இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் நடைபெற்றது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிய முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் எடுத்து ஆல் - அவுட் ஆனது. பின்பு களமிறங்கிய இந்திய அணி 244 ரன்கள் சேர்த்து ஆல் - அவுட் ஆனது. மூன்றாவது நாள் ஆட்டத்தில் 2ம் இன்னிங்ஸை ஆட தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.
அதன் பின் 4-ம் நாள் பாதியில் களமிறங்கிய இந்திய அணி ஒரு சிறப்பான தொடக்கத்தையே கொடுத்திருந்தது. ஆனால் விக்கெட்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக சரிந்தன. இருந்த போதிலும் அணியை மீட்க கேப்டன் ரஹானேவும், புஜாராவும் உள்ளனர் என நினைக்கும் போது, 5-ம் நாள் ஆட்டத்தில் முதல் செஷனில் ரஹானே விக்கெட்டை பறி கொடுத்து பெவிலியன் நோக்கி நடக்க ஆரம்பித்தார். பின்னர் களமிறங்கிய ரிஷப் பந்த் (97 ரன்கள்) அதிரடி காட்ட ஆரம்பித்தார். மறுமுனையில் நின்று கொண்டிருந்த புஜாரா வழக்கம் போல் நிதானமாக ஆடிக் கொண்டிருந்தார். ரிஷப் பந்தின் அதிரடியில் இந்திய அணிக்கு வெற்றிக்கான வாய்ப்பு கொஞ்சம் அருகிலே இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவின் நேதன் வீசிய பந்தை ஆப் சைடில் அடிக்க முயற்சித்த ரிஷப் பந்த் பேட் கம்மின்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
மறுமுனையில் நிதானமாக ஆடி கொண்டிருந்த புஜாரா, இம்முறை அதிரடி காட்ட துவங்கி இருந்தார். ஆடுகளத்தில் அதிக நேரம் ஆடிய புஜாரா(77ரன்கள்) ஹேசல் வுட் வீசிய பந்தில் க்ளீன் போல்ட் ஆனார். இது போட்டியை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்களுக்கு மிகுந்த வேதனை அளித்தது. அப்போது மறுமுனையில் நின்று கொண்டிருந்த ஹனுமா விஹாரி என்ன செய்வதென்று அறியாமல் விழி பிதுங்கினார். ஆனால் ஹனுமா விஹாரியும் பின்னர் களமிறங்கிய சுழற் பந்து வீச்சளர் அஸ்வினும் ஆடிய ஆட்டமே பார்வையாளர்களின் அதிக கவனத்தை பெற்றது.
தொடையில் தசைப்பிடிப்புடன் விஹாரி ஒரு முனையிலும், தீராத முதுகு வலியுடன் அஸ்வின் மறுமுனையிலும் ஆட்டத்தை நகர்த்த துவங்கினர். இப்படி வலியுடன் ஒரு புறம் ஆடிக் கொண்டிருந்த வீரர்களுக்கு ஆஸ்திரேலிய பந்து வீச்சளர்கள் மறு புறம் வேகப் பந்துகள் மூலம் தாக்குதல் நடத்தி கொண்டிருந்தனர்.
தேநீர் இடைவேளைக்குப் பின் பேட் கம்மின்ஸ் வீசிய பந்தை அஸ்வின் அடிக்க முயன்று விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். நடுவரும் அவுட் கொடுத்திருந்தார். ஆனால் அஸ்வின் கேட்ட ரிவியூவில் பந்து அவரது மணிக்கட்டை உரசி சென்றது தெரிய வந்தது. அஸ்வின் மீண்டும் ஆடுகளத்தில் நிதான ஆட்டத்தை தொடர்ந்தார். இவர்களின் நிதானமான ஆட்டம் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களுக்கு ஒரு கட்டத்தில் எரிச்சலை அதிகரித்தது. எனவே அவர்கள் வீசிய பந்துகள் இரு வீரர்களையும் பதம் பார்க்கத் தொடங்கின. அதிலும் ஜோஷ் ஹேசல்வுட் வீசிய பந்துகள் அஸ்வினின் வலது தோள் பட்டை, மார்பெலும்பு, என உடலில் அங்கங்கே காயங்களை ஏற்பத்தியது. ஆனாலும் ஹேசல்வுட்டால் அஸ்வினை அசைக்க கூட முடியவில்லை. விஹாரியோ ராகுல் டிராவிட் பாணியை கடைபிடித்துக் கொண்டிருந்தார். அஸ்வின் கூட சில பவுண்டரிகளை அடித்து ரன்கள் சேர்த்தார். ஆனால் விஹாரி கட்டையை போட்டு பவுலர்களுக்கு கடுப்பேத்தினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.