இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட ஐந்து இந்திய வீரர்கள் கோவிட்- 19 மேலாண்மை வழிமுறைகளைத் தாண்டி உணவகத்தில் உணவருந்தியதன் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் உறுதிப்படுத்தியது.
ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மெல்போனில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 7-ஆம் தேதி சிட்னியில் நடைபெற உள்ள நிலையில், இரு நாட்டு அணி வீரர்களும் தற்போது மெல்போர்னில் தங்கியுள்ளனர்.
ரோஹித் சர்மா, ரிஷாப் பந்த், சுப்மான் கில், பிருத்வி ஷா, நவ்தீப் சைனி ஆகியோர் மெல்போர்னில் உள்ள ஒரு உட்புற உணவகத்தில் உணவருந்துவது தொடர்பாக சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலானது. இந்த வீடியோவை முதலில் பகிர்ந்த இந்திய ரசிகர் ஒருவர், " இந்திய அணி வீரர்களை சந்தித்து மகிழ்ச்சியடைந்தேன். குறிப்பாக, ரிஷாப் பந்த் அரவணைப்பையும் நான் பெற்றேன்" என்று குறிப்பிட்டார்.
ரிஷாப் பந்த்- ன் இந்த செயல் கோவிட்- 19 வழிமுறைகளை மீறுவதாக அமைகிறது என்று சமூக ஊடகங்களில் கருத்து பரவியதை அடுத்து, ரிஷாப் பந்த்திடம் இருந்து நான் அரவணைப்பைப் பெற வில்லை, இந்த கருத்தை நான் திரும்ப பெறுகிறேன்" என்று தெரிவித்தார்.
இந்திய அணி வீரர்களின் நடத்தை குறித்து மேற்படி விசாரணை தேவையில்லை என்று பி.சி.சி.ஐ தெரிவித்திருந்தது. இருப்பினும், இந்திய அணி வீரர்களின் நடத்தைக் குறித்து விசாரனை நடத்தி முடிக்கப்பட்டதாகவும், அவர்கள் உரிய முறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் தனது அறிக்கையில் தெரிவித்தது.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகத்தின் கோவிட்- 19 மேலாண்மை நெறிமுறைகளின்படி, வீரர்கள் உட்புற உணவகங்களில் சாப்பிட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று புரிந்து கொள்ளப்படுகிறது. அவர்கள் விளையாடும் நகரங்களில் பொது போக்குவரத்தை பயன்படுத்துவும் அனுமதிக்கப்படுவதில்லை.
முன்னதாக 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும், இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் சேர்க்கப்பட்டார். காயம் காரணமாக உமேஷ் யாதவ் அணியிலிருந்து வெளியேறியதை அடுத்து, நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil