Ecuador vs Qatar Tamil News: 22-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா அரபு நாடான கத்தாரில் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 18 ஆம் தேதி வரை நடக்கிறது. தற்போது இந்த தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை சாம்பியனான பிரேசில், நடப்பு சாம்பியன் பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து, அர்ஜென்டினா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, டென்மார்க், போர்ச்சுகல், உருகுவே, பெல்ஜியம் உள்ளிட்ட 32 அணிகள் களமாடுகின்றன. இந்த அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் 16 அணிகள் நாக்-அவுட் என்ற 2-வது சுற்றுக்குள் நுழையும்.
இந்நிலையில், உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் ரசிகர்கள் ஓரினச்சேர்க்கை கோஷமிட்டதற்காக ஈக்வடார் மீது ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக ஃபிஃபா தெரிவித்துள்ளது.
முன்னதாக, உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் தகுதியற்ற ஒரு வீரரை களமிறக்கியதாக சிலி அணி ஈக்வடார் அணியின் மீது புகார் கூறியது. இதையடுத்து, ஈக்வடார் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு இருந்தது. எனினும், அந்த அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அடுத்த உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக்கான புள்ளிகளில் இருந்து விலக்கு பெற்றனர். இதனால், அந்த அணியினர் கத்தாரில் போட்டியிட அனுமதிக்கப்பட்டனர். மேலும் சர்ச்சையை தவிர்க்கும் வகையில் வீரர் பைரன் காஸ்டிலோவை அணியில் இருந்து நீக்கினர்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கத்தாருக்கு எதிரான ஈக்வடாரின் தொடக்க ஆட்டத்தில், மஞ்சள் ஆடை அணிந்த அவர்களது திரளான ரசிகர்களில் சிலர் சிலி அணியினருக்கு எதிராக ஓரினச்சேர்க்கை கோஷத்தைப் பாடினர். இதனையடுத்து, ஈக்வடார் ரசிகர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக ஃபிஃபா அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உலக கால்பந்து நிர்வாகக் குழு அதன் அறிக்கையில் ஒழுங்கு விதிகளின் கட்டுரை 13 ஐ மேற்கோள் காட்டி, "ஃபிஃபா (FIFA) ஒழுங்கு நடவடிக்கை குழு, ஈக்வடார் ரசிகர்களின் கோஷங்கள் காரணமாக, ஈக்வடார் கால்பந்து சங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது." என்று தெரிவித்துள்ளது.
ரசிர்கள் இல்லாமல் ஒரு போட்டியை விளையாடுவது அல்லது ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படுவது ஆகியவை குறியீட்டில் உள்ள சாத்தியமான தடைகள் ஆகும். ஆனால், இது குறித்து ஈக்வடார் கால்பந்து கூட்டமைப்பிடம் இருந்து எந்த பதிலும் இன்னும் வரவில்லை. மேலும், அல் பெய்ட் மைதானத்தில் அவர்கள் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதன் புகைப்படங்களை மகிழ்ச்சியுடன் ரீ-ட்வீட் செய்து வருகிறார்கள்.
கால்பந்து உலக கோப்பையை நடத்தி வரும் கத்தாரில், மது அருந்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் ரசிகர்களுக்கு மது வழங்க மைதானத்தில் ஸ்டால்கள் நிறுவப்பட்டுள்ளன. இருப்பினும், கத்தாருக்கு எதிரான போட்டியின் போது ஈக்வடார் ரசிகர்கள் "எங்களுக்கு பீர் வேண்டும்!" என்றும் கோஷமிட்டுள்ளனர்.
தவிர கத்தாரில், ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானது என்பதால், இந்த உலகக் கோப்பையின் போது ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான உரிமைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்த நிலையில், ஈக்வடார் ரசிகர்கள் ஓரினச்சேர்க்கை குறித்த கோஷங்களையும் எழுப்பியுள்ளனர். இதனால், கத்தாரில் பெரும் சர்ச்சையே வெடித்துள்ளது.
குரூப் ஏ-ல் முதலிடத்தில் உள்ள ஈக்வடார் அணி வருகிற வெள்ளிக்கிழமை நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.