Football Legend Pele Tamil News: ரஷ்யா அதன் அண்டை நாடான உக்ரைன் மீது படையெப்பு நடத்தி போர் தொடுத்து வருகிறது. கடந்த பிப்ரவரி முதல் நடைபெற்று வரும் இந்த போர் பதற்றத்தால் உக்ரைன் நாடு பெரும் சேதத்தையும், உயிரிழப்பையும் சந்தித்துள்ளது. ரஷ்யாவின் அத்துமீறிய நடவடிக்கையை பல்வேறு நாடுகள் கண்டித்தும், பொருளாதார தடையை விதித்தும் உள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கிய நாட்களில், உலகில் உள்ள விளையாட்டு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவருமாறும் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டது. ஆனால், தற்போது உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரானது 100-வது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் மீதான தனது "பொல்லாத" மற்றும் "நியாயமற்ற" படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவருமாறு பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் பொது வேண்டுகோள் விடுத்துள்ளார். இதை அவர் உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று ஆட்டத்தில் உக்ரைனின் தேசிய அணி விளையாடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில் பீலே, "இந்தப் படையெடுப்பை நிறுத்துங்கள். இந்த மோதல் பொல்லாதது, நியாயப்படுத்த முடியாதது மற்றும் வலி, பயம், மற்றும் வேதனையைத் தவிர வேறெதையும் கொண்டுவருவதில்லை." என்று பதிவிட்டுள்ளார்.
கால்பந்து ஜாம்பவான் பீலேவும், அதிபர் புடினும் கடைசியாக மாஸ்கோவில் 2017 இல் உலகக் கோப்பைக்கு முன் நடைபெற்ற கான்ஃபெடரேஷன் கோப்பையின் போது சந்தித்தனர். ரஷ்ய அதிபர் புதினும், பீலேவை தனக்கு பிடித்த வீரர்களில் ஒருவர் என கூறி இருந்தார்.
1990களில் பிரேசிலின் முதல் விளையாட்டு அமைச்சராகப் பணியாற்றிய பீலே, "கடந்த காலத்தில் சந்தித்துப் பேசி, நீண்ட கைகுலுக்கலுடன் புன்னகையை பரிமாறிக் கொண்டபோது, இன்று இருப்பது போல் பிரிந்து விடுவோம் என்று நான் நினைக்கவே இல்லை" என்று அவரது இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil