Top 5 Football News Of The Day in tamil: ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ விளையாட்டு செய்திகள் பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய டாப் 5 கால்பந்து விளையாட்டு செய்திகளை இங்கு பார்க்கலாம்.
- பெல்ஜியம் அதிர்ச்சி தோல்வி; தலைநகரில் வெடித்த கலவரம்
22வது உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தற்போது லீக் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், குரூப் எப் பிரிவில் நேற்று பலம் வாய்ந்த பெல்ஜியம் அணி மொராக்கோவை எதிர்க்கொண்டது. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி மொராக்கோ அபார வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் பெல்ஜியத்தின் தோல்வி கால்பந்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஆத்திரமடைந்த பெல்ஜிய ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் கால்பந்து ரசிகர்கள் மொரோக்கோ கொடியை தீவைத்து கொழுத்தினர்.
மேலும், கார்கள், பைக்குகளுக்கு தீ வைத்தும் ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வன்முறையில் ஈடுபட்ட ரசிகர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
- 2வது வெற்றியை ருசிக்குமா பிரேசில்? சுவிட்சர்லாந்துடன் இன்று மோதல்
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 'ஜி' பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் கேமரூன்-செர்பியா ( மாலை 3.30 ), பிரேசில்-சுவிட்சர்லாந்து (இரவு 9.30) அணிகள் மோதுகின்றன.
கேமரூன் தொடக்க ஆட்டத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்திடமும், செர்பியா 0-2 என்ற கணக்கில் பிரேசிலிடமும் தோற்று இருந்தன. இதனால் முதல் வெற்றியை பெறப்போவது யார்? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரேசில், சுவிட்சர்லாந்து அணிகள் முதல் ஆட்டங்களில் வெற்றி பெற்றன. எனவே 2-வது வெற்றிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக போராடுவார்கள். தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசில் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறது.
5 முறை சாம்பியனான பிரேசில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. பிரேசில் அணியில் நட்சத்திர வீரர் நெய்மர் காயம் காரணமாக ஆடவில்லை. ஐரோப்பா கண்டத்தில் இருக்கும் சுவிட்சர்லாந்து தர வரிசையில் 15-வது இடத்தில் உள்ளது. இரு அணிகள் மோதிய ஆட்டங்களில் பிரேசில் 3-ல் சுவிட்சர்லாந்து 2-ல் வெற்றி பெற்று உள்ளன.
- சவுதி கிளப் அணியில் விளையாட ரொனால்டோவுக்கு ரூ.1,838 கோடி ரெடி
சர்வதேச கால்பந்து அரங்கில் முன்னணி வீரராக வலம் வருபவர் போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 37 வயதான இவர் கால்பந்து விளையாட்டில் பல சாதனைகளை படைத்துள்ளார். மேலும், சிறந்த வீரர்களுக்கென வருடாவருடம் வழங்கப்படும் தங்க கால்பந்து கோப்பையை 5 முறை வென்றுள்ளார்.
தற்போது ரொனால்டோ கத்தாரில் கோலாகலமாக நடைபெற்று வரும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் தனது நாட்டு அணிக்காக களமாடி விளையாடி வருகிறார். அவரது தலைமையிலான போர்ச்சுகல் அணி 3-2 என்ற கணக்கில் கானா அணியை வீழ்த்தியது.
இந்நிலையில், சவுதி அரேபியா கிளப் அணி ரொனால்டோ தங்கள் கிளப்பில் விளையாடுவதற்காக கோடிக்கணக்கான பணத்தை அள்ளிக்கொடுக்க தயார் நிலையில் உள்ளது. ரியாத்தில் உள்ள அல்நாசர் கிளப் அணி ரொனால்டோவை 3 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்ய ரூ.1838 கோடி தர இருப்பதாக விருப்பம் தெரிவித்து அழைப்பு விடுத்துள்ளது. அதாவது, ரொனால்டோவுக்கு ஆண்டுக்கு ரூ.612 கோடிக்கு மேல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ரொனால்டோ சவுதி கிளப் அணியின் அழைப்பை ஏற்பாரா? என்ற கேள்வியும், ஆவலும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால், ரொனால்டோ அந்த கிளப்பில் அணியில் விளையாட ஏற்கனவே தனது விருப்பத்தை தெரிவித்து இருந்ததாக தகவல் வெளியாகியாகியது. தற்போது அவரின் இறுதி முடிவுக்காக அந்த கிளப் காத்திருக்கிறது.
அல் நாசர் கிளப் அணி ஆசியாவின் சிறந்த கிளப்களில் ஒன்றாகும். இதுவரை 9 'லீக்' பட்டங்களை வென்றுள்ளது.
முன்னதாக, ரொனால்டோ இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் யுனைடட் கிளப்பில் இருந்து நீக்கப்பட்டார். அந்த கிளப் நிர்வாகம் அவரது ஒப்பந்தத்தை நீட்டிக்காமல் ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து அவர் மான்செஸ்டர் யுனைடட் கிளப் மானேஜர் எரிக் டென்னை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- போர்ச்சுக்கல்-உருகுவே இன்று பலப்பரீட்சை
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் குரூப் 'எச்' பிரிவில் இன்று நடைபெறும் போட்டிகளில் தென் கொரியா- கானா (மாலை 6.30), போர்ச்சுக்கல்-உருகுவே (நள்ளிரவு 12.30) அணிகள் மோதுகின்றன. தென் கொரியா தொடக்க ஆட்டத்தில் உருகுவேயுடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது. கானா அணி 2-3 என்ற கணக்கில் போர்ச்சுக்கலிடம் தோற்றது. இதனால் இரு அணிகளும் முதல் வெற்றிக்காக போராடும்.
நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வழிநடத்தும் போர்ச்சுக்கல் அணி முதல் ஆட்டத்தில் கானாவை வீழ்த்தியதால் நம்பிக்கையுடன் விளையாடும். அந்த அணி 2-வது வெற்றியுடன் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறும் ஆர்வத்தில் உள்ளது. உருகுவே அணி பலம் வாய்ந்த போர்ச்சுகலை தோற்கடித்து முதல் வெற்றியை பதிவு செய்ய தீவிரமாக போராடும்.
- அதிரவைத்த கால்பந்து வீரர்களின் பாலியல் சர்ச்சைகள்
ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து தொடர் என்றாலே பரபரப்புகளுக்கும், கொண்டாட்டங்களுக்கும், மற்றும் சர்ச்சைகளுக்கும் குறைவிருக்காது. அவ்வகையில், இந்த தொடரின் கால்பந்து உலகையே அதிரவைத்த வீரர்களின் பாலியல் சர்ச்சைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
மொத்தமாக சிக்கிய மெக்ஸிகோ அணி
2018 உலக கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடந்தது. இந்த தொடருக்கு முன் பிரியாவிடை விருந்து மெக்ஸிகோ அணி வீரர்களுக்கு கொடுக்கப்பட்டது. அந்த விருந்தில் அவர்கள் 30 பாலியல் தொழிலாளிகளுடன் உல்லாசமாக இருந்த புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தால் மெக்ஸிகோ நாடே அதிர்ந்து போனது.
செக் குடியரசு அணி மீதான பாலியல் சர்ச்சை
செக் குடியரசு கால்பந்து அணி 2010 ஃபிஃபா உலக கோப்பைக்கு தகுதிபெற தகுதிச்சுற்றில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அப்போது அந்த அணியின் பயிற்சியாளர் பீட்டர் ராடா மற்றும் 6 வீரர்கள் பாலியல் குற்றச்சாட்டின் விளைவாக அணியிலிருந்து நீக்கப்பட்டனர். அவர்கள் பாலியல் தொழிலாளிகளுடன் உல்லாசமாக இருந்த புகைப்படங்கள் வெளியாகி அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன்விளைவாக அவர்கள் அனைவரும் அணியிலிருந்து நீக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக அந்த அணி ஸ்லோவேக்கியாவிடம் 2-1என்ற கோல் கணக்கில் தோற்று 2010 உலக கோப்பைக்கு தகுதிபெறும் வாய்ப்பையும் பறிகொடுத்தது.
ஃபிராங்க் ரிப்பெரி, கரிம் பென்ஸெமா பாலியல் சர்ச்சை
2010 ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா கால்பந்து உலக கோப்பைக்கு முன், பிரான்ஸ் வீரர் ஃபிராங்க் ரிப்பெரி, கரிம் பென்ஸெமா மற்றும் சிட்னி கோவ்லு ஆகிய மூன்று பாலியல் குற்றச்சாட்டில் சிக்கினர். இந்த வீரர்கள் மூவரும், இரவு பாலியல் விடுதிக்கு சென்றதாகவும், பென்ஸெமா மற்றும் ரிப்பெரி ஆகிய இருவரும் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் ஒரு சிறுமியுடன் பாலியல் உறவு கொண்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டனர்.
சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த இந்த வீரர்களின் பாலியல் வழக்கில், மூவரையும் கடந்த 2014 ஆண்டு ஜனவரியில் பாரிஸ் சீர்திருத்த நீதிமன்றம் விடுவித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.