/tamil-ie/media/media_files/uploads/2022/08/tamil-indian-express-2022-08-13T100655.842.jpg)
ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. உலகின் பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூதாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக கடந்த 2013-ம் ஆண்டு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது
இந்த தொடர்பான விசாரணை மேற்கொண்ட ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தனது அறிக்கையில், கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த தோனி, தனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில், அறிக்கை வெளியிட்டதற்காக ரூ 100 கோடி நஷ்டஈடு கேட்டு கடந்த 2014-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மேலும் சம்பத்குமார் அறிக்கை தொடர்பாக விவாத நிகழ்ச்சி நடத்திய டி.வி.சேனல், அதன் எடிட்டர் மற்றும் அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் இந்த வழக்கில் எதிர்தரப்பாளர்களாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ள நிலையில், இது தொடர்பான ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளை கலங்கப்படுத்தும் விதமாக கருத்துக்களை கூறியுள்ளதால், அவர் மீது குற்றவியல் அவதூறு வழக்கு பதிவு செய்ய அரசு வழக்கறிஞரிடம் தோனி அனுமதி கோரி இருந்தார்.
தற்போது இது தொடர்பாக அரசு வழக்கறிஞர் அனுமதி அளித்ததை தொடர்ந்து, ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு எதிராக முன்னாள் கேப்டன் தோனி, குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் மற்றும் நீதிபதி டீக்காரமன் ஆகியோர் அமர்வில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.