2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த தொடர் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி தொடங்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்படமால் இருந்தது. அதற்கு முக்கிய காரணம் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி) தெரிவித்தது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Champions Trophy deadlock: ICC offering Pakistan ‘lollipop’, former player alleges
மேலும், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களை பொதுவான இடமான துபாய்க்கு மாற்ற வேண்டும் என்றும், அதிலும் குறிப்பாக, இந்தியாவின் மூன்று போட்டிகள், ஒரு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் ஹைப்ரிட் மாடலில் பொதுவான இடத்தில் நடக்க வேண்டும் என்றும் பி.சி.சி.ஐ. கோரிக்கை வைத்தது. ஆனால், இதனை பாகிஸ்தான் ஏற்கவில்லை. அப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால், 2026 வரையிலான ஐ.சி.சி தொடர்களில் பாகிஸ்தான் இந்தியா மண்ணில் விளையாடாது என பாகிஸ்தான் திட்ட வட்டமாக கூறியது.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரை எப்படி நடத்துவது? எங்கு நடத்துவது? என்பது தொடர்பான பல கட்ட பேச்சுவார்த்தை ஐ.சி.சி தலைமையில் நடந்தது. இந்தப் பேச்சு வார்த்தை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலாக நடத்த ஐ.சி.சி ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதன்படி, போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படும். அதேவேளையில் பாகிஸ்தான் 2026-ல் நடைபெறும் டி20 தொடரில் பங்கேற்காது. பாகிஸ்தான் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறும். இதற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஹைபிரிட் மாடலாக நடத்தப்படுவதற்கு ஐ.சி.சி பாகிஸ்தானுக்கு இழப்பீடு ஏதும் வழங்காது. அதற்கு ஈடாக, 2027 ஐ.சி.சி பெண்கள் உலக் கோப்பையை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்படுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் உள்ள மூன்று மைதானங்களில் நடைபெறும். இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும். இந்தியா தகுதி சுற்றுடன் வெளியேறினால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி முறையே லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் நடைபெறும். இந்தியா அரையிறுதிக்கு முன்னேறினால் போட்டி துபாயில் நடத்தப்பட உள்ளது.
எச்சரிக்கை
இந்த நிலையில், 2027 பெண்கள் உலக் கோப்பையை நடத்தும் உரிமையை பாகிஸ்தானுக்கு ஐ.சி.சி வழங்குவது என்பது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ‘லாலிபாப்’ கொடுப்பதற்கு சமம் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாசித் அலி எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில், 'சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஹைபிரிட் மாடலாக நடத்த ஒப்புக்கொண்டதற்காக நிதி இழப்பீட்டிற்கு பதிலாக, 2027 இல் பெண்கள் உலகக் கோப்பையை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெறும் என்று கூறப்படுகிறது. இது நாட்டுக்கு நன்மை செய்யாது. மாறாக, ஆடவர் ஆசிய கோப்பையை பாகிஸ்தானில் நடந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைக்க வேண்டும்' என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
“இப்போது 2027 அல்லது 2028 இல், பாகிஸ்தானுக்கு மகளிர் உலகக் கோப்பை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. எல்லோரும் இது நல்ல முடிவு சொல்வார்கள். மேலும், இரண்டு ஐசிசி போட்டிகள் பாகிஸ்தானில் நடப்பது சிறப்பானது என்று கூறுவார்கள். ஆனால், அதுவும் இதுவும் ஒன்றல்ல. இதுபோன்ற நிகழ்வுகளால் என்ன பயன்? 2026-ல் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்குச் செல்லும் வகையில், இந்திய மகளிர் அணி பாகிஸ்தானுக்கு வரும் வகையில் இது செய்யப்படுகிறது. ஒளிபரப்பாளர்கள் எந்த இழப்பையும் சந்திக்க மாட்டார்கள்.
லாலிபாப் என்றால் என்ன தெரியுமா? பி.சி.பி-க்கு ஐ.சி.சி கொடுப்பது தான் அந்த லாலிபாப். நீங்கள் இதற்கு சம்மதித்தால், எழுத்துப்பூர்வமாக எதையும் கேட்க வேண்டாம், நாங்கள் உங்களுக்கு மற்றொரு ஐசிசி போட்டியை வழங்குவோம். இதனால், பாகிஸ்தானுக்கு எந்தப் பயனும் இல்லை. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பைக்கு அவர்கள் ஏலம் எடுக்க வேண்டும். பி.சி.பி இதை கேட்க வேண்டும். பெண்கள் உலகக் கோப்பை அல்லது யு-19 உலகக் கோப்பையை நடத்துவதன் மூலம் பி.சி.பி பயனடையாது. பி.சி.பி இந்த லாலிபாப்பை ஏற்றுக்கொண்டால், அவர்கள் தோற்றுப்போவார்கள்." என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.