worldcup 2023 | india-vs-south-africa | mohammed-shami | mohammed-siraj | jasprit-bumrah: இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தத் தொடரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த லீக் போட்டியில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருந்து வரும் இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதின.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 326 ரன்களை சேர்த்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய விராட் கோலி 101 ரன்களை எடுத்தார்.
தொடர்ந்து 327 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய தென் ஆப்ரிக்கா இந்திய பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறியது. அத்துடன் அடுத்தடுத்த விக்கெட் இழப்புகளை சந்தித்து ரன் சேர்க்க போராடியது. இதனால், அந்த அணி 83 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து சுருண்டது. மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணியில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், ஷமி மற்றும் குலதீப் தலா 2 விக்கெட்டுகளையும், சிராஜ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி மிரட்டினர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: If Bumrah won’t get you, Siraj will, if Siraj doesn’t then Shami will: Wasim Akram
பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் புகழாரம்
இந்நிலையில், இந்தியா தென் ஆப்பிரிக்காவை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதைத் தொடர்ந்து, இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா, ஷமி, சிராஜ் ஆகியோரின் கூட்டணி ஏன் உலகின் சிறந்த கூட்டணி என்பது பற்றியும், அவர்களைப் பாராட்டியும், பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பேசியுள்ளார்கள்.
"இந்திய வேகப்பந்து வீச்சு தாக்குதல்" தான் உலகிலே சிறந்தது என்றும், அதன் தலைவனாக "ஜஸ்பிரித் பும்ரா" இருக்கிறார் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் வீரரான வாசிம் அக்ரம் பாராட்டு மழை பொழிந்துள்ளார்.
'ஏ' ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வாசிம் அக்ரம் பேசுகையில், “குயின்டன் டி காக் முதல் ஓவரில் சரியான தொடக்கத்தைப் பெற முடியவில்லை. அவரை அணு அணுவாக சிதைத்து கொண்டிருந்தார் பும்ரா. இந்த மெதுவான ஆடுகளத்தில் 140க்கு மேல் வேகத்துடன் தாக்குதல் தொடுத்தார். இது பும்ராவின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர் ஸ்டம்புகளுக்கு வெளியே இருந்து பந்து வீசத் தொடங்கினார். பின்னர் ஸ்டம்புகளில் பந்துவீசுவதை முடித்தார். அவர் டி காக்கை தனது கால்விரல்களில் வைத்திருந்தார். நாம் எப்பொழுதும் பேசும் லென்த்தை அவர் வீசினார். அவர் விக்கெட் பெறாதது துரதிர்ஷ்டவசமானது, ஆனால் அவர் உண்மையில் இந்த வேகப்பந்து வீச்சு தாக்குதலின் தலைவர், ”என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய வாசிம் அக்ரம் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகிய மூவரும் தற்போது உலகில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் என்றும் கூறினார். “பும்ரா விக்கெட்டை பெறவில்லை என்றால், சிராஜ் அதை செய்வார். சிராஜ்-வும் அதனை செய்யவில்லை என்றால் ஷமி செய்து முடிப்பார். ஒரு யூனிட்டாக, அவர்கள் சிறந்தவர்கள் என்ற இந்த நம்பிக்கையைப் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் அதிக ஆக்ரோஷத்தை காட்டவில்லை. ஆனால் வேகப்பந்து வீச்சாளர்களாக கட்டுப்படுத்தப்பட்ட ஆக்ரோஷத்தை காட்டுகிறார்கள், ”என்று அவர் கூறினார்.
டி காக்கிற்கு பும்ராவின் முதல் ஓவரைப் பற்றி பேசிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக், “குயின்டன் டி காக் மற்றும் பும்ரா ஆகிய இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளனர். அவர் பும்ராவின் பந்துவீச்சை ஆயிரம் முறை சந்தித்திருக்க வேண்டும். பும்ராவின் தரத்தை இன்னும் பாருங்கள், அவரை பலமுறை எதிர்கொண்டாலும், டி காக் அவருக்கு எதிராக சிறப்பாக இருக்கவில்லை." என்று கூறினார்.
பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மொயின் கான் பேசுகையில், "இதுவரை உலகக் கோப்பையில் 4 சதங்கள் அடித்த குயின்டன் டி காக்கிற்கு ஜஸ்பிரித் பும்ரா அபரிதமான அழுத்தம் கொடுத்தார். ஃபார்மில் இருக்கும் பேட்டரான அவர் பேக்ஃபுட்டில் இருந்தார்” என்று கூறினார்.
இந்தப் போட்டியில் தொடக்க பேட்டர்களை நிலைநிறுத்த அனுமதிக்காததற்காக பும்ராவை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரான மிஸ்பா-உல்-ஹக் பாராட்டி பேசினார். “மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், முதல் இரண்டு பந்துகளில், நீங்கள் செட்டில் ஆக நேரம் எடுத்துக்கொள்கிறீர்கள். அது எவ்வளவு ஸ்விங் ஆகிறது என்பதை கணிக்க உதவும். ஆனால் பும்ரா உங்களுக்கு நேரம் கொடுக்கவில்லை. அவர் லெக் ஸ்டம்பில் இருந்து அவுட்ஸ்விங்கரை வீசுகிறார். அத்தகைய கட்டுப்பாட்டை நீங்கள் காணவில்லை, அது குறிப்பிடத்தக்கது." என்று அவர் கூறினார்:
முகமது ஷமி மற்றும் இந்த உலகக் கோப்பையில் தனது பந்துவீச்சால் பேட்டர்களின் வாழ்க்கையை அவர் எப்படி கடினமாக்கினார் என்பது பற்றி வாசிம் அக்ரம் பேசினார்.
"ஷமி புதிய பந்தில் கூட பந்து வீசவில்லை. அவர் லெந்த் ஸ்பாட்டின் பின்புறத்தில் இருந்து பந்தை இருபுறமும் நகர்த்துகிறார். அவரது சீமில் மிகவும் நுட்பமான மாற்றம் உள்ளது. நாம் எப்போதும் சீம் மற்றும் ஸ்விங் பற்றி பேசுகிறோம், ஷமிக்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று பார்க்கலாம். பும்ரா பந்தை ஸ்விங் செய்கிறார், அங்கு ஷமி சீம் அடிக்கிறார். இப்போது ஹாரிஸ் ரவூப்பின் சீமைப் பார்த்தால், அவர் ஒரு தள்ளாட்டம் அல்லது கிராஸ் மூலம் பந்து வீசுகிறார், ”என்று அவர் கூறினார்.
இந்த போட்டியில் ஷமி ஏன் மிகவும் திறம்பட செயல்பட்டார் என்பதை மொயின் கான் மேலும் விளக்கினார்."ஆடுகளத்தில் எவ்வளவு சீம் அடிக்கிறதோ, அவ்வளவு அதிகமாக அது நகரும். சிராஜையும், பிறகு ஷமி பந்து வீசிய விதத்தையும் பார்த்திருக்கிறோம். அவர் சீம் மூலம் டெக்கை அடிக்க முயற்சிக்கிறார், உங்கள் லயன் மற்றும் லென்த் நன்றாக இருந்தால் பந்து தானாகவே நகரும், ”என்று அவர் கூறினார்.
அப்போது இடைமறித்து பேசிய ஷோயப் மாலிக் சிப், “சிராஜ் டி காக்கை வெளியேற்றுவதற்கு முன் பந்து, உள் விளிம்பு அவரது காலில் பட்டது. நீங்கள் பந்தின் சீம் நிலைகளைப் பார்க்கிறீர்கள். இது மிகவும் சரியானது. அவர்கள் மூவரும் இன்-ஃபார்மில் இருக்கிறார்கள்.
தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் 16 புள்ளிகளுடன் (+2.456 நெட் ரன்ரேட்) அசைக்க முடியா அணியாக வலம் வருகிறது. இந்தியாவிடம் தோல்வியைத் தழுவி இருந்தாலும், தென் ஆப்ரிக்கா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. புள்ளிகள் பட்டியலில் 9வது மற்றும் 10வது இடத்தில் இருக்கும் வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகள் அதிகாரப்பூர்வமாக தொடரில் இருந்து வெளியேறியுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.