“ஜெய் ஸ்ரீ ராம்” – பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ‘சர்பிரைஸ்’ ட்வீட்

இன்று உலகம் முழுவதும் மகிழ்ச்சியின் அலை உள்ளது, இது மிகவும் திருப்தியான தருணம்

By: August 6, 2020, 5:23:32 PM

சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பல ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த சட்டப்போராட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவுக்கு வந்தது. அதில், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதைத்தொடர்ந்து, 29 வருடங்களுக்கு பின்பு நேற்று அயோத்தி வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு அனுமன்ஹார்கி, ராம்லல்லா உள்ளிட்ட தளங்களில் பிரார்த்தனை மேற்கொண்டார். இதன் பின்னர் பிரம்மாண்ட ராமர் கோவிலுக்கான பூமி பூஜையில் கலந்து கொண்ட பிரதமர் மோடி 40 கிலோ வெள்ளி செங்கல் கொண்டு அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா, “பகவான் ராமர் நமது அடையாளம், இது உலகம் முழுவதும் உள்ள இந்துக்களுக்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள்” என்று ட்வீட் செய்துள்ளார்.


டேனிஷ் கனேரியா மேலும் கூறுகையில், ‘பகவான் ராமரின் அழகு அவரது பெயரில் அல்ல, அவரது பாத்திரத்தில் உள்ளது, அவர் தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் குறிப்பவர். இன்று உலகம் முழுவதும் மகிழ்ச்சியின் அலை உள்ளது, இது மிகவும் திருப்தியான தருணம்’ என்று கூறியுள்ளார்.


இந்த ட்வீடுக்கு ராகுல் என்பவர் ‘பாதுகாப்பாக இருங்கள்’ என்று குறிப்பிட, அதற்கு பதிலளித்த டேனிஷ், “நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம், நமது மத நம்பிக்கைகளில் யாருக்கும் எந்த பிரச்சனையும் இருக்கக்கூடாது. பிரபு ஸ்ரீ ராமரின் வாழ்க்கை ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் நமக்குக் கற்பிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.


முன்னதாக, தான் ஒரு ஹிந்து என்பதால், பாகிஸ்தான் வீரர்களால் புறக்கணிக்கப்பட்டேன் என்று டேனிஷ் கனேரியா கூறியிருந்தார். அதை முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தரும் ஒப்புக் கொண்டார்.

அக்தர் கூறுகையில், “அவரது நம்பிக்கை (மதம்) காரணமாக , பலரும் அவர் அணியில் இருப்பதை விரும்பவில்லை. அவரது திறமையான பணிக்கு எப்போதும் அவர் பாராட்டப்பட்டதில்லை. அதுமட்டுமின்றி, மற்ற வீரர்களால் தொடர்ந்து அவர் அவமானப்படுத்தப்பட்டார்” என்றார்.


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா. பாகிஸ்தான் அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 261 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளையும் வீழ்த்தி முன்னணி வீரராக திகழ்ந்து வந்தார்.

இந்த நிலையில், இங்கிலாந்து உள்நாட்டு அணியான எஸ்ஸெக்ஸ் அணிக்கு விளையாடியபோது, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இவர் மீது புகார் சுமத்தப்பட்டு, உறுதி செய்யப்பட்டது. இதனால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Former pakistan spinner tweets ram temple

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X