Praggnanandhaa Tamil News: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், கடந்த ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் உலகம் முழுவதும் உள்ள 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பான முறையில் செய்திருந்தது.
சுமார் 2 வார காலமாக 11 சுற்றுகளாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கம் வென்று சாதனை படைத்தது. அர்மேனியா வெள்ளிப்பதக்கத்தையும், இந்தியாவின் பி அணி வெண்கலப்பதக்கத்தையும் பெற்றது. இதேபோல், பெண்கள் பிரிவில் உக்ரைன் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. வெள்ளிப்பதக்கத்தை ஜார்ஜியாவும், வெண்கலப்பதக்கத்தை இந்தியாவின் ஏ அணியும் பெற்றது.
இந்தப் போட்டியில் ஆடவர் பிரிவில் இந்திய பி அணியில் களமிறங்கிய தமிழக இளம் வீரர் ப்ரக்ஞானந்தாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. இந்நிலையில், ப்ரக்ஞானந்தா அமெரிக்காவின் மயாமியில் நடைபெறும் எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ செஸ் போட்டியில் களம் கண்டுள்ளார். இந்தப்போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர் ப்ரக்ஞானந்தா, உலகின் முன்னணி ஜூனியர் வீரரான அலிரேசா ஃபிரோஜாவை 2.5-1.5 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளார்.
1.6 மில்லியன் டாலர்களை பரிசாக வழங்கும் மெல்ட்வாட்டர்ஸ் சாம்பியன்ஸ் செஸ் சுற்றுப்பயணத்தின் இரண்டாவது பெரிய நிகழ்வு இதுவாகும். எட்டு வீரர்கள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் (ஆல்-பிளே-ஆல்) ஒவ்வொரு வீரரும் மற்ற 7 வீரர்களுடன் நேருக்கு நேர் சந்திக்க வேண்டும். ஒவ்வொரு போட்டியின் வெற்றிக்கும் வீரர்களுக்கு 7,500 டாலர்கள் பரிசாக வழங்கப்படுகிறது. மேலும், போட்டியின் முடிவில் 100,000 டாலர்கள் மதிப்புள்ள பிட்காயின் போனஸாக வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், இளம் வீரர் ப்ரக்ஞானந்தா, முதலாவது மற்றும் மூன்றாவது போட்டியை வெள்ளை காய்களுடன் வென்று அசத்தினார். கறுப்பு காய்களுடன் இரண்டாவது போட்டியில் தோல்வி கண்ட அவர் நான்காவது போட்டியை ட்ரா செய்தார். பேஸ்ட் ஆப் போஃரில் 2 ஆட்டங்களில் வெற்றிபெற்றுள்ளஅவர் 3 புள்ளிகளை ஈட்டியுள்ளார். தற்போது அவர் இரண்டாவது சுற்றில் நெதர்லாந்து நம்பர்-1 அனிஷ் கிரியை எதிர்கொள்கிறார்.
இதற்கிடையில், உலகின் நம்பர்-1 நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் அனீஸ் கிரியை 3-1 என்ற கணக்கில் வென்றார். முதல் சுற்றில் மற்ற ஆட்டங்களில் போலந்தின் ஜான்-க்ரிஸ்டோஃப் டுடா 3-0 என்ற கணக்கில் ஹான்ஸ் நியமனையும், லெவ் அரோனியன் 2.5-1.5 என்ற கணக்கில் சீனாவின் லீ லீமையும் தோற்கடித்தனர்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil