இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் அதிரடி வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் டி-20 உலகக் கோப்பை தொடருடன் முடிவடைந்த நிலையில், அந்த பதவியில் கம்பீரை கடந்த 9 ஆம் தேதி அன்று பி.சி.சி.ஐ நியமித்தது.
டிராவிட் ஓய்வு பெற்ற சூழலில், அவருடன் துணை ஊழியர்கள் குழுவில் இருந்த பந்துவீச்சு மற்றும் பேட்டிங் பயிற்சியாளர்களும் ஓய்வு பெற்றனர். எனவே, அவர்களுக்கு பதில் புதிய பயிற்சியாளர்களை நியமிக்கும் வேலையில் பி.சி.சி.ஐ ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில், தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட உள்ளதால் தமக்கு தகுந்த துணைப் பயிற்சியாளர்களை தேர்வு செய்து கொள்ள அவருக்கு பி.சி.சி.ஐ. அதிகாரத்தையும் வழங்கியுள்ளது.
இந்நிலையில், இந்திய அணி பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்புக்கு முன்னாள் வீரர்கள் வினய் குமார், ஜாகீர்கான், தமிழகத்தின் எல்.பாலாஜி ஆகியோரை பி.சி.சி.ஐ பரிசீலனை செய்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் பதவிக்கு தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கலை பரிசீலிக்குமாறு பி.சி.சி.ஐ-யிடம் கவுதம் கம்பீர் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
/indian-express-tamil/media/post_attachments/d1a9edcc-08e.jpg)
பந்துவீச்சு பயிற்சியாளராக நிறைவான அனுபவம் கொண்ட மோர்னே மோர்கல், கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பையின் போது பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக மோர்கல் இருந்தார். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடனான (பி.சி.பி) ஒப்பந்தம் முடிவடைவதற்கு சில மாதங்களுக்கு முன்பே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கவுதம் கம்பீர் மற்றும் மோர்னே மோர்கல் ஆகிய இருவரும் ஏற்கனவே இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் ஐ.பி.எல் தொடருக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக பணிபுரிந்துள்ளனர். லக்னோ அணியின் ஆலோசராக கம்பீர் இரண்டு ஆண்டுகள் பணியாற்றி நிலையில், அப்போது தலைமை பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவர் கீழ் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்கல் செயல்பட்டார். தற்போது புதிய தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரின் கீழ் மோர்கல் பந்துவீச்சு பயிற்சியாளராக தொடர்ந்துள்ளார்.
2006 ஆம் ஆண்டில் தென் ஆப்ரிக்க அணிக்காக சர்வதேச அரங்கில் அறிமுகமமான மோர்கல் 2018-ல் ஓய்வு பெற்றார். அவர் 86 டெஸ்ட் போட்டிகளில் 8550 ரன்கள் மற்றும் 309 விக்கெட்டையும், 117 ஒருநாள் போட்டிகளில் 4761 ரன்கள் மற்றும் 188 விக்கெட்டையும், 44 டி20 போட்டிகளில் 1191 ரன்கள் மற்றும் 47 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட அணிகளுக்காக 70 போட்டிகளில் ஆடி 2089 ரன்கள் மற்றும் 77 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார்.
தனது ஓய்வுக்குப் பிறகு, பயிற்சியாளர் அவதாரம் எடுத்த மோர்கல் சர்வதேச மற்றும் ஐ.பி.எல் வட்டாரங்களில் திறமையான பயிற்சியாளராக அறியப்படுகிறார். 39 வயதான அவர் கிரிக்கெட்டின் சமீபத்திய நுட்பங்களை நன்கு அறிந்தவராகவும், புதுப்பித்தவராகவும் இருக்கிறார். தன்னுடன் வசதியாக இருக்கும் நபர்களுடன் பணிபுரிவதில் பெயர் பெற்ற கம்பீர், மோர்கலை தனது பயிற்சிக் குழுவில் சேர்க்க ஆர்வமாக இருப்பதாக நம்பப்படுகிறது.
இருப்பினும், தற்போது ஆஸ்திரேலியாவில் குடியிருக்கும் மோர்கல் தனது குடும்பத்தை பிரிந்து இந்தியாவுக்கு வருவாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. அவரது மனைவி ரோஸ் கெல்லி மற்றும் 2 குழந்தைகளுடன் அவர் வடக்கு சிட்னியில் உள்ள பிளாஷ் சீஃபோர்த் புறநகர் பகுதியில் வசித்து வருகிறார். ரோஸ் கெல்லி சேனல் 9-ல் விளையாட்டு தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
மோர்கல் தொடர்பாக கம்பீர் ஏற்கனவே தனது விருப்பத்தை பி.சி.சி.ஐ-யிடம் தெரிவித்துவிட்டதாகவும், அவருடன் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவி குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு இருப்பதாகவும், ஆனால், அவரது நியமனம் குறித்து பி.சி.சி.ஐ இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை, மோர்கல் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால், தற்போதைய பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே வெளியேற வேண்டும். மோர்கல் பெயருடன் அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஸ்கேட் ஆகியோரின் பெயரையும் மற்ற இரண்டு பரிந்துரைகளாக கம்பீர் பி.சி.சி.ஐ-யிடம் கொடுத்துள்ளார். டிராவிட் குழுவில் இருந்து வெளியேறும் பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப்பை மீண்டும் தொடர வைப்பதில் பி.சி.சி.ஐ ஆர்வமாக இருப்பதாக நம்பப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“