BCCI – Sourav Ganguly Tamil News: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக கடந்த 2019-ம் ஆண்டு சவுரவ் கங்குலியும், செயலாளராக மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவும் தேர்வானார்கள். இவர்களது பதவிக்காலம் தற்போது முடிவுக்கு வரவுள்ள நிலையில், அந்தப் பதவிகளுக்கான தேர்தல் வரும் 18-ம் தேதி பிசிசிஐ-யின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் நடத்தப்பட உள்ளது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் இந்திய வீரர் ரோஜர் பின்னி போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார்.
67 வயதான ரோஜர் பின்னி கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். இவர் கடந்த 1983-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற இந்திய அணியின் ஹீரோ ஆவார். அவர் தற்போது பிசிசிஐ-யின் 36-வது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். அதேவேளையில், ஜெய் ஷா 2-வது முறையாக பிசிசிஐ செயலாளராக தொடர உள்ளார்.
உண்மையில், அடுத்த செவ்வாய்கிழமை நடக்கவிருக்கும் பிசிசிஐ தேர்தல் ஒரு சம்பிரதாயமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், பிசிசிஐ-யின் அலுவலக பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட முதல் நாளில் இருந்து கடைசி நாளான இன்று புதன்கிழமை வரை எந்தவொரு பதவிக்கும் ஒரே ஒரு விண்ணப்பம் மட்டும் தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த பதவிகளுக்கு யார் வரவுள்ளார் என்பதை புதிய பிசிசிஐ அதிகார குழு ஏற்கனவே முடிவு செய்து விட்டதாகவும், கடந்த ஒரு மாதமாக பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாகவும் தகவல் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
குஜராத் கிரிக்கெட் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜெய் ஷா அவரின் முதல் பதவிக் காலத்தில், அகமதாபாத்தை இந்திய கிரிக்கெட்டின் தலைமையகமாக மாற்றியிருந்தார். அனைத்து முக்கிய நிகழ்வுகளும் மொட்டேராவில் உள்ள புதிய நரேந்திர மோடி மைதானத்தில் தான் நடத்தப்பட்டன.
கவர்ச்சியான கங்குலிக்கு பதிலாக அடக்கமில்லாத பின்னி, இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் முகமாக அமித் ஷா இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனான ஜெய் ஷாவின் செல்வாக்கு தற்போது புதிய குழுவில் பிரதிபலிக்கிறது.
“தலைவர் பதவிக்கு ரோஜர் பின்னி, துணைத் தலைவர் பதவிக்கு நான், செயலாளர் பதவிக்கு ஜெய் ஷா, பொருளாளராக ஆஷிஷ் ஷெலார், இணைச் செயலாளர் பதவிக்கு தேவஜித் சைகியா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்” என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். ஜெய் ஷாவைத் தவிர தனது பதவியைத் தக்கவைத்துக் கொள்ளும் மற்றொரு அதிகாரியாக சுக்லா இருக்கிறார்.
பாஜக எம்எல்ஏவான ஷெலர், அக்கட்சியின் மும்பை தலைவராகவும், தலைமைக் கொறடாவாகவும் உள்ளார். அவர் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரின் சகோதரர் அருண் துமாலுக்கு பதிலாக பொருளாளராக நியமிக்கப்பட உள்ளார். துமால் ஐபிஎல் தலைவராக இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இணைச் செயலாளராக தேர்வு செய்யப்படவுள்ள தேவஜித் சைகியா அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் நெருங்கிய உதவியாளர் ஆவார்.
“அருண் துமால் ஐபிஎல் நிர்வாகக் குழுவின் தலைவராக இருப்பார். இப்போதைக்கு, இந்த நியமனங்கள் அனைத்தும் போட்டியின்றி உள்ளன. ”என்று சுக்லா கூறினார். இவர் புதிய பிசிசிஐ முடிவெடுப்பவர்களில் ஒரே காங்கிரஸ் பிரதிநிதி ஆவார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவி மீண்டும் சவுரவ் கங்குலிக்கு அளிக்கப்படாதது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அவருக்கு ஐபிஎல் தலைவர் பதவி வழங்கப்பட்டதாகவும், ஐசிசி தலைவராக வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டும் அவர், பிசிசிஐ தலைவராக தொடர்வதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டையும் அவர் விரும்பாத நிலையில், ஐபிஎல் தலைவர் பதவிக்கு துமல் ஒருமித்த வேட்பாளராக வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
புதிய பிசிசிஐ தலைவராக நியமிக்கப்படவுள்ள ரோஜர் பின்னி, சந்தீப் பாட்டீல் பிசிசிஐ தலைவராக இருந்தபோது, அவர் மூத்த தேர்வுக் குழுவில் உறுப்பினராக இருந்தார். தற்செயலாக, பின்னி தனது மகன் ஸ்டூவர்ட்டை அணியில் சேர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்ட போதெல்லாம் தேர்வுக் கூட்டங்களில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டதாக அறியப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil