பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி தொடர்வது அவருடைய அதிர்ஷ்டம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் தெரிவித்திருப்பது சமூக தளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு, கடந்த 7 - 8 வருடங்களாக விராட் கோலி கேப்டனாக பணியாற்றி வருகிறார். ஆனால், இதுவரை ஒட்டுமொத்தமாகவே இருமுறை மட்டுமே இறுதிப் போட்டி வரை ஆர்சிபி முன்னேறி இருக்கிறது.
குறிப்பாக, கடைசி இரு தொடர்களிலும், ஆர்சிபி படுமோசமாக விளையாடியது. 2017ல் கடைசி இடமும், 2018ல் 6வது இடமும் பெற்றது.
இந்நிலையில், பிரபல ஸ்போர்ட்ஸ் சேனலான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் கலந்துகொண்டு ஐ.பி.எல் தொடர்பாக பேசினார். அப்போது ஆர்.சி.பி அணியின் செயல்பாடு குறித்தும் கோலியின் கேப்டன்ஷிப் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது கருத்து தெரிவித்த கம்பீர், "கோலி பயணிக்க வேண்டிய தொலைவு இன்னும் அதிகமாக உள்ளது. இன்னமும், நான் அவரை ஒரு சாதுரியமான கேப்டனாக பார்க்கவில்லை. ஐ.பி.எல் தொடரையும் தற்போது வரை வெல்லவில்லை.
இதுவரை ஐ.பி.எல் தொடர்களில் 3 முறை கோப்பை வென்ற கேப்டன்கள் இருக்கிறார்கள். தோனி, ரோஹித் ஷர்மா ஆகியோர் இதைச் செய்திருக்கிறார்கள் . அதனால்தான் சொல்கிறேன், கோலி இன்னும் பயணப்பட வேண்டிய தூரம் இன்னும் அதிகம் இருக்கிறது . கேப்டன்ஷிப்பை பொறுத்தவரை நீங்கள் கோலியை தோனியுடனோ ரோஹித்துடனோ ஒப்பிட முடியாது. கடந்த 8 ஆண்டுகளாகக் கோலி ஆர்.சி.பி அணியை வழிநடத்தி வருகிறார். அதற்காக அவர் ஆர்.சி.பி அணி நிர்வாகத்துக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் கொஞ்சம் லக்கி என நான் நினைக்கிறேன். காரணம், இத்தனை ஆண்டுகள் ஓர் அணி நிர்வாகம் கோப்பை வெல்லாமல் ஒருவரையே கேப்டனாக வைத்துக்கொண்டு இருக்க மாட்டார்கள்” என்றார்.
கடந்த ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட கவுதம் கம்பீர், மோசமான தோல்விகள் மற்றும் புவர் பேட்டிங் காரணமாக, தொடரின் பாதியில் பதவியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து, இளம் வீரர் ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கம்பீரின் கருத்துக்கு எதிராக விராட் ரசிகர்களும் சமூக தளங்களில் குதிக்க, கம்பீர் மற்றும் இதர வீரர்களின் (தோனி) ரசிகர்கள் கம்பீருக்கு ஆதரவாக மல்லுக்கட்டி வருகின்றனர்.