9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
பிப்ரவரி 19 ஆம் தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும், முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடரின் முக்கியமான இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் பிப்ரவரி 23 ஆம் தேதி அமீரகத்தில் உள்ள துபாயில் நடக்க உள்ளது. இந்தப் போட்டிக்கு முன் பிப்ரவரி 20 ஆம் தேதி வங்கதேசத்தையும், மார்ச் 2 ஆம் தேதி நியூசிலாந்தையும் இந்திய அணி எதிர்கொள்கிறது.
காரசார விவாதம்
இந்நிலையில், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் 2-வது விக்கெட் கீப்பர் சேர்ப்பு குறித்து தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் (பி.சி.சி.ஐ) தேர்வாளர்களுக்கு இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் முடிவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கே.எல் ராகுல் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடினார். ஆனால், இரண்டாவது தேர்வு கீப்பராக இருந்த ரிஷப் பண்ட்டுக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கம்பீர் ராகுல் அணியின் முதல் தேர்வு கீப்பராக இருப்பார் என்று தெரிவித்திருந்தார். இது இந்திய அணியில் ரிஷப் பண்ட்டின் இடம் குறித்த கவலையை எழுப்பியது.
மறுபுறம், ஷ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு சிறப்பான முறையில் திரும்பியுள்ளார். இங்கிலாந்து தொடரில், அவர் 181 ரன்கள் எடுத்தார், இந்தியாவின் இரண்டாவது அதிக ரன்கள் எடுத்த வீரர் ஆனார். இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்சனைகளுக்கு அவரது அற்புதமான ஆட்டம் தீர்வாக அமைந்துள்ளது.
இந்த சூழலில், ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் தக்கவைப்பது குறித்தும், இரண்டாவது தேர்வு விக்கெட் கீப்பர் இடம் குறித்தும் தேர்வுக் கூட்டத்தில் காரசாரமான விவாதம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு எந்த மாதிரியான ஆடும் லெவன் அணி இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.