Advertisment

களத்தில் வார்த்தைப் போர்... வீடியோ போட்ட ஸ்ரீசாந்த்; மறைமுக பதில் கொடுத்த கம்பீர்!

ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியின் போது முன்னாள் கவுதம் கம்பீருக்கும் ஸ்ரீசாந்துக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

author-image
WebDesk
New Update
Gautam Gambhir Cryptic Post After Sreesanth outpoured video Legends League Cricket Tamil News

ஸ்ரீசாந்த் கம்பீர் உடன் ஏற்பட்ட மோதல் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். கவுதம் கம்பீர் மறைமுகமான குறிப்பை வெளியிட்டுள்ளார்.

gautam-gambhir | sreesanth: ஓய்வு பெற்ற முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள், அனுபவ வீரர்கள் என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இணைந்து விளையாடும் லெஜண்ட்ஸ் லீக் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ராஞ்சி, டேராடூன், ஜம்மு, விசாகப்பட்டினம், சூரத் உள்ளிட்ட நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது. நவம்பர் 18ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டி நாளை மறுநாள் சனிக்கிழமையுடன் நிறைவடைகிறது. 

Advertisment

இந்த தொடரில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற நிலையில், அர்பனைஸர்ஸ் ஐதராபாத், மணிபால் டைகர்ஸ், இந்தியா கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ் உள்ளிட்ட நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன. சதர்ன் சூப்பர்ஸ்டார்ஸ், பில்வாரா கிங்ஸ் அணிகள் தகுதிச்சுற்றோடு வெளியேறின.

ஐ.பி.எல் பாணியில் குவாலிபயர் மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் நடைபெற்றது. இதில் முதல் குவாலிபயர் போட்டியில், சுரேஷ் ரெய்னா தலைமையிலான ஹைதராபாத் அணி, முகமது கைப் தலைமையிலான மணிபால் டைகர்ஸ் அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு சென்றது. மணிபால் அணி இரண்டாவது குவாலிபயர் போட்டிக்கு சென்றது. 

ஸ்ரீசாந்த் - கம்பீர் மோதல் 

இந்நிலையில், ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் (எல்.எல்.சி) தொடரில் எலிமினேட்டர் போட்டி நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதில் கவுதம் கம்பீர் தலைமையிலான இந்தியா கேப்பிடல்ஸ் - பார்தீவ் படேல் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் சூரத்தில் மோதின. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்திய இந்தியா கேப்பிடல்ஸ் 2வது குவாலிபயர் போட்டிக்கு தகுதிபெற்றது. 

இந்த நிலையில், இந்த ஆட்டத்தின் போது முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான கவுதம் கம்பீர் - ஸ்ரீசாந்த் மோசமான வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளனர். இருவருக்கும் இடையே நடந்த கடும் வாக்குவாத மோதல் தற்போது சமூக வலைதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

இப்போட்டியின் போது கவுதம் கம்பீருக்கும் ஸ்ரீசாந்துக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஸ்ரீசாந்த் ஓவரில் தொடர்ந்து, சிக்ஸரையும், பவுண்டரியையும் கம்பீர் அடித்தார். அப்போது, ஸ்ரீசாந்த் அவரை வம்புக்கு இழுத்ததாக தெரிந்தது. அதன்பின், ஓவர் முடிந்த பின்னர் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

ஸ்ரீசாந்த் வீடியோ

இந்நிலையில், ஸ்ரீசாந்த் கம்பீர் உடன் ஏற்பட்ட மோதல் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில்,"Mr. Fighter (கவுதம் கம்பீர்) உடன் என்ன நடந்தது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எப்போதும் தனது சக வீரர்கள் அனைவருடனும் சண்டையிடுபவர் அவர். எந்த காரணமும் இல்லாமல் சண்டையிடுவார், வீரு பாய் (சேவாக்) உட்பட தனது சொந்த நாட்டின் மூத்த வீரர்களைக் கூட அவர் மதிக்கவில்லை. அதுதான் இன்றும் நடந்தது. எதுவுமில்லை. ஆத்திரமூட்டும் வகையில், அவர் என்னை மிகவும் முரட்டுத்தனமான வகையில் பேசினார். அதை கவுதம் கம்பீர் சொல்லியிருக்கக் கூடாது.

உங்கள் சொந்த சக ஊழியர்களை மதிக்கவில்லை என்றால், மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில் என்ன பயன் இருக்கிறது? ஒளிபரப்பில் கூட விராட் பற்றி கேட்டால், அவர் அவரைப் பற்றி பேசுவதில்லை, வேறு எதையாவது பற்றி பேசுகிறார், நான் இன்னும் விரிவாக செல்ல விரும்பவில்லை. என் மனம் புண்பட்டுவிட்டது, என் குடும்பம் புண்பட்டுள்ளது, என் அன்பானவர்கள் புண்பட்டுள்ளனர் என்று சொல்ல விரும்புகிறேன். அவர் சொன்ன வார்த்தை, நான் ஒரு கெட்ட வார்த்தையோ, அவரை துஷ்பிரயோகம் செய்தோ எந்த வார்த்தையையும் பயன்படுத்தவில்லை, அவர் வார்த்தைகளை சொல்லிக்கொண்டே இருந்தார். அவர் எப்போதும் செய்வதுதான் இது" என்று ஸ்ரீசாந்த் கூறினார். 

கம்பீர் மறைமுக பதில் 

இந்த நிலையில், கவுதம் கம்பீர் இன்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் மறைமுகமான குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், 'சிரியுங்கள், உலகம் முழுவதும் கவனம் செலுத்தும் போது!" என்று பதிவிட்டுள்ளார்.

கவுதம் கம்பீர் மற்றும் ஸ்ரீசாந்த் ஆகிய  இரண்டு இந்திய வீரர்களும் 2007 டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வெற்றிகளில் தங்கள் பங்களிப்பை வழங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Gautam Gambhir Sreesanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment