மீண்டும் ஒரு அசத்தலான ஆட்டத்தால், தான் இந்திய அணிக்கு தகுதியான நபர் என்பதை நிரூபித்திருக்கிறார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சஞ்சு சாம்சன். நேற்றைய ஆட்டத்தில் இவர் 42 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார். இவரின் ஆட்டம், கிங்ஸ் லெவன் பஞ்சாபிற்கு எதிரான, 224 என்ற கடுமையான இலக்கை சேஸ் செய்து வெற்றிபெற உதவியது. இந்த சேஸ் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத சேஸாக மாறியது.
இதற்கிடையே, காங்கிரஸ் எம்பியான சசிதரூர், சஞ்சுவின் ஆட்டத்தை பார்த்துவிட்டு நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில், ``ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி முற்றிலும் நம்பமுடியாத வெற்றி!. நான் ஒரு தசாப்தமாக சஞ்சு சாம்சனை அறிந்திருக்கிறேன். 14 வயதில் சஞ்சுவிடம் சொன்னேன். அவர் ஒரு நாள் அடுத்த எம்.எஸ். தோனியாக இருப்பார் என்று. அந்த நாள் இதோ. இந்த ஐ.பி.எல்லில் அவரது இரண்டு அற்புதமான இன்னிங்ஸ்களுக்குப் பிறகு, உலகத்தரம் வாய்ந்த வீரர் வந்துவிட்டார் என்பது உங்களுக்குத் தெரியும்" என்று பாராட்டி பதிவிட்டிருந்தார்.
ஆனால் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர் சசி தரூரின் கூற்றை மறுத்துள்ளார். சசி தரூரின் டுவீட்டை, டேக் செய்து, ``சஞ்சு சாம்சன் யாராகவும் இருக்க தேவையில்லை. அவர் இந்திய கிரிக்கெட்டில் `சஞ்சு சாம்சன்' ஆக இருப்பார்." என்று பதிவிட்டு இருக்கிறார். இதற்கிடையில், சஞ்சு சாம்சன் இந்த ஐபிஎல்லில் சிறந்த பார்மில் இருக்கிறார். விளையாடிய 2 போட்டிகளில் 159 ரன்கள் எடுத்துள்ளார், அதில் சிஎஸ்கேவுக்கு எதிராக 74 ரன்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"