Virat Kholi | Gautam Gambhir: இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக வலம் வந்தவர் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர். இந்திய அணி 2007 உலகக் கோப்பை மற்றும் 2011 உலகக் கோப்பை வெல்ல அவர் முக்கிய பங்காற்றினார். 2016ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த அவர், இந்திய அணிக்காக 58 டெஸ்டில் 4154 ரன்களையும், 147 ஒருநாள் மற்றும் 37 டி20 போட்டிகளில் முறையே 6144 மற்றும் 783 ரன்களையும், எடுத்துள்ளார்.
ஐ.பி.எல் தொடரிலும் தனது ஆதிக்கத்தை செலுத்திய கம்பீர், 154 போட்டிகளில் 3404 ரன்களை குவித்துள்ளார். அவரது தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். இதன்பிறகு, அரசியலிலும் அடியெடுத்து கம்பீர், 2019 நாடாளுமன்ற தேர்தலில் டெல்லி கிழக்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு எம்.பி ஆனார்.
இதையடுத்து, மீண்டும் கிரிக்கெட் பக்கம் தனது கவனத்தை திருப்பிய அவர், கடந்த 2022 சீசனில் ஐ.பி.எல் தொடரில் புதியதாக சேர்க்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசராக கம்பீர் பணியாற்றினார். அவரது வழிகாட்டுதலில் லக்னோ கடந்த 2 சீசன்களில் பிளே ஆஃப்க்குள் நுழைந்தது. இந்த சூழலில் தான், கடந்த சீசனின் போது, அவருக்கும் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலிக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.
நவீன் உல் ஹக் -ஆல் ஏற்பட்ட இந்த மோதலில், ஆடுகளத்திற்குள் கம்பீர் - கோலி ஆகிய இருவரும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்துடன், லக்னோ அணியுடன் கம்பீர் சென்ற மைதானங்கள் முழுதும் அவருக்கு எதிரான முழக்கங்கள் ஒலித்தன. ஐதராபாத்தில் கோலி ரசிகர்கள் டக்-அவுட்டில் அமர்ந்திருந்த கம்பீரை நோக்கி, கையில் கிடைத்தவற்றைக் கொண்டு எறிந்தனர். இதேபோல், நவீன் உல் ஹக் -வும் கோலி ரசிகர்களால் புறக்கணிக்கப்பட்டார். மேலும், சமூக வலைதளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார்.
ஆனால், இந்த ஆண்டு நடந்த தொடரின் போது கம்பீர் - கோலி - நவீன் உல் ஹக் ஆகிய மூவரும் சமரசம் செய்து கொண்டனர். இது பற்றிய பேசிய கோலி, "எனது நடத்தையால் மக்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனர். நான் நவீனை கட்டிப்பிடித்தேன், மறுநாள் கவுதி பாய் (கவுதம் கம்பீர்) வந்து என்னைக் கட்டிப்பிடித்தார். உங்கள் மசாலா முடிந்துவிட்டது, அதனால் நீங்கள் கொந்தளிக்கிறீர்கள். நாங்கள் இனி குழந்தைகள் இல்லை," என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், கோலி உடனான தனது நட்பு உறவை கவுதம் கம்பீர் வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் ஸ்போர்ட்ஸ்கீடாவிடம் பேசுகையில், "யதார்த்தம் என்பது உண்மையில் வெகு தொலைவில் உள்ளது. விராட் கோலி உடனான எனது உறவு இந்த நாட்டிற்குத் தேவையில்லாத ஒன்று. தன்னை வெளிப்படுத்தவும், அந்தந்த அணிகளின் வெற்றிக்கு உதவவும் என்னைப் போலவே அவருக்கும் உரிமை உள்ளது. எங்களது நட்பு உறவு பொதுமக்களுக்கு மசாலா கொடுப்பதற்காக அல்ல. " என்று அவர் கூறினார்.
இந்த சீசனில், கவுதம் கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசராக செயலாற்றிய நிலையில், அவரது ஊக்கத்திலும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலும் சென்னையில் நடந்த இறுதிப் போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தி 3வது முறையாக கொல்கத்தா சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது. கொல்கத்தாவின் வெற்றியைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட இருப்பதாக உறுதியான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வரும் முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் பதவிக்காலம் வருகிற ஜூன் 2 முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
The coach's significance in one's life, their guidance, and relentless training shape the future of any person, both on and off the field. So choose the coach and institution wisely…
— Sourav Ganguly (@SGanguly99) May 30, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.