இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது.
போட்டி தொடங்குவதற்கு முன்பு, முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் முகமது அசாருதீன் மணி அடித்து, ஆட்டத்தை துவக்கி வைத்தார். இந்த செயலை இந்திய கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து கம்பீர் தனது ட்விட்டரில், "ஈடனில் இந்தியா வென்றிருக்கலாம். ஆனால், என்னை மன்னிக்கவும். பிசிசிஐ, கிரிக்கெட் நிர்வாகக் குழு மற்றும் பெங்கால் கிரிக்கெட் வாரியம் ஆகியவை தோற்றுவிட்டன. இந்த சம்பவம் அதிர்ச்சியாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அசாருதீன், 1992, 1996, 1999 என தொடர்ந்து 3 உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்திச் சென்றார். கடந்த 2000-ஆம் ஆண்டில் சூதாட்ட விவகாரம் ஒன்றில் அசாருதீனுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டிய பிசிசிஐ, அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாடிய அசாருதீனுக்கு, சாதகமாக தீர்ப்பளித்தது ஆந்திர உயர் நீதிமன்றம். அசாருதீன் குற்றமற்றவர் என தீர்ப்பளித்தது. எனினும், அவர் மீதான தடையை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக நீக்கவில்லை.
இந்நிலையில், கம்பீர் இவ்வாறு விமர்சித்திருப்பதற்கு அரசியல் ரீதியாகவும் காரணம் இருக்கலாம் என கூறப்படுகிறது. சமீபகாலமாக கம்பீர் பாஜகவில் இணையப் போவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பாஜக தரப்பில் கூட, கம்பீருக்கு டெல்லி மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு உள்ளதால், அவரை வேட்பாளராக முன்னிறுத்த பாஜக விரும்புகிறது என தெரிவிக்கப்பட்டது.
விரைவில், இதுகுறித்த அறிக்கை வெளிவரலாம் என்றும் கூறப்படுகிறது. அதுவரை, அரசியல் நிலவரங்களை கம்பீர் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும். அதன் ஒரு பகுதியாகவே, காங்கிரஸ் கட்சிக்காரரான அசாருதீனை, கம்பீர் விமர்சித்து இருக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.