Gautam Gambhir Tamil News: சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் 2023 தொடரின் போது, பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சுனில் கவாஸ்கர், கபில்தேவ், வீரேந்திர சேவாக் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோர் பிரபல பான் மசாலா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 'வெள்ளி முலாம் பூசப்பட்ட ஏலச்சி'-யை விளம்பரப்படுத்துவதைக் காண முடிந்தது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், விளம்பரங்களில் பான் மசாலா தயாரிப்புகளை அதன் மற்ற தயாரிப்புகள் மூலம் ப்ரோமோஷன் செய்யும் நட்சத்திர வீரர்களை கடுமையாக சாடியுள்ளார். மேலும், வளர்ந்து வரும் இளம் வீரர்கள் தங்களின் முன்மாதிரியான வீரர்களை சரியாக தேர்ந்தெடுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக கம்பீர் நியூஸ் 18-க்கு அளித்த பேட்டியில், “ஒரு கிரிக்கெட் வீரர் பான் மசாலா விளம்பரம் செய்வார் என்று என் வாழ்நாளில் நான் நினைத்ததில்லை. இது அருவருப்பானது மற்றும் ஏமாற்றமளிக்கிறது. அதனால்தான் நான் சொல்கிறேன், உங்கள் முன்மாதிரி வீரர்களை கவனமாக தேர்ந்தெடுங்கள். அவர்கள் என்ன உதாரணம் காட்டுகிறார்கள் பார்த்தீர்களா?.
ஒருவர் அவர்களின் பெயரால் அல்ல, ஆனால் அவர்கள் செய்யும் வேலையால் அங்கீகரிக்கப்படுகிறார். கோடிக்கணக்கான குழந்தைகள் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பான் மசாலா விளம்பரம் செய்வதில் கிடைக்கும் பணம் முக்கியமில்லை. பணம் சம்பாதிக்க இன்னும் பல வழிகள் உள்ளன.
இதுபோன்ற விஷயங்களைச் செய்வதை விடவும், பெரிய சம்பள காசோலையை விட்டுவிடவும் உங்களுக்கு தைரியம் இருக்க வேண்டும்.
நானுக்கும் இதுபோன்ற விளம்பரங்களில் நடித்து பணம் சம்பாதித்து இருக்கலாம். ஆனால் நான் அதை விட்டுவிட்டேன். ஏனென்றால் நான் எப்போதும் எனக்கு தகுதியானதைப் பெற வேண்டும் என்று நம்புகிறேன். பான் மசாலா விளம்பரங்களிலும் நடிக்க சச்சின் டெண்டுல்கருக்கு கூட ரூ.20 முதல் 30 கோடி வரை கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த பான் மசாலா விளம்பரங்களுக்கு அவர் 'நோ' என்று சொல்லிவிட்டார். அவர் தனது தந்தையிடம் இதுபோன்ற விஷயங்களில் ஈடுபட மாட்டேன் என்று உறுதியளித்தும் இருந்தார். அதனால்தான் அவர் ஒரு முன்மாதிரியாக இருக்கிறார், ”என்று கம்பீர் கூறியுள்ளார்.
கம்பீரிடம் கேட்கப்பட்ட கேள்வியிலோ அல்லது அவரது பதிலிலோ எந்த கிரிக்கெட் வீரரின் பெயரும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil