யூ ஆர் கிரேட் கம்பீர்! அனைவரையும் நெகிழ வைத்த கிரிக்கெட்டர்!

ஆணாக இருப்பதும் பெண்ணாக இருப்பதும் விஷயமல்ல, மனிதநேயத்தோடு, மனிதர்களாக இருப்பதுதான் முக்கியம்

கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தன்னைப் பெண்ணாக அலங்கரித்துக்கொண்டு திருநங்கைகளுக்கான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக ஏற்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்த நிலையில், தன்பாலின உறவு தவறில்லை என்று கடந்த வாரம் தீர்ப்பளித்தது. இதை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் வரவேற்றிருந்தார். ரக்ஷா பந்தன் பண்டிகையின் போது திருநங்கைகளிடம் ராக்கி கயிறு கட்டி தனது சகோதரத்துவத்தை கம்பீர் வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

இந்நிலையில் டெல்லியில் திருநங்கைகள் மட்டும் பங்கேற்கும் ‘ஹிஜாரா ஹப்பா’ எனும் விளையாட்டுப் போட்டி, கலைநிகழ்ச்சிகள் நேற்று தொடங்கியது. கடந்த 7 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைக்க கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட கம்பீர் திருநங்கைகளுடன் இணைந்து தன்னையும் பெண்ணாக அலங்காரம் செய்து கொண்டார். நெற்றியில் திலகமிட்டு, கையில் வளையல் அணிந்து, உதட்டில் சாயமிட்டு, துப்பட்டா அணிந்து பெண்ணாக மாறி விளையாட்டுப் போட்டிகளை கம்பீர் தொடங்கி வைத்தார்.

அந்த படங்களை ட்விட்டரில் பதிவிட்ட கவுதம் கம்பீர் அது குறித்து கூறுகையில், ”ஆணாக இருப்பதும் பெண்ணாக இருப்பதும் விஷயமல்ல, மனிதநேயத்தோடு, மனிதர்களாக இருப்பதுதான் முக்கியம். திருநங்கைகள் அபினா அஹிர், சிம்ரன் சாஹிக் ஆகியோருடன் இணைந்து விளையாட்டு நிகழ்ச்சிகளை தொடங்கி வைப்பதில் பெருமை கொள்கிறேன்.

என்னுடைய கையில் அவர்கள் ராக்கி கயிறு கட்டி என்னைச் சகோதரராக ஏற்றுக்கொண்டனர். நானும் அவர்களை சகோதரிகளாக ஏற்றுக்கொண்டேன். நீங்களும் அவர்களை சகோதரிகளாக ஏற்பீர்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது கம்பீரின் மனிதநேயமும், அவர் பெண் வேடமிட்ட படங்களும் வைரலாகி வருகின்றன.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close