Gautam Gambhir - Dinesh Karthik - Rishabh Pant Tamil News: 8-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கவுள்ள இந்தத்தொடரில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கின்றன.
இந்நிலையில், இந்த உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை கடந்த வாரத்தில் பிசிசிஐ அறிவித்தது. அதன்படி, கேப்டன் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆசிய கோப்பை தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார்.
இந்த தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இரண்டு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மென்கள் அணியில் இடம்பிடித்துள்ளனர். இதில் பண்ட் கடந்த ஆண்டு முதல் இந்திய அணியின் அனைத்து வடிவங்களிலும் முக்கிய வீரராக இருந்து வருகிறார். அதே நேரத்தில் தினேஷ் கார்த்திக், கடந்த இந்தியன் பிரீமியர் லீக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்காக தனது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணியில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
சமீபத்தில் முடிவடைந்த ஆசியக் கோப்பையில், பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் பண்ட்டுக்கு பதில் தினேஷ் கார்த்திக் ஆடும் லெவனில் இடம் பிடித்தார். இருப்பினும், பண்ட்டுக்கு அதன்பிறகு நடந்த ஆட்டங்களில் வாய்ப்பு வழங்கப்பட்டது. குறிப்பாக, பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 போட்டிகளில் அவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. ஆனால், அவர் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை. அதே நேரத்தில், தினேஷ் கார்த்திக் இரண்டு ஆட்டங்களுக்கும் வெளியில் பெஞ்சில் அமர்ந்திருந்தார். பிறகு, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இருவரும் இணைந்து விளையாடினர். அந்த ஆட்டத்தில் விக்கெட் கீப்பராக பண்ட் இருந்தார்.
இப்படியாக இந்திய அணியில் இருக்கும் ஒரு இடத்திற்கு 2 வீரர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. தற்போது இதில் யாருக்கு எதிர்வரும் உலக கோப்பை தொடருக்கான ஆடும் இந்திய அணியில் இடம் கிடைக்கும்? என்கிற கேள்வி எழுந்துள்ளது. ரிஷப் பண்ட் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தாத நிலையில், தினேஷ் கார்த்திக்-க்கு தான் ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படும் என்று சிலரும், அணியின் டாப் ஆடரில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் என்ற வகையில் பண்ட்-க்கு வாய்ப்பு இருக்கிறது என்று சிலரும் பரபரப்பாக விவாதித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் ஆகிய இருவருமே ஆடும் லெவனில் விளையாட வாய்ப்புள்ளதா? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பேசியுள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான தொடருக்கு முன்னதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கம்பீரிடம் இந்த கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அவர் பின்வருமாறு பதிலளித்துள்ளார்.
"உங்களால் அது முடியாது. நீங்கள் அதைச் செய்தால், நீங்கள் ஆறாவது பந்துவீச்சாளரைத் தவறவிடுவீர்கள். மேலும் நீங்கள் உலக கோப்பை மாதிரியான பெரிய தொடருக்கு உங்களால் ஐந்து பந்துவீச்சாளர்களுடன் செல்ல முடியாது. உங்களுக்கு பேக்-அப் வீரர்கள் தேவை. அப்படி இருவரையும் அணிக்குள் ஆட வைக்க வேண்டுமென்றால் சூர்யகுமார், ராகுல் ஆகிய இருவரில் ஒருவரை டிராப் செய்து ரிஷப்பை தொடக்க வீரராக களம் இறக்கலாம்.
வெறும் 10-12 பந்துகள் மட்டும் பேட்டிங் ஆடும் வீரரை நீங்கள் எப்படி தேர்ந்தெடுப்பீர்கள். அவர் உங்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மேலும் தினேஷ் கார்த்திக், துரதிருஷ்டவசமாக, மேல்வரிசையில் இறங்க விரும்புவதில்லை. ஆனால் எந்த வரிசையிலும் பேட் செய்யும் தகுதி ரிஷப் பண்டுக்கு உள்ளது. என்னை பொறுத்தமட்டில் பண்ட் கண்டிப்பாக ஆடும் லெவனில் இருக்கவேண்டும்.
எனது பேட்டிங் வரிசையில் ரிஷப் பண்ட் நிச்சயம் இருப்பார். மிடில் ஆர்டரில் இடது கை ஆட்டக்காரர் தேவை என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. குறிப்பாக இந்தியா போன்ற ஒரு அணிக்கு அது தேவையில்லை. ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கான தேவையாகவே அது இருக்க வேண்டும். அந்தத் தகுதி பண்டிடம் இருக்கிறது. எனவே, பண்ட் 5வது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும். ஹர்திக் பாண்டியா 6, அக்ஸர் 7 மற்றும் அஷ்வினை 8- வது வீரராக இறக்கலாம். அதைத் தொடர்ந்து மூன்று சீமர்கள் உள்ளார்கள்" இவ்வாறு கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி-20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அதன் முதல் போட்டியில் வரும் அக்டோபர் 23 ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இப்போட்டி, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. வழக்கம் போல் இந்த போட்டிக்கு இருநாட்டு மற்றும் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.