Gautam Gambhir | Indian Cricket Team: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். அவரது பதவிக்காலம் வருகிற ஜூன் 2 முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், இந்திய ஆடவர் கிரிக்கெட்டின் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடலை தொடங்கிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ - BCCI), தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கடந்த 13 ஆம் தேதி அழைப்பு விடுத்தது. இதற்கான காலக்கெடு நேற்று திங்கள்கிழமையுடன் (மே 27) முடிவுற்றது. இந்த பதவிக்கு 3000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கிடையில், இந்திய அணி தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க சி.எஸ்.கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங், டெல்லி கேபிட்டல்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர், குஜராத் டைட்டன்ஸ் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உள்ளிட்டோருடன் பி.சி.சி.ஐ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.
ஆனால், தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க, எந்தவொரு முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா விளக்கம் அளித்தார். இதனால், வெளிநாட்டு பயிற்சியாளர்களை இந்திய அணி நிர்வாகம் விரும்பவில்லை என்று கூறப்பட்டது.
இதனையடுத்து, கவுதம் கம்பீரை பயிற்சியாளராக கொண்டு வரும் திட்டத்தில் பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா இருப்பதாக தகவல் வெளியாகியது. ஆனால், இதுதொடர்பாக கவுதம் கம்பீர் இதுவரை எந்த கருத்தும் வெளியிடவில்லை. இந்த நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்படுவது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.சி.சி.ஐ-யின் மூத்த நிர்வாகிகளுக்கு மிகவும் நெருக்கமான ஒரு ஐ.பி.எல் அணியின் முக்கிய நிர்வாகி கிரிக்பஸ் இணைய பக்கத்திற்கு அளித்துள்ள பேட்டியில், கம்பீரின் நியமனம் முடிந்துவிட்டது என்றும் அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறியுள்ளார்.
ராகுல் டிராவிட்டிற்குப் பிறகு தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்க விரும்புவதாக கம்பீர் ஏற்கனவே தனது நெருங்கமானவர்களிடம் கூறியுள்ளார். அவரது நோக்கைத்தை கொல்கத்தா அணியின் இணை உரிமையாளர் ஷாருக்கான் அறிந்திருந்தார் என்றும் கூறப்படுகிறது.
அண்மையில் நடைபெற்று முடிந்த 17-வது ஐ.பி.எல் டி20 தொடரில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில், அந்த அணியின் வெற்றிக்கு மூளையாக கம்பீர் செயல்பட்டு இருந்தார். கே.கே.ஆர் அணியின் ஆலோசகராக பொறுப்புக்கு வந்த முதல் ஆண்டிலேயே அவர் தனது அணி கோப்பையை முத்தமிட உதவினார். அவர் தலைமையிலான கொல்கத்தா அணி ஏற்கனவே 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.