Gautam Gambhir | Indian Cricket Team | BCCI: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 9-வது டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், இந்திய ஆடவர் சீனியர் கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் பற்றி பேச்சுக்கள் வேகமெடுத்துள்ளன. இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட்-டின் பதவிக்காலம் இந்த டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது.
இதனையடுத்து. இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடலை கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தொடங்கியது. தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கடந்த மே 13 ஆம் தேதி அழைப்பு விடுத்த நிலையில், அதற்கு ஐ.பி.எல் இறுதிப் போட்டிக்கு அடுத்த நாளான மே 27 அன்று காலக்கெடுவாக இருந்தது.
ஐ.பி.எல் போட்டிகளுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளிவந்ததால், ஐ.பி.எல் அணிகளுக்கு பயிற்சியளித்து வரும் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் ஆகிறார்கள் என பேச்சு அடிப்பட்டது. ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லங்கர் போன்றோரை தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க பி.சி.சி.ஐ அணுகியதாக அவர்களே தெரிவித்து இருந்தனர். ஆனால், அப்படி எந்தப் பேச்சு வார்த்தையும் நடக்கவில்லை என்றும், குறிப்பாக ஆஸ்திரேலியர்களிடம் அணுகவே இல்லை என்றும் தெளிவுபடுத்தினார் செயலாளர் ஜெய் ஷா.
இதனிடையே, 17-வது ஐ.பி.எல் டி20 தொடர் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வகை சூடியது. அந்த அணியின் வெற்றிக்கு மூளையாக செயல்பட்டு இருந்த கவுதம் கம்பீரை தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ஜெய் ஷா அணுகியதாக தகவல் வெளிவந்தது. இப்படியான சூழலில், ஒரு நிகழ்ச்சியில் பேசிய கம்பீர், 'சொந்த நாட்டின் தேசிய அணிக்கு பயிற்சியளிப்பதை விட பெரிய கவுரவம் எதுவும் இல்லை." என்று கூறினார்.
"நான் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருக்க விரும்புகிறேன். உங்கள் தேசிய அணிக்கு பயிற்சியளிப்பதை விட பெரிய மரியாதை எதுவும் இல்லை. நீங்கள் 140 கோடி இந்தியர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ளவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள்." என்றும் கம்பீர் கூறி, இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் அவர் தான் என்பதை உறுதிப்படுத்தினர். இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த ஒரே விண்ணப்பதாரரான முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் இன்று செவ்வாய்கிழமை நேர்காணலுக்கு ஆஜராகியுள்ளார். அவரை ஜூம் வீடியோ கால் மூலம் கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சி.ஏ.சி) நேர்காணல் செய்துள்ளார். முதல் சுற்று முடிந்த நிலையில், அடுத்த சுற்று நாளை நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கன்டிஷன் போட்ட கம்பீர்
இந்த நிலையில், இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணலுக்கு ஆஜராகிய கவுதம் கம்பீர், இந்திய அணியின் பொறுப்பை ஏற்கும் முன் சில பி.சி.சி.ஐ சில கன்டிஷன்களை போட்டுள்ளார். அதனை இந்திய அணி நிர்வாகம் ஏற்கனவே ஏற்றுக்கொண்டு அவரை நியமிக்க ஆர்வமாக உள்ளதாக தெரிகிறது.
அதில் அவர் போட்ட முதல் கன்டிஷன் என்னவென்றால், அணியின் மீது முழு அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்பதாகும். இரண்டாவதாக ஒயிட்-பால் மற்றும் ரெட்-பால் போட்டிகளுக்கு என தனி அணிகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதாகும். இந்த இரண்டு கோரிக்கைகளும் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு மிக முக்கியம் வாய்ந்தாகப் பார்க்கப்படுகிறது. அவரின் இன்னும் சில கோரிக்கைகள் என்ன என்பது விரைவிலே வெளிவரும் எனத் தெரிகிறது.
இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் ஜூலை 2024 முதல் டிசம்பர் 2027 வரை 3 ஃபார்மெட்டுகளிலும் அணியை வழிநடத்துவார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரான கம்பீர், 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியிலும், 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை அணியிலும் முக்கிய வீரராக இருந்தார்.
இந்த ஆண்டு அவர் கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட நிலையில், பொறுப்புக்கு வந்த முதல் ஆண்டிலேயே அவர் தனது அணி கோப்பையை முத்தமிட உதவினார். அவரது தலைமையிலான கொல்கத்தா அணி ஏற்கனவே 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.