சென்னையின் எஃப்சி : சென்னையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்.சி அணியை 3 -1 என்ற கோல் கணக்கில் எஃப்.சி கோவா அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.
5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னையின் எஃப்.சி, கோவா அணிகள் மோதின.
ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் கோவா அணியின் எடு பெடியா முதல் கோலை அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கோவா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 53-வது நிமிடத்தில் கோவா அணியின் பெரான் கரோமினாஸ் ஒரு கோலும், 80-வது நிமிடத்தில் மோர்டடா பால் ஒரு கோலும் அடித்தனர். இதனால் கோவா அணி 3 – 0 என முன்னேறியது.
கடைசியாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் இறுதியில் சென்னையி எஃப்.சி அணி சார்பில் ஈலி சபியா ஒரு கோல் அடித்தார்.
இறுதியில், சென்னையின் எப்.சி அணியை 3-1 என்ற கணக்கில் கோவா அணி வீழ்த்தி வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்தது.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தோல்வியை குறித்து சென்னையின் எஃப்சி-யின் தலைமை பயிற்சியாளர் ஜான் க்ரெகோரி கூறுகையில், “நிறைய நேரம் நாங்கள் பொறுப்பாக விளையாடவில்லை. நல்ல டிஃபென்சிவ் வீரர்கள் இருந்தும், டிஃபென்சிவாக நாங்கள் நிறைய தவறு செய்தோம்.
மூன்று கோலையும் தடுத்திருக்கலாம். ஆனால், நாங்கள் அனைத்து வாய்ப்பையும் தவறவிட்டோம். இரண்டாவது பாதியை விட, முதல் பாதியில் வீரர்கள் சற்று சிறப்பாக விளையாடினர். 1-0 கோலிலேயே நன்கு தடுத்தும் வந்தனர்.
நான் ஏற்கனவே சொன்னது போல் கோவா அணி ஐஎஸ்எல் தொடரில் ஒரு சிறந்த அணியே. தற்போது அவர்கள் மீண்டும் அதை நிரூபித்துள்ளனர். நாங்கள் அடுத்த முறை சிறப்பாக விளையாடி கோவா அணியை வீழ்த்துவோம் என நம்புகிறேன். தற்போதும் எங்களுடைய ஒரே நோக்கம் முதல் நான்கில் முடித்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதே.” என்று தெரிவித்துள்ளார்.
இதுவரை இரண்டு போட்டிகளில் ஆடியுள்ள சென்னை அணி, இரண்டிலும் தோற்றுள்ளது.
சென்னையின் எஃப்சி அடுத்து நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியை சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் அக்டோபர் 17ம் தேதி எதிர்கொள்கிறது.