‘எனது பயணம் அவ்வளவு எளிதாக இல்லை’! – ஜெர்மனி வீரர் மரியோ கோமஸ் உருக்கம்

நான் ஓய்வு முடிவை அறிவிக்க இதுவே நேரம்

By: August 7, 2018, 2:09:31 PM

ஆசைத் தம்பி

Mario Gomez : ஜெர்மனி கால்பந்து அணியின் மூத்த வீரரான மரியோ கோமஸ் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில், ஜெர்மனி அணி முதல் சுற்றோடு வெளியேறியது. உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில், 1938ம் ஆண்டுக்கு பிறகு, முதல் சுற்றோடு ஜெர்மனி வெளியேறுவது இதுவே முதன் முறையாகும். அப்போது ஜெர்மனியை ஹிட்லர் ஆட்சி செய்துகொண்டிருந்தார். பலம் வாய்ந்த ஜெர்மனி அணி, ஹிட்லர் ஆட்சிக்கு பிறகு, இப்போது தான் முதல் சுற்றோடு வெளியேறியது.

உலகக் கோப்பை முடிந்து ஒரு மாதமே ஆகியிருக்கும் நிலையில், ஜெர்மனியின் நட்சத்திர வீரர் மெசூட் ஓஸில் கடந்த ஜூலை 23ம் தேதி கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால், ஓய்வுக்கு அவர் சொன்ன காரணம் தான் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஜெர்மனி அணியில் நிறவெறி இருப்பதாக ‘பகீர்’ குற்றச்சாட்டை ஓசில் முன்வைத்து இனி ஜெர்மனி அணிக்கு ஆடப்போவதில்லை என்று அறிவித்தார்.

துருக்கி அதிபர் எர்டோகனுடன் மெசூட் ஆனால் ஓசில் கூறும்போது, ‘என் பெற்றோரின் நாடு துருக்கி.. எனவே புகைப்படம் எடுத்துக் கொண்டேன்’ என்றார். இந்த சர்ச்சையை தொடர்ந்து, ஜெர்மன் கால்பந்து கழகத்தில் இவருக்கு ஆதரவு இல்லாததையடுத்து ஓசில் மேலும் கூறுகையில், ‘வென்றால் நான் ஜெர்மானியன் தோற்றால் நான் புலம்பெயர்ந்தவன்’ என்று அனைவரும் நினைக்கிறார்கள் என்று சாடினார். ‘எனக்கு 2 இருதயங்கள், ஒன்று ஜெர்மனி இன்னொன்று துருக்கி’ என்றும் அவர் கூறினார். இவர் ஜெர்மனியின் நிறவெறியைக் காரணம் காட்டி அந்த அணிக்கு ஆடமாட்டேன் என்று கூறியதையடுத்து, துருக்கி நீதியமைச்சர் அப்துல்ஹமித் குல், ‘மெசூட் ஓஸில் முடிவை நான் வரவேற்கிறேன், பாசிசம் எனும் வைரஸுக்கு எதிராக அவர் அடித்த இந்த கோல் பாராட்டப்பட வேண்டியது’ என்று கூறியது மேலும் சர்ச்சையை தீவிரப்பத்தியது. மேலும் ஐரோப்பாவில் பரவிவரும் இஸ்லாமிய எதிர்ப்புக்கு ஓசில் சரியான அடி கொடுத்துள்ளார் என்றும் துருக்கி அமைச்சர் ஒருவர் கூறினார்.

ஓசில் புகைப்படம் எடுத்துக் கொண்டதே ஓசில் மீதான நிறவெறி தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது. இது ஜெர்மனி மீதான இவரது விசுவாசத்துக்கு எதிராகப் பார்க்கப்பட்டது.

ஆனால் ஜெர்மனி சான்சலரான அஞ்சேலா மெர்கெல் ஓசிலைப் பாராட்டி, ‘ஜெர்மனி அணிக்கு இவரது பங்களிப்பு ஏராளம், இப்போது அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் அது மதிக்கப்பட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

2014 உலகக்கோப்பையை ஜெர்மனி வென்ற போது முக்கிய வீரராக வலம் வந்தவர் மெசூட் ஓஸில். 2018 ரஷ்ய உலகக்கோப்பையில் முதல் சுற்றிலேயே ஜெர்மனி வெளியேறியதற்கு மெசூட் ஓஸிலின் சொதப்பலான ஆட்டமும் ஒரு காரணம் தான்.

இந்நிலையில், மற்றொரு அதிர்ச்சிகரமான விஷயமாக, 33 வயதான ஜெர்மனி கால்பந்து வீரர் மரியோ கோமஸ் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார்.

2014 உலகக்கோப்பை கால்பந்து தொடரில், ஜெர்மனி இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என வீழ்த்தியதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் மரியோ கோமஸ். நடந்து முடிந்த 2018 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலும், இவர் அணியில் இடம்பிடித்திருந்தார். ஆனால் ஜெர்மனி லீக் சுற்றோடு வெளியேறியது.

இந்நிலையில், தனது ஓய்வு குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள கோமஸ், “ரஷ்யாவில் நடந்த உலகக் கோப்பை தொடரில் நான் மிகப்பெரிய கனவுடன் களம் இறங்கினேன். ஆனால், நாங்கள் அனைவரும் தோற்று முதல் சுற்றோடு வெளியேறிவிட்டோம். என்னுடைய காலம் முழுவதும், நான் ஜெர்மனி அணிக்காக விளையாட அனுமதிக்கப்பட்டேன். ஆனால், 2014ல் கோப்பையை வென்றதை நான் இப்போது நினைத்து பார்க்கையில், நான் எனது அணியை எவ்வளவு மிஸ் செய்கிறேன் என்றும், எனக்கு எவ்வளவு பெரிய மரியாதை கிடைத்திருக்கிறது என்பதையும் உணர்ந்தேன்.

நான் இந்த தருணங்களை, நினைவுகளை அனுபவிக்க விரும்புகிறேன். எப்போதும் நீங்கள் வெற்றியாளனாகவே வெளியே செல்ல முடியாது. தேசிய அணியில் என்னுடைய காலக்கட்டம் அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. வெற்றிப் பயணமாகவும் இல்லை. ஆனால், அழகாக இருந்தது.

தற்போது நான் ஓய்வு முடிவை அறிவிக்க இதுவே தகுந்த நேரமாகும். இது திறமையுள்ள ஏராளமான இளைஞர்களுக்கு, அவர்களுடைய கனவை நனவாக்க வாய்ப்பாக அமையும்” என்றார்.

2007-ல் இருந்து ஜெர்மனி அணிக்காக விளையாடி வந்த கோமஸ், 78 போட்டிகளில் விளையாடி 31 கோல் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Gomez joins ozil in retiring from germany duty

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X