டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து சீனியர் வீரரான கவுதம் காம்பிர் விடுவிக்கப்பட்டார். ஸ்ரேயாஸ் அய்யர் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
ஐபிஎல்-2018 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முந்தைய சீஸன்களில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் செயல்பாடு குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. எனவே இந்த முறை தலைமை ‘கோச்’சாக ஆஸ்திரேலியாவின் வெற்றிகரமான கேப்டனாக இருந்த ரிக்கி பாண்டிங் நியமனம் செய்யப்பட்டார்.
அதேபோல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்து இரு முறை ஐபிஎல் கோப்பையை வென்றவரான கவுதம் காம்பீரை ஏலம் எடுத்த டெல்லி டேர் டெவில்ஸ், அவரை அணியின் கேப்டனாகவும் நியமித்து பெருமைப்படுத்தியது. ஆனாலும் இதுவரை டெல்லி டேர் டெவில்ஸ் மோதிய 6 போட்டிகளில் 5-ல் தோல்வியை தழுவி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.
குறிப்பாக கேப்டன் கவுதம் காம்பீர் 6 போட்டிகளில் மொத்தம் 85 ரன்களே எடுத்தார். இதில் தொடக்க ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக அவர் அடித்த 55 ரன்களும் அடங்கும். 2-வது ஆட்டத்தில் அவருக்கு பேட்டிங் வாய்ப்பு இல்லை. அதன்பிறகு முறையே 15, 8, 3, 4 என சொற்ப ரன்களை எடுத்திருக்கிறார்.
இந்தச் சூழலில் இன்று (ஏப்ரல் 25) செய்தியாளர்களை சந்தித்த கவுதம் காம்பீர், கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார். அணி நிர்வாகத்தின் அழுத்தம் எதுவும் இல்லாமல், தானே இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அணியில் செயல்பாட்டுக்கு முழுக்க தானே பொறுப்பேற்பதாகவும் காம்பீர் கூறினார்.
கவுதம் காம்பீருக்கு பதிலாக இளம் வீரர் ஸ்ரேயாஸ் அய்யர், டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஐபிஎல் இந்த சீஸனில் எஞ்சிய போட்டிகளுக்கு ஸ்ரேயாஸ் அய்யர் டெல்லி அணியின் கேப்டனாக செயல்படுவார். ‘இது தனக்கு கிடைத்த கவுரவம்’ என ஸ்ரேயாஸ் அய்யர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறுகையில், ‘காம்பீரின் முடிவை நான் மதிக்கிறேன்’ என குறிப்பிட்டார்.