இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் (டபிள்யு.எப்.ஐ.,) தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங் இருந்தார். பா.ஜ.க-வின் முன்னாள் எம்.பி-யான இவர் மீது பாலியல் புகார் அடுக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பிரிஜ் பூஷன் சரண் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அவர் மீது தொடரப்பட்டுள்ள பாலியல் வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார்.
பிரிஜ் பூஷன் பதவி விலகிய நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு நெருக்கமான சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டார். இது மீண்டும் சர்ச்சையாக மாறியதைத் தொடர்ந்து, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு கடந்த டிசம்பர் 24, 2023-ல் தடை விதித்தது.
இதனைத் தொடர்ந்து, மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க உயர் மட்ட கமிட்டியை, இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்தது. தற்காலிக குழுவிற்கு பூபிந்தர் சிங் பஜ்வா தலைமை தாங்கினார். ஹாக்கி ஒலிம்பிக் வீரர் எம்.எம்.சோமயா உள்ளிட்டோர் உறுப்பினராக இருந்தனர்.
இந்நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் மீதான இடைநீக்கத்தை விளையாட்டு அமைச்சகம் ரத்து செய்துள்ளது. கூட்டமைப்பின் தேசிய விளையாட்டு கூட்டமைப்பு என்ற அந்தஸ்தையும் மீட்டெடுத்தும் இருக்கிறது. மேலும், அனைத்து சர்வதேச போட்டிகளும் நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என விளையாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக விளையாட்டு அமைச்சகம் எழுதி இருக்கும் கடிதத்தில், “ஸ்பாட் வெரிஃபிகேஷன் கமிட்டியின் கண்டுபிடிப்புகள், இந்திய மல்யுத்த கூட்டமைப்பால் மேற்கொள்ளப்பட்ட இணக்க நடவடிக்கைகள் மற்றும் இந்திய விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களின் பெரிய நலனைக் கருத்தில் கொண்டு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் இதன்மூலம் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI) 24.12.2023 தேதியிட்ட உத்தரவின் மூலம் இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்கிறது மற்றும் பின்வரும் வழிமுறைகளுடன் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் மல்யுத்தத்திற்கான தேசிய விளையாட்டு கூட்டமைப்பு என அதன் அங்கீகாரத்தை மீட்டெடுக்கிறது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு இடைக்கால தடை காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும், மேலும் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளிடையே அதிகார சமநிலையைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் முடிவெடுக்கும் செயல்பாட்டில் சரிபார்ப்புகள் மற்றும் சமநிலையை வழங்க வேண்டும், மேலும் இந்த செயல்முறை 4 வாரங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்.
அலுவலக பொறுப்பாளராக தேர்ந்தெடுக்கப்படாத எந்தவொரு நபரும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு இடைநீக்கம் செய்யப்பட்ட/நிறுத்தப்பட்ட சம்பளம் பெறும் அதிகாரிகளும் கூட்டமைப்பு மற்றும் அதன் இணைப்பு பிரிவுகளில் இருந்து முற்றிலும் விலகி இருக்க வேண்டும். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் கமிட்டி இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் உறுதிமொழியை வழங்க வேண்டும். எந்தவொரு உறுதிமொழியையும் மீறினால், விளையாட்டு குறியீட்டின் கீழ் நடவடிக்கை உட்பட பொருத்தமான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து சர்வதேச நிகழ்வுகளுக்கான தேர்வும் விளையாட்டு குறியீட்டின் தற்போதைய விதிகள் மற்றும் ஐக்கிய உலக மல்யுத்த கூட்டமைப்பால் அவ்வப்போது வெளியிடப்பட்ட பிற சமீபத்திய அறிவுறுத்தல்களின்படி சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் செய்யப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
விளையாட்டு விதிகள், நல்லாட்சி கொள்கைகள் மற்றும் விளையாட்டு வீரர் நலக் கொள்கைகளைப் பின்பற்றுவதை இந்திய மல்யுத்த கூட்டமைப்பு உறுதி செய்யும்." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.