10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்த தொடரில் இன்று பிற்பகல் 3:30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடித்தில் தொடங்கி நடைபெற்று வரும் 35வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
டாஸ் வென்ற குஜராத் பவுலிங் - டெல்லி பேட்டிங்
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணியில், கருண் நாயர், அபிஷேக் பொரேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் அதிரடியாக ஆடிய பொரேல், 9 பந்துகளில், 3 பவுண்டரி 1 சிக்சருடன் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கே.எல்.ராகுல், வந்த வேகத்தில் அதிரடியில் அசத்தினாலும் அவரால் நீண்ட நேரம் ரன் குவிக்க முடியவில்லை. 14 பந்துகளை சந்தித்த அவர் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார்
அடுத்து களமிறங்கிய கேப்டன் அக்சர் பட்டேல், நிதானமான விளையாட, மறுமனையில் தொடக்க வீரர் கருண் நாயர் 18 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஸ்டப்ஸ் 31, அஷூதேஷ் சர்மா 37, கேப்டன் அக்சர் பட்டேல் 39 என அனைத்து வீரர்களும் ஓரளவு தங்கள் பங்களிப்பை கொடுத்ததால், டெல்லி அணி 200 ரன்களை கடந்தது. நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்துள்ளது.
ஒரு வீரர் கூட 40 ரன்களை கடக்கவில்லை என்றாலும், டெல்லி அணி 200 ரன்களை கடந்து அசத்தியுள்ளது. ஸ்டார்க் 2, குல்தீப் 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர். குஜராத் அணி தரப்பில், பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா, சாய் கிஷோர், அர்ஷத் கான், சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்
தொடர்ந்து 204 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியில், சாய் சுதர்சன், சுப்மான் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் சுப்மான் கில் 7 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த பட்லர் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய, சுதர்சன், 21 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து 3-வது விக்கெட்டுக்கு இணைந்த பட்லர் – ரூதர்ஃபோர்ட் ஜோடி, சிறப்பாக விளையாடி குஜராத் அணியை வெற்றியை நோக்கி நகர்த்தியது. குறிப்பாக, அதிரடியில் அசத்திய ஜோஸ் பட்லர், ஸ்டார்க் வீசிய ஒரே ஓவரில் தொடர்ந்து 5 பவுண்டரிகள் அடித்து அசத்தினார். அரைசதம் கடந்த பட்லர், தொடர்ந்து அதிரடியாக விளையாடிய குஜராத் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ரூதர்ஃபோர்ட் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு, 119 ரன்கள் சேர்த்த நிலையில், ரூதர்ஃபோர்ட் 34 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 43 ரன்கள் எடுத்து 19-வது ஓவரில் ஆட்டமிழந்தார். இதனால் கடைசி ஓவரில், வெற்றிக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலையில், ஸ்டார்க் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்சர் 2-வது பந்தில் பவுண்டரி அடித்த ராகுல் தெவாட்டிய அணியை வெற்றிபெற வைத்தார். அதிரடியாக விளையாடி சதத்தை நோக்கி முன்னேறிய, பட்லர், 54 பந்துகளில் 1 பவுண்டரி 4 சிக்சருடன் 97 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
19.2 ஓவர்களில் குஜராத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் குஜராத் அணி முதல்முறையாக 200 ரன்களுக்கு மேல் சேசிங் செய்து வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம், குஜராத் அணி 7 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. டெல்லி அணியும் 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது
இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:
டெல்லி கேபிடல்ஸ்: அபிஷேக் போரல், கருண் நாயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல் (கேப்டன்), அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோகித் சர்மா, முகேஷ் குமார்.
குஜராத் டைட்டன்ஸ்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், ராகுல் தெவாடியா, ரஷித் கான், அர்ஷத் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், இஷாந்த் சர்மா.
நேருக்கு நேர்
ஐ.பி.எல்.லில் குஜராத் மற்றும் டெல்லி அணிகள் 5 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இந்த 5 போட்டிகளில் டெல்லி அணி 3 முறை வென்றுள்ளது, அதே நேரத்தில் குஜராத் 2 முறை வெற்றி பெற்றுள்ளது.