GT vs MI | Gujarat Titans vs Mumbai Indians Score IPL 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா நேற்று முதல் தொடங்கியுள்ளது. மே 26 வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில், இந்த தொடரில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 5வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.
இந்தப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இரு அணி விளையாடும் வீரர்களின் பட்டியல்
குஜராத் டைட்டன்ஸ்: ஷுப்மன் கில் (கேப்டன்), விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், விஜய் சங்கர், டேவிட் மில்லர், அஸ்மத்துல்லா ஒமர்சாய், ராகுல் தெவாடியா, ரஷித் கான், உமேஷ் யாதவ், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், ஸ்பென்சர் ஜான்சன்
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, நமன் திர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், ஷம்ஸ் முலானி, பியூஷ் சாவ்லா, ஜெரால்ட் கோட்ஸி, ஜஸ்பிரிட் பும்ரா, லூக் வுட்
குஜராத் பேட்டிங்
குஜராத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சஹா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். கில் அதிரடி காட்ட, சஹா நிதானமாக ஆடினார். 4 பவுண்டரிகள் அடித்த சஹா 19 ரன்களில் பும்ரா பந்தில் போல்டானார். அடுத்து சாய் சுதர்சன் களமிறங்கி பொறுமையாக விளையாடினார். மறுபுறம் அதிரடியாக ஆடிவந்த கில் 3 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் அடித்து, 31 ரன்களில் அவுட் ஆனார். அவர் சாவ்லா பந்தில் ரோகித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த அஸ்மத்துல்லா ஒரு சிக்சர் ஒரு பவுண்டரியுடன் 17 ரன்களில் அவுட் ஆனார். அவர் ஜெரால்டு பந்தில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து களமிறங்கிய மில்லர் 12 ரன்களில் வெளியேறினார். அவர் பும்ரா பந்தில் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்தார். அப்போது 16 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 133 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்ததாக விஜய் சங்கர் களமிறங்கிய நிலையில், மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த சாய் சுதர்சன் 45 ரன்களில் அவுட் ஆனார். அவர் பும்ரா பந்தில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ராகுல் தெவாதியா ஒரு சிக்சர் 2 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவர் ஜெரால்டு பந்தில் நமனிடம் கேட்ச் கொடுத்தார்.
அடுத்து களமிறங்கிய ரஷீத் கான் 4 ரன்கள் எடுக்க குஜராத் அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. விஜய் சங்கர் 6 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் பும்ரா 3 விக்கெட்களையும், ஜெரால்டு 2 விக்கெட்களையும், சாவ்லா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
மும்பை பேட்டிங்
மும்பை அணியில் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். 4 பந்துகளைச் சந்தித்த இஷான் கிஷன் டக் அவுட் ஆனார். அவர் அஸ்மத்துல்லா பந்தில் சஹாவிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து களமிறங்கிய நமன் திர் அதிரடியாக ஆடினார். 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் எடுத்தவர் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் அஸ்மத்துல்லா பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார்.
இதனையடுத்து ரோகித் உடன் பிரேவிஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். இதனையடுத்து மும்பை அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்தது.
இந்த ஜோடி அதிரடியாக ஆடி 77 ரன்கள் சேர்த்த நிலையில், ரோகித் அவுட் ஆனார். ரோகித் 43 ரன்களில் சாய் கிஷோர் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார். இதனையடுத்து திலக் வர்மா களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் 3 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடித்த பிரேவிஸ் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் மோகித் சர்மா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதனையடுத்து திலக் உடன் டிம் டேவிட் இணைந்தார். ஒரு பவுண்டரியுடன் 11 ரன்கள் எடுத்த டிம் டேவிட், மோகித் பந்தில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்தநிலையில், மும்பை அணி வெற்றிக்கு 2 ஓவர்களில் 27 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்திக் பாண்டியா களமிறங்கிய நிலையில், முதல் பந்தை சிக்சருக்கு விரட்டிய திலக் வர்மா, இரண்டாவது பந்தில் அவுட் ஆனார். திலக் வர்மா 25 ரன்கள் எடுத்து, ஸ்பென்சர் ஜான்சன் பந்தில் அபினவ் மனோகரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதனையடுத்து ஜெரால்டு களமிறங்கி ஒரு ரன்னில் அவுட் ஆக, கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. உமேஷ் யாதவ் முதல் பந்தை ஹர்திக் சிக்சருக்கு தூக்கினார். இரண்டாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் 3 ஆவது பந்தில் தெவாதியாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய சாவ்லா 4 ஆவது பந்தில் டக் அவுட் ஆனார். அவர் ரஷீத் கானிடம் கேட்ச் கொடுத்தார்.
5 ஆவது பந்தில் பும்ரா ஒரு ரன் எடுத்தார். கடைசி பந்தில் சாம்ஸ் ஒரு ரன் எடுக்க, மும்பை அணி தோல்வியை தழுவியது. மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் குஜராத் 6 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பெற்றது. குஜராத் தரப்பில் அஸ்மத்துல்லா, உமேஷ், மோகித், ஜான்சன் தலா 2 விக்கெட்களையும், சாய் கிஷோர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
கடந்த சீசனில் நடந்த இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸிடம் தோல்வியைத் தழுவியது. மறுபுறம், மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது தகுதிச் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. முந்தைய சீசனில் குஜராத் அணியை வழிநடத்திய ஹர்திக் பாண்டியா தனது தாய் வீடான மும்பை அணிக்கு திரும்பி அணியை கேப்டனாக வழிநடத்துகிறார். அதே நேரத்தில், அதிரடி பேட்ஸ்மேன் சுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட உள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் என இரு அணிகளின் கேப்டன்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டு புதிய கேப்டன்களும் வெற்றியுடன் தொடரைத் தொடங்க நினைப்பர். ஹர்திக் ஏற்கனவே தான் கேப்டனாக வழிநடத்திய குஜராத் அணிக்கு எதிராக கேப்டனாக களமாட இருக்கிறார். இதேபோல், மும்பையின் வெற்றிகரமான கேப்டன் ரோகித் நீக்கம், பும்ரா, சூரியகுமார் ஆகியோரை கேப்டன் பதவிக்கு பரிசீலிக்கப்படாதது போன்ற அணிக்குள் இருக்கும் உள்விவகாரங்கள் பூதாகரமாக வெடிக்கிறதா என்பதைப் பார்ப்பதில் சுவாரசியமாக இருக்கும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.