Gujarat Giants vs U Mumba PKL 2023 | pro-kabaddi-league: 12 அணிகள் களமாடி வரும் 10-வது புரோ கபடி லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த சனிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று 2 ஆட்டங்கள் நடைபெற்றது. இதில் இரவு 8 மணிக்கு நடந்த ஆட்டத்தில் புனேரி பல்தான் அணி 37-33 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது.
இதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடந்த ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 32-30 என்ற புள்ளி கணக்கில் பெங்களுரு புல்ஸ் அணியை வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து புரோ கபடி லீக் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் - யு மும்பா அணிகள் மோதியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் சமபலத்துடன் மோதியதால் யாருக்கு வெற்றி என்று கணிக்க முடியாத வகையில் இரு அணிகளும் சமமான புள்ளிகளை பெற்று வந்தன. ஒரு கட்டத்தில் சற்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி இறுதியில் 39-37 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை ருசித்துள்ளது.
குஜராத் அணி சார்பில் ஜக்லன் 11 புள்ளிகளும், சன்க்ரோயா 9 புள்ளிகளும், குலியா 7 புள்ளிகளும், அட்ராச்செல்லி 5 புள்ளிகளும், சவ்ரவ் குலியா 2, சொம்பிர் ஒரு புள்ளியும் எடுத்தனர். யு மும்பா அணி தரப்பில் குமன் சிங், ஸாபர்சோமன் ஆகியோர் தலா 10 புள்ளிகள் பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி தான் விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வியை சந்திக்காமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
நேருக்கு நேர்
குஜராத் ஜெயண்ட்ஸ் - யு மும்பா அணிகள் இதுவரை 12 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் குஜராத் ஜெயண்ட்ஸ் 7 முறையும், யு மும்பா 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்தது.
கடந்த சீசனில் முதல் ஆட்டத்தில் யு மும்பா 37-29 என்ற கணக்கில் ஜெயண்ட்ஸை தோற்கடித்தது. அதே நேரத்தில் 2வது சந்திப்பில் 38-36 என்ற கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸ் தோல்விக்கு பழிவாங்கியது. கடந்த ஐந்து போட்டிகளில், டையில் முடிந்த ஒரு போட்டி உட்பட இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளைப் பெற்று சமனில் உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“