Police busts gang in Gujarat running Fake IPL T20 league Tamil News: குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள வாட்நகரில் கடந்த ஜூலை 7 மதியம் மேகமூட்டத்துடன் கூடிய ஈரப்பதமான காற்று வீசியது. அந்த நேரத்தில் அங்குள்ள மைதானத்தில் 'சென்னை ஃபைட்டர்ஸ்' மற்றும் 'காந்திநகர் சேலஞ்சர்ஸ்' ஆகிய இரு அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி அரங்கேறியது. இதில் முதலில் பேட் செய்த சென்னை ஃபைட்டர்ஸ் 14.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் வலது கை பேட்ஸ்மேனான "ஹசன் அலி"அதிரடியாக ஒரு ஸ்ட்ரைட் டிரைவ் அடிக்கிறார். அப்போது மைதானத்தில் உள்ள நடுவர், அது பவுண்டரி என சைகை காட்டுகிறார். இது அங்குள்ள கேமராவில் பதிவாகிறது. ஆனால் உண்மையில் பந்து பவுண்டரி எல்லைக் கயிற்றை எட்டுவதை கேமராவில் பதிவான வீடியோவில் காட்டப்படவில்லை.
அந்த சமயத்தில் தான், மெஹ்சானா காவல்துறையின் சிறப்பு செயல்பாட்டுக் குழு (SOG) "போலி கிரிக்கெட் போட்டி" தொடர்பாக சோதனை நடத்த மைதானத்திற்குள் நுழைகிறது. அதைப்பார்த்த கள நடுவர் ஆவர்மாக பவுண்டரிக்கு சைகை காட்டுவதை நிறுத்தி விட்டு, தனது வாக்கி-டாக்கியை ஒரு வீரரிடம் ஒப்படைத்துவிட்டு அவரது உயிரைக் காப்பாற்ற ஓடுகிறார். இந்த டி20 போட்டி யூடியூப்பில் நேரலையில் ஒளிபரப்பட்ட நிலையில், போலீசார் இடைநிறுத்தத்திற்கு பிறகு போட்டி எதிர்பாராதவிதமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மெஹ்சானா காவல்துறையினர் பேசுகையில், "ரஷ்யாவில் பந்தயம் கட்டுபவர்களை ஏமாற்றுவதற்காக ஒரு கும்பல் "போலி கிரிக்கெட் போட்டி" வடிவத்தில் ஒரு கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. இதில் விளையாடும் வீரர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 400 விதம் வழங்கப்படுகிறது. கிரிக்கெட் மைதானம் உண்மையில் வட்நகரின் மொலிபூரில் உள்ள ஒரு விவசாய நிலம் ஆகும்.
அங்கு ரசிகர்கள் சத்தம் எழுப்புவதுபோல் (போலியாக) ஸ்பீக்கர் சிஸ்டம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஹர்ஷா போக்லேவைப் போல் வர்ணனை செய்ய ஒருவரை ஒளிபரப்பாளர்கள் நியமித்துள்ளனர். மேலும், ஒவ்வொரு டெலிவரியிலும் பந்தய வாய்ப்புகள் குறித்து வீரர்களுக்கு அனுப்ப வாக்கி-டாக்கி மூலம் நடுவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.
போட்டி, நடைமுறைகள், அமைப்பு, வீரர்கள், நடுவர்கள், பார்வையாளர்கள் என எல்லாமே ஃபிக்ஸ் செய்யப்பட்டது தான் என்று கூறியுள்ள மெஹ்சானா போலீசார், "பந்தயம் மூலம் நிறைய பணம் சம்பாதித்த" இந்த விரிவான மோசடியை நடத்திய வாட்நகரில் உள்ள மோலிபூரில் வசிக்கும் சோப் தாவ்தா, மஹ்மத் சாகிப் சைஃபி, மஹ்மத் அபு பக்கர் கோலு மற்றும் சாதிக் தாவ்தா ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது குற்றவியல் சதி, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகள் மற்றும் சூதாட்டத் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் இந்திய தண்டனைச் சட்டத்தின் 120பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
“ஒரு போலீஸ் குழு அந்த இடத்தைச் சோதனை செய்த பிறகு, விவசாய நிலத்தின் ஒரு பகுதி கிரிக்கெட் மைதானமாக மாற்றப்பட்டதைக் கண்டறிந்தோம், அங்கு ஆடுகளமாக வெள்ளை நிற பாய் போடப்பட்டுள்ளது. ஆடுகளத்திற்கு 90 டிகிரியில் கட்டப்பட்ட ஒரு சிறிய கேபினில் ஒற்றை கேமரா நிறுவப்பட்டுள்ளது. அதேசமயம் மைதானத்தின் மேற்குப் பகுதியில் இரண்டு எல்இடி டிவி திரைகளுடன் இரண்டு ஆண்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு திரையில் சென்னை ஃபைட்டர்ஸ் 103/3 என ஸ்கோர் காட்டப்பட்டது. மற்ற திரையில் டெலிகிராம் மெசஞ்சர் சேட்டிங் காட்டப்பட்டது. அங்கு பந்தய விகிதங்கள் கணிக்கப்பட்டன. நாங்கள் போட்டியை நிறுத்திவிட்டு, சென்னை ஃபைட்டர்ஸ் (சஞ்சய் தாக்கூர்) மற்றும் காந்திநகர் சேலஞ்சர்ஸ் (சுகாஜி தாகூர்) ஆகிய இரு அணிகளின் கேப்டன்களையும் விசாரித்தோம்.
இருவரும் வாட்நகரில் வசிப்பவர்கள் என்றும், கிரிக்கெட் விளையாடுவது போல் நடிக்க தினமும் 400 ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் எங்களிடம் கூறினார். வீரர்களுக்கு கிரிக்கெட் ஜெர்சிகள், கிட்கள் மற்றும் பிற உபகரணங்கள் வழங்கப்பட்டன, மேலும் ஒவ்வொரு பந்தையும் எப்படி விளையாட வேண்டும் என்று அவர்களுக்கு கட்டளையிட்ட இரண்டு நடுவர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர், ”என்று மெஹ்சானா எஸ்ஓஜியின் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஎன் ரத்தோட் தனது அதிகாரப்பூர்வ புகாரில் தெரிவித்தார்.
வாட்நகர் தாலுகாவைச் சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களை சோப் தாவ்தா என்பவர் தான் அழைத்து வந்ததாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஎன் ரத்தோட் தெரிவித்துள்ளார்.
“உள்ளூர் சிறுவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ 400 வழங்கியவர் சோப் தான், இந்தப் போட்டியை ஏற்பாடு செய்ய குலாம்பாய் மாசி ஒருவரின் விவசாய நிலத்தையும் வாடகைக்கு எடுத்தார். இதேபோல், இரண்டு நடுவர்களான மஹ்மத் கோலு மற்றும் சாதிக் தாவ்தா ஆகியோர் சோபியிடமிருந்து வாக்கி-டாக்கியில் அறிவுறுத்தல்களைப் பெற்றனர்.
ரஷியாவைச் சேர்ந்த ஆசிப் மஹ்மத் என்பவருடன் டெலிகிராம் செயலியில் தொடர்பில் இருந்ததாக சோப் எங்களிடம் தெரிவித்தார். அவர் போட்டியில் பந்தயம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து வந்தார். நான்காவது குற்றவாளியான மஹ்மத் சாகிப் சைஃபி, ரஷ்யாவைச் சேர்ந்த ஆசிப் மஹ்மதுவுடன் ஒருங்கிணைத்து, அவருக்கு நேரடி பந்தயக் கட்டணங்களைக் கொடுத்தார்." என்று ரத்தோட் கூறியுள்ளார்.
போலி கிரிக்கெட் தொடர் மோசடி குறித்து பேசியுள்ள மெஹ்சானா காவல்துறை கண்காணிப்பாளர் அச்சல் தியாகி, ரஷ்யாவில் அமர்ந்திருந்த ஆசிப் மஹ்மது தான் இந்த போலி கிரிக்கெட் ஊழலின் மூளையாக இருந்தார். இதே பிரிவுகளின் கீழ் ஆசிப் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கும்பல் ரஷ்யாவில் உள்ள ட்வெர் மற்றும் மாஸ்கோவில் இருந்து பந்தயம் கட்டியதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட கும்பலுக்கு ரூ. 3-4 லட்சத்தை கொடுத்தது ஆசிப் தான், மைதானத்தை தேடி, வீரர்கள், உபகரணங்கள் மற்றும் பிற பொருட்களை வாடகைக்கு எடுக்கச் சொன்னார். குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் ஆரம்பத்தில் பணம் எதுவும் சம்பாதிக்கவில்லை, ஆனால் அனைத்தும் சரியாக நடந்தால், அவர்களுக்கு மாதத்திற்கு 70,000 ரூபாய் வெகுமதியாக வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
வட்நகரில் இருந்து மொத்தம் 24 வீரர்களை இந்த கும்பல் விளையாட அழைத்து வந்துள்ளது. அவர்களை மாற்றி ஐந்து அணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து அணிகளுக்கும் வெவ்வேறு ஜெர்சிகள் அணிந்து விளையாடியுள்ளன. இந்த போலி கிரிக்கெட் போட்டி கடந்த 15 நாட்களாக நடந்து வருகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.