சிங்கப்பூரில் நடைபெற்ற செஸ் தொடரில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று இளம் சாம்பியன் என்ற சாதனையை சென்னையைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர் குகேஷ் படைத்துள்ளார். சீனாவை சேர்ந்த டிங் லிரேனை வீழ்த்தி, 18 வயதான குகேஷ் இந்தச் சாதனையைச் செய்துள்ளார். அவருக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும்வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு சார்பில் அவருக்கு ரூ.5 கோடி ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அம்பத்தூர் அருகே குகேஷ் படிக்கும் பள்ளியில் அவரை சக மாணவர்கள் ஊக்குவிக்கும் விதமாக வாழ்த்து தெரிவித்தனர். இதுதொடர்பாக அவரது பள்ளி ஆசிரியர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “குகேஷ் எங்கள் பள்ளியில் படிப்பது மிகவும் பெருமையாக உள்ளது. மாணவர்களின் திறமையை சிறுவயதிலேயே அறிந்து அவர்களை ஊக்குவிப்பதே எங்கள் பணி. ஒவ்வொரு மாணவர்களின் எதில் திறமையாக உள்ளது என்பதை அறிந்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம்.
குகேஷ் எங்கள் பள்ளியில் சேர்ந்தது உணர்ச்சிவசமான ஒன்று. முதலாம் வகுப்பு முதலே அவர் எங்கள் பள்ளியில் செஸ் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். சிறிய பரிசுகளை பெறுவதால் மிகவும் ஆர்வம் அடைந்து இன்று உலக அளவில் சாம்பியன் ஆகியுள்ளார். இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குகேஷ் ஊர் திரும்பும்போது பெரிய அளவில் விழா எடுப்போம். அவ்வப்போது தேர்வுகளில் பங்கேற்க முடியாமல் போனதால் அவர் தற்போதும் எங்கள் பள்ளியில் படிக்கிறார். 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்” என்று அவர் கூறினார்.
செய்தி: சக்தி சரவணன் - சென்னை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“