எப்போதாவது விளாசும் சூறாவளி மார்டின் கப்தில்! என்னா அடி!!

இதில் 12 பவுண்டரிகளும், 7 சிக்ஸர்களும் அடங்கும்

இங்கிலாந்தில் நடந்த கவுண்டி அணிகளுக்கு இடையிலான டி20 போட்டியில், நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில், 38 பந்துகளில் 102 ரன்கள் விளாசி, அணியை வெற்றிப்பெற வைத்தார்.

நார்த்தாம்டன் நகரில் உள்ள கவுண்டி மைதானத்தில் நேற்று வோர்செஸ்டர்ஷையர் அணிக்கும், நார்த்தாம்டன்ஷையர் அணிக்கும் இடையிலான டி20 போட்டி நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நார்த்தாம்டன்ஷையர் அணி, 188 ரன்கள் குவித்தது.

இதைத் தொடர்ந்து, 189 ரன்கள் எனும் சற்று கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய வோர்செஸ்டர்ஷையர் அணி, 13.1 ஓவர்களில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த மிரட்டலான வெற்றிக்கு சொந்தக்காரர் மார்டின் கப்தில்!.

வோர்செஸ்டர்ஷையர் அணியின் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய மார்ட்டின் கப்தில், எதிரணி வீரர்களின் பந்துவீச்சை ஆரம்பம் முதலே அடித்து நொறுக்கினார். 20 பந்துகளில் அரைசதமும், 35 பந்துகளில் சதமும் விளாச ஆடிப்போனது எதிரணி. இதில், 12 பவுண்டரிகளும், 7 சிக்ஸர்களும் அடங்கும். கப்திலுக்கு உறுதுணையாக பேட் செய்த கிளார்க் 33 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார். பவர்ப்ளே ஓவரில் வோர்செஸ்டர்ஷையர் அணி 97 ரன்கள் குவித்தது. 10 ஓவர்களில் 162 ரன்கள் விளாசியது.

இதனால், த்ரில்லான ஆட்டமாக போகும் என கணிக்கப்பட்ட போட்டி, 40 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

அதிரடி வீரரான கப்தில், கன்சிஸ்டன்சி விஷயத்தில் கஞ்சத்தனம் மிக்கவர். தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை அவர் எப்போதும் வெளிப்படுத்தியதில்லை. ஆனால், நின்றுவிட்டால், எதிரணி பவுலர்கள் கதை முடிந்தது என்று அர்த்தம்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

×Close
×Close