Harbhajan Singh | Gary Kirsten | T20 World Cup 2024: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பாபர் களமாடிய அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, டி20 உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறி இருக்கிறது. தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான், 2-வது ஆட்டத்தில் இந்தியாவிடம் வீழ்ந்தது. இதனால் கடைசி 2 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் அந்த அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னெற முடியவில்லை.
இந்நிலையில், இந்த தொடருக்கு சில வாரங்களுக்கு முன்பாக, 2011 உலகக்கோப்பை வென்றபோது இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட கேரி கிறிஸ்டன், பாகிஸ்தான் வெள்ளைப்பந்து (ஒருநாள் மற்றும் 20 ஓவர்) அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். அவர் ஐ.பி.எல் தொடருக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளராக கடந்த 2022 முதல் செயலாற்றி வரும் நிலையில், இந்த ஆண்டு தொடருக்கு மத்தியில் பாகிஸ்தான் அணிக்கு ஜூம் வீடியோ கால் மூலம் பயிற்சி அமர்வுகள் பற்றிய ஆலோசனைகளை வழங்கி வந்தார்.
கேரி கிறிஸ்டனின் தலைமையிலான குஜராத் தொடக்க சீசனிலே சாம்பியன் பட்டத்தை வாகை சூடிய நிலையில், அவரது பயிற்சியின் கீழ் பாகிஸ்தான் அணியும் எழுச்சிபெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருடைய தலைமையிலும் எந்த முன்னேற்றத்தையும் சந்திக்காத பாகிஸ்தான் முதல் சுற்றுடன் வெளியேறி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியில் வீரர்கள் யாருமே ஒற்றுமையுடன் இல்லை என்றும், இதற்கு முன் இந்தியா போன்ற அணிகளில் வேலை செய்த தாம் பாகிஸ்தான் போன்ற அணியை பார்த்ததில்லை என்றும் கேரி கிறிஸ்டன் கூறினார்.
பாகிஸ்தான் அணி பற்றி கேரி கிறிஸ்டன் பேசுகையில், "பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை. பொதுவாக நீங்கள் உங்களை ஒரு அணி என்று சொல்வீர்கள். ஆனால் அது (பாகிஸ்தான்) ஒரு அணியல்ல. ஏனெனில் நீங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவு கொடுப்பதில்லை. ஒவ்வொருவரும் பிரிந்துள்ளனர். நான் பல அணிகளுடன் வேலை செய்துள்ளேன். ஆனால் இது போன்ற சூழ்நிலையை பார்த்ததில்லை. எந்த சூழ்நிலைக்கு எந்த ஷாட்டை அடிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. எனவே இனிமேல் அந்த இடங்களில் முன்னேறுபவர்கள் மட்டுமே அணியில் சேர்க்கப்படுவார்கள். மற்றவர்கள் நீக்கப்படுவார்கள்" என்று கூறியிருந்தார்.
பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனின் இந்த பேச்சு வைரலாகி வரும் நிலையில், அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் பலரும் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில், பாகிஸ்தானில் தனது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும், இந்திய அணியை வழிநடத்த வருமாறும் கேரி கிர்ஸ்டனுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "அங்கு (பாகிஸ்தான்) நேரத்தை வீணாக்காதீர்கள் கேரி. மீண்டும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வாருங்கள். கேரி கிர்ஸ்டன் அரிய ரத்தினங்களில் ஒருவர். ஒரு சிறந்த பயிற்சியாளர், வழிகாட்டி, நேர்மையான மற்றும் எங்கள் 2011 அணியில் உள்ள அனைவருக்கும் மிகவும் அன்பான நண்பர். 2011 உலகக் கோப்பையை வென்ற எங்கள் பயிற்சியாளர். சிறப்பு மனிதர் கேரி." என்று அவர் பதிவிட்டுள்ளார்.
கேரி கிர்ஸ்டன் பாகிஸ்தான் வீரர்களின் உடற்பயிற்சி நிலை குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, திறன் மட்டத்தில் அணி மிகவும் பின்தங்கியிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்த பிறகு, "நிச்சயம் இது ஏமாற்றம் தரும் தோல்வி தான்" என்று கேரி கிர்ஸ்டன் தெரிவித்தார்.
Don’t waste ur time there Gary .. Come back to Coach Team INDIA .. Gary Kirsten One of the rare 💎.. A Great Coach ,Mentor, Honest nd very dear friend to all in the our 2011 Team .. our winning coach of 2011 worldcup . Special man Gary ❤️ @Gary_Kirsten https://t.co/q2vAZQbWC4
— Harbhajan Turbanator (@harbhajan_singh) June 17, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.