/indian-express-tamil/media/media_files/2025/09/01/harbhajan-singh-on-slapping-sreesanth-calls-lalit-modi-selfish-tamil-news-2025-09-01-17-20-42.jpg)
ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்த்தை அறைந்த சர்ச்சைக்குரிய வீடியோவை லலித் மோடி சில தினங்களுக்கு முன்பாக பகிர்ந்து இருந்தார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்றும் ஐ.பி.எல் தொடருக்கு இப்போது வயது 18. இத்தொடரில் ஏராளமான சர்ச்சைகள் அரங்கேறி இருக்கும் நிலையில், எந்தவொரு கிரிக்கெட் ரசிகராலும் எளிதில் மறந்து விட முடியாத சம்பவமாக ஹர்பஜன் சிங் - ஸ்ரீசாந்த் மோதல் பார்க்கப்படுகிறது. இந்த இரு முன்னணி வீரர்களும் 2007-ல் தொடக்க டி-20 உலகக்கோப்பை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்று இருந்தனர். இருவருமே தங்களது சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர்.
அதே உத்வேகத்துடன் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்றனர். ஆனாலும் இருவரும் வெவேறு அணிகளில் இடம் பிடித்தனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஸ்ரீசாந்த்-தும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஹர்பஜன் சிங்கும் ஆடினர். தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியின் போது, ஸ்ரீசாந்துக்கும் - ஹர்பஜன் சிங்கிற்கும் இடையே திடீரென உரசல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தின் கன்னத்தில் அறைந்தார். துடித்துப் போன ஸ்ரீசாந்த் களத்தில் அழுதத் தொடங்கினார். இது போட்டியை நேரலையில் பார்த்த ரசிகர்களை கண்கலங்க செய்தது. இந்த சம்பவம் அப்போது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
இருப்பினும், இது தொடர்பான வீடியோ காட்சிகள் எதுவும் வெளியாகவில்லை. அவை பெரும் சர்ச்சையை கிளப்பும் என்பதால், மறைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் அந்த சீசனில் எஞ்சிய 11 ஆட்டங்களிலும், 5 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட ஹர்பஜன் சிங்குக்கு தடை விதித்தது. இந்த சம்பவத்துக்கு அப்போதே ஹர்பஜன் வருத்தம் தெரிவித்தார். அண்மையில் கூட, ஸ்ரீசாந்த்தை அறைந்தது தொடர்பாக அவரின் மகள் கேட்ட அந்த வார்த்தை தனது இதயத்தை நொறுக்கி விட்டதாக அஸ்வின் உடனான உரையாடலின் போது ஹர்பஜன் சிங் கூறியிருந்தார்.
இந்த சூழலில் தான், சம்பவம் நடந்த 17 ஆண்டுகளுக்கு பிறகு, ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்த்தை அறைந்த அந்த சர்ச்சைக்குரிய வீடியோவை நேற்று முன்தினம் சனிக்கிழமை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் உடனான யூடியூப் உரையாடலின் போது, ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி பகிர்ந்தார். இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், சர்ச்சைக்குரிய வீடியோவை பகிர்ந்த லலித் மோடியை கடுமையாக சாடியுள்ள ஹர்பஜன் சிங், அவரை ஒரு சுயநலவாதி என குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஹர்பஜன் சிங் பேசுகையில்,"வீடியோ வெளியான விதம் தவறு. அது நடந்திருக்கக் கூடாது. அதன் பின்னால் ஏதோ சுயநல நோக்கம் இருக்கலாம். 18 வருடங்களுக்கு முன்பு நடந்த அந்த விஷயத்தை, மக்கள் மறந்துவிட்டார்கள். அதை அவர்கள் மக்களுக்கு மீண்டும் நினைவூட்டுகிறார்கள்.
என்ன நடந்ததோ அதை நினைத்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தோம், எல்லோருடைய மனதிலும் ஏதோ நடந்து கொண்டிருந்தது. தவறுகள் நடந்தன, அதைப் பற்றி நாங்கள் வெட்கப்படுகிறோம். அந்த வீடியோ வைரலாகி விட்டது. இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். நான் தான் தவறு செய்தேன் என பலமுறை கூறியிருக்கிறேன். மனிதர்கள் தவறு செய்கிறார்கள், நானும் ஒரு தவறு செய்தேன். நான் மீண்டும் தவறு செய்தால் என்னை மன்னிக்கும்படி விநாயகரிடம் கேட்டுள்ளேன்." என்று அவர் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.