yuzvendra-chahal | harbhajan-singh: இந்திய கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் தவிர்க்க முடியாதவராக வலம் வந்தார். குறிப்பாக தோனி, கோலி தலைமையிலான அணியில் அவருக்கென தனி இடம் இருக்கும். ஆனால், ரோகித் மற்றும் பயிற்சியாளர் ராகுல் வருகைக்குப் பிறகு ஆஃப் ஸ்பின்னரான சாஹலுக்கு தொடர்ந்து இடம் மறுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், தெளிவான காரணங்களை அணி நிர்வாகத்தில் இருந்து யாரும் இன்னும் கூறவில்லை.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், சாஹல் இந்திய அணியில் இருந்து தவிர்க்கப்படுவதற்கான காரணத்தை போகிற போக்கில் கொளுத்திப் போட்டுள்ளார். அவர் சொன்ன தகவல் தற்போது தீயாய் இணையத்தில் பரவி வருகிறது.
ஹர்பஜன் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், "யுஸ்வேந்திர சாஹல் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இருந்திருக்க வேண்டும். அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அது என் புரிதலுக்கு அப்பாற்பட்டது. அவர் யாருடனாவது சண்டை போட்டிருக்க வேண்டும் அல்லது யாரைப் பற்றியும் யாரிடமாவது வாய் தவறி பேசி இருக்க வேண்டும். இல்லையென்றால் ஏன் அவரை எந்த சூழ்நிலையிலும் அணியில் தேர்வு செய்யாமல் போக வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. திறமையைப் பற்றி மட்டுமே பேசினால், நிறைய இந்திய வீரர்கள் ஓய்வெடுப்பதால் இந்த அணியில் அவரது பெயர் இருந்திருக்க வேண்டும்.
ஆசியக் கோப்பையைப் போல் வெற்றிபெறும் பழக்கத்தை இந்திய அணி தொடர வேண்டும். ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தும் திறமை அவர்களிடம் உள்ளது. முதல் இரண்டு போட்டிகளுக்கு அணி சற்று பலவீனமாக உள்ளது. ஆனால் இந்த சற்று பலவீனமான அணியும் அவர்களுக்கு எதிராக முன்னேற முடியும் என்று நான் நம்புகிறேன்" என்று கூறினார்.
சொந்த மண்ணில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கு முன், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா பங்கேற்க உள்ளது. இத்தொடர் வருகிற 22ம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் இரண்டு ஆட்டங்களுக்கான இந்திய அணிக்கு கேப்டனாக கே.எல். ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் தவிர, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் போன்றோருக்கும் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“