இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், மும்பை இந்தியன்ஸ் வீரர் ஒருவரை இந்தியாவின் டி வில்லியர்ஸ் என்று புகழ்ந்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக வலம் வந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். கிரிக்கெட் போட்டியில் களத்தில் டி வில்லியர்ஸ் கையில் பேட் உடன் நிற்கிறார் என்றால் அவருக்கு பந்து வீசும் பந்து வீச்சாளர் பயப்படாமல் இருக்கவே முடியாது. அது வேகப் பந்தாக இருந்தாலும் சரி சுழற்பந்தாக இருந்தாலும் சரி பவுண்டரிகளையும் சிக்சர்களையும் அடித்து எதிரணியை கதிகலங்க வைப்பவர் டி வில்லியர்ஸ். அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடரில் விளையாடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதே போல, ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சூர்யகுமார் யாதவ் விளையாடி வருகிறார். சூர்யகுமார் யாதவ் ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் அதிரடி அதிரடியாக விளையாடி அசத்தி வருகிறார். இருப்பினும், சூர்யகுமார் யாதவுக்கு இன்னும் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில்தான் சூர்யகுமார் யாதவ் இந்தியவின் டி வில்லியர்ஸ் என ஹர்பஜன் சிங் புகழாரம் சூட்டியுள்ளார். சூர்யகுமார் யாதவ் கடந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 16 போட்டிகளில் விளையாடி 480 ரன்கள் குவித்துள்ளார். அவருடைய ஸ்டிரைக் ரேட் 145.01 ஆகும்.
இப்படி அதிரடியாக விளையாடும் சூர்யகுமார் யாதவ் அதே ஃபார்ம் உடன் விரைவில் இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், சூர்யகுமார் யாதவ் பற்றி குறிப்பிடுகையில், “சூர்யகுமார் யாதவ் தன்னைத்தானே சிறந்த கேம் சேஞ்சராக மாற்றிக்கொண்டு, மும்பை இந்தியன்ஸ்க்கு மேட்ச் வின்னராக திகழ்கிறார். அவருடைய பேட்டிங்கில் அதிகமாக பொறுப்பு எடுத்துக் கொள்கிறார்.
அவர் ஸ்டிரைக் ரேட் 100 வைத்துள்ளார். நீங்கள் ஸ்டிரைக் ரேட் 100 வைக்க வேண்டுமென்றால், முதல் பந்தில் இருந்து சிறப்பாக அடித்து விளையாட வேண்டும். அனைத்து வகையான ஷாட்டுகளை விளையாடும் அவரை தடுத்து நிறுத்துவது கடினம். கவருக்கு மேல் தூக்கி அடிக்கிறார்.
ஸ்வீப் ஷாட் சிறப்பாக விளையாடுகிறார். அதேபோல் சுழற்பந்து வீச்சையும், வேகப்பந்து வீச்சையும் விளாசுகிறார். அவர் இந்தியாவின் ஏபி டி வில்லியர்ஸ்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.