அமெரிக்காவுல நீங்க மேட்ச் நடத்தினாலும் என் தமிழினம் அங்கேயும் வரும்! - ஹர்பஜன் சிங்

புனேயில் நாளை நடைபெற உள்ள சென்னை vs ராஜஸ்தான் இடையேயான ஆட்டத்தை காண சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரயில் மூலம் இன்று புனே கிளம்பி சென்றனர்.

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, சென்னையில் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கடந்த 10ம் தேதி கடும் போராட்டங்கள் நடத்தின. அன்று சேப்பாக்கத்தில் நடந்த போட்டியின் மீது, சென்னை அணி வீரர்கள் மீது செருப்புகள் வீசப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சென்னையில் நடக்கவிருந்த போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டது. ஒருபக்கம், ஐபிஎல் போட்டிகளை சென்னையில் இருந்து மாற்றி, எங்கள் எதிர்ப்புகளை மத்திய அரசுக்கு உணர்த்தி விட்டோம் என்று ஒருபிரிவினர் கூற, மற்றொரு பக்கம் கிரிக்கெட்டிற்கும், போராட்டத்திற்கும் தொடர்பில்லை என்று, ரசிகர்கள் புனே சென்று கிரிக்கெட் பார்க்க இன்று கிளம்பிவிட்டனர். அதுவும் ஒரு ரயில் முழுக்க… சரியாக 1000 ரசிகர்கள்.

சிஎஸ்கே ரசிகர்கள் கிளப் மூலம் இந்த 1000 ரசிகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு போட்டியை காண ‘நன்கொடை டிக்கெட்டை’ சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் வழங்கியுள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கு “விசில்போடு” எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டது. இந்த எக்ஸ்பிரஸ் நாளை காலை 8.30 மணிக்கு புனே சென்றடையும். ரசிகர்கள் புனேயில் தங்குவதற்கும், உணவுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை புனேயில் இருந்து திரும்பும்.

இந்த நிலையில், எப்போதும் தமிழில் ட்வீட் செய்து ரசிகர்களை மகிழ்விக்கும் சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டரில், “பார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகளை”. அமெரிக்காலயே போய் நீங்க மேட்ச் நடத்தினாலும் விசில் போட தார தப்பட்டையோட எமை வாழ்த்த தேரேரும் என் தமிழினம்! உங்கள் அன்புக்கு நானடிமை! நீங்க வேற லெவல் மாஸ் யா. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்” என்று பதிவிட்டு அசத்தியுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close