Hardik Pandya | T20 World Cup 2024:9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற ஜூன் 2 முதல் 29 வரை நடக்க உளள்து. தற்போது இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்கும் நிலையில், ஜூன் 5 ஆம் தேதி நியூயார்க்கில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இதனைத் தொடர்ந்து, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த போட்டிகளுக்கு முன்னதாக இந்திய அணி நாளை சனிக்கிழமை நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் வங்கதேச அணியை எதிர்கொள்ள உள்ளது. இப்போட்டியானது நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதனையொட்டி, இந்திய அணி வீரர்கள் நியூயார்க்கில் உள்ள கான்டியாக் பார்க் மைதானத்தில் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
40 நிமிடம் பவுலிங் பயிற்சி
இந்நிலையில், இந்திய அணியில் விராட் கோலி இன்னும் அணியில் சேராத நிலையில், கவனம் முழுவதும் ஹர்திக் பாண்டியா மீது இருந்தது. அவர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தீவிர பந்துவீச்சை மேற்கொண்டிருந்தார்.
ஐ.பி.எல் 2024-க்குப் பிறகு தனது இடைவேளையை நீட்டித்ததாகக் கூறப்படும் விராட் கோலி, வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திற்கு அவர் வருவதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அவர் நேற்று வியாழக்கிழமை மாலை மும்பையில் இருந்து நியூயார்க்கிற்கு புறப்பட்டார். இப்போட்டியில் அவர் பங்கேற்பு சந்தேகம் என கூறப்படுகிறது.
கோலி இல்லாத நிலையில், நியூயார்க்கில் நடந்த இந்தியாவின் பயிற்சி அமர்வில் ஹர்திக் பாண்டியா முக்கிய இடத்தைப் பிடித்தார். பல்துறை திறமைகளுக்கு பெயர் பெற்ற ஆல்-ரவுண்டர் ஹர்திக், நெட்ஸில் கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் பந்து வீசினார். நடப்பு ஐ.பி.எல் சீசனில் அவரது ஆல்ரவுண்டர் திறம் பெரும் விவாதப் பொருளாக மாறி இருந்த நிலையில், அவரது பந்துவீச்சு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
On national duty 🇮🇳 pic.twitter.com/pDji7UkUSm
— hardik pandya (@hardikpandya7) May 29, 2024
ஹர்திக் கணிசமான நேரத்தை நெட்ஸில் பேட்டிங்கிற்கு செலவிட்டதாகவும், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐ.பி.எல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர் 14 போட்டிகளில் 216 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில் 10-க்கு மேல் எகானமி விகிதத்தில் 11 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதனிடையே, குல்தீப் யாதவ், ஹர்திக், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் போன்ற வீரர்களின் பந்துவீச்சை ரோகித் மற்றும் சூர்யகுமார் யாதவ் தங்களின் பேட்டிங் பயிற்சியின் போது எதிர்கொண்டனர். ஆனால் இந்தியாவுக்கான பேட்டிங் அமர்வின் முக்கிய ஈர்ப்பு என்னவென்றால், அர்ஷ்தீப் சிங் மற்றும் சிராஜ் ஆகியோர் நெட்ஸில் பேட்டிங் செய்ய அனுப்பப்பட்ட முதல் இரண்டு வீரர்களாக இருந்தனர்.
இதற்கிடையில், மீதமுள்ள ஆல்-ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் ஷிவம் துபே ஆகியோரும் தங்களது திறமைகளில் கவனம் செலுத்தி பயிற்சி எடுத்தனர். அதே நேரத்தில் யுஸ்வேந்திர சாஹல், அவேஷ் கான் மற்றும் ரிங்கு சிங் போன்றவர்கள் ஜெட் லாக்கில் இருந்து மீண்டு வருவதால் லேசான பயிற்சியில் ஈடுபட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.