Hardik Pandya vs Krunal Pandya, Emotional Moment LSG vs GT Tamil News: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இத்தொடர் மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நடப்பு சீசனில் அடுத்த சுற்றுக்கு முன்னேற அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகின்றன.
இந்நிலையில், இதில், நேற்று (ஞாயிற்றுகிழமை) ஐபிஎல் தொடரில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடந்தன. இதில், அகமதாபாத்தில் மாலை 3:30 மணிக்கு நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் காயம் காரணமாக ராகுல் விலகியதால் க்ருனால் பாண்ட்யா அணியை வழிநடத்தினார்.
குஜராத் அணியை வழக்கம் போல் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா வழிநடத்தினார். ஐபிஎல் தொடரில் சகோதரர்கள் கேப்டன்களாக எதிர் எதிர் அணியில் மோதுவதை காண ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். டாஸ் போடுவதற்கு முன் ஹர்திக் தனது மூத்த சகோதரரின் காலர் மற்றும் தொப்பியை சரிசெய்து கொண்டிருந்தார். இருவரும் களத்தில் இறங்குவதற்கு முன் உணர்ச்சிகரமான தருணத்தைப் பகிர்ந்து கொண்டனர் மற்றும் ஒருவருக்கொருவர் அன்பான அரவணைப்புடன் தட்டிக் கொடுத்தனர்.
டாஸ் வென்ற க்ருனால் பாண்டியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். எப்படியும் குஜராத் முதலில் பேட் செய்ய திட்டமிட்டு இருந்ததாக ஹர்திக் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இது தனது குடும்பத்திற்கு ஒரு உணர்ச்சிபூர்வமான நாள் என்றும், மறைந்த தனது தந்தையை நினைவு கூர்ந்தார் என்றும் கூறினார்.
"இது ஒரு உணர்ச்சிகரமான நாள், எங்கள் தந்தை பெருமையாக இருந்திருப்பார். இது முதல் முறையாக நடக்கிறது. அதனால் எங்கள் குடும்பம் பெருமை கொள்கிறது. இன்று ஒரு பாண்டியா நிச்சயமாக வெற்றி பெறுவார்" என்று ஹர்திக் கூறினார்.
ஹர்திக் மற்றும் க்ருணால் பாண்டியை இருவரும் உள்நாட்டு கிரிக்கெட்டில், பரோடா அணிக்காக ஒன்றாக விளையாடியுள்ளனர். மேலும், இருவரும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணியில் ஆறு ஆண்டுகள் ஒன்றாக விளையாடி, மூன்று ஐபிஎல் பட்டங்களை ஒன்றாக வென்றனர். ஹர்திக் 2015 ஆம் ஆண்டிலும், அதே நேரத்தில் க்ருனால் 2016 ஆம் ஆண்டிலும் மும்பை அணியால் வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சீசன் முதல் குஜராத் அணியை வழிநடத்தி வரும் ஹர்திக், அணியை 2022 சாம்பியன் பட்டம் வெல்ல அழைத்துச் சென்றார். க்ருனால் இந்த வார தொடக்கத்தில் கேஎல் ராகுலுக்கு தொடையில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து லக்னோ அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றார். கடந்த புதனன்று (மே 3) சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு எதிராக க்ருனால் கேப்டனாக அறிமுகமானார். ஆனால், அந்த ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
குஜராத் வெற்றி
குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிய 51வது லீக் ஆட்டத்தில் குஜராத் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து இரவு 7:30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடந்த 52வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
இன்று இரவு 7:30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடக்கும் 53வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil