அம்பேத்கர் குறித்து ட்விட்டரில் சர்ச்சையான கருத்து தெரிவித்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், எனது பெயரில் உள்ள போலியான ட்விட்டர் கணக்கில் இருந்து இதுபோன்ற தகவல்கள் பரப்பப்பட்டு உள்ளதாக ஹர்திக் பாண்ட்யா விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்திய அணியின் ஆல்-ரவுண்டராக வலம் வரும் ஹர்திக் பாண்ட்யா, அம்பேத்கர் குறித்து ட்விட்டரில் சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்ததாகவும், இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. நமக்கு பக்கென்று இருந்தது. நம்ம பையன், டிசைன் டிசைனா ஹேர் ஸ்டைல் வைப்பவர் ஆச்சே! இவர் எப்படி அம்பேத்கர் பற்றி!? எங்கேயோ இடிக்குதே!! என்று யோசித்தோம்.
அதிலும், "அம்பேத்கர் என்பவர், சட்டத்தையும், அரசியலையும் வகுத்தவரா… ?அல்லது இடஒதுக்கீடு என்னும் நோயை இந்த நாட்டில் பரப்பியவரா?" என்று ஹர்திக் பாண்டியா குறிப்பிட்டு இருந்ததாக புகார் அளிக்கப்பட்டது.
ரைட்டு.. யாரோ நல்லா வேலை பார்த்து இருக்குறாங்க-னு நமக்கு புரிந்தாலும், நேற்றே, ஹர்திக் பாண்ட்யாவின் போலி ட்விட்டர் கணக்கில் இருந்து தான் இந்த ட்வீட் வெளியாகி உள்ளதாக தகவல் பரவின.
முன்னதாக, அம்பேத்கரை அவமதிக்கும் விதமாக ஹர்திக் பாண்டியா கருத்து தெரிவிப்பதாக, டி.ஆர் மெக்வால் என்பவர், ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மேலும், இந்த கருத்து ஹர்திக் பாண்டியாவின் அதிகார ட்விட்டர் வலைப்பக்கத்தில் தான் பதிவிடப்பட்டிருந்தது என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை கடந்த செவ்வாய்கிழமை ஜோத்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஹர்திக் பாண்டியா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், ஹர்திக் பாண்ட்யா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இவ்விவகாரம் குறித்து மறுப்பு தெரிவித்து தெளிவான ஸ்டேட்மென்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நான் அம்பேத்கரை இன்சல்ட் செய்து ட்வீட் வெளியிட்டு உள்ளதாக புகார்கள் பரவி வருகிறது. ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நான் வெரிஃபைட் செய்யப்பட்ட ட்விட்டர் பக்கத்தை தான், எனது கருத்துகளை பதிவிட உபயோகித்து வருகிறேன். சர்ச்சையான அந்த ட்வீட், என் பெயரில் உருவாக்கப்பட்ட போலியான கணக்காகும். எனது படத்தை பயன்படுத்தி இந்தக் காரியத்தை செய்துள்ளனர்.
நான் அம்பேத்கரை பெரிதும் மதிப்பவன். எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களையும் நான் இன்சல்ட் செய்யவில்லை. நீதிமன்றத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.