ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் காயம்(முதுகு வலி) காரணமாக வெளியேறிய ஹர்திக் பாண்ட்யா நீண்ட ஓய்வில் இருந்து வந்தார்.
காயத்தால் ஆசிய கோப்பை தொடர் முழுவதும் பங்கேற்க முடியாமல் தவித்த ஹர்திக் பாண்ட்யாவால், இந்தியாவில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் பங்கேற்க முடியவில்லை.
தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் டி20 மற்றும் டெஸ்ட் அணியிலும் ஹர்திக் பாண்ட்யா சேர்க்கப்படவில்லை. ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், நடந்து வரும் ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில், பரோடா அணிக்காக மீண்டும் களமிறங்கியுள்ளார் ஹர்திக்.
மும்பை அணிக்கு எதிராக நேற்று (டிச.14) தொடங்கிய ஆட்டத்தில், காயத்திற்கு பிறகு முதன் முறையாக பவுலிங் செய்த பாண்ட்யா, ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
தொடக்க வீரர்கள் ஆதித்ய தாரே, விலாஸ் ஆடி ஆகியோரை முதல் பத்து ஓவருக்குள்ளாகவே காலி செய்த பாண்ட்யா, பின் வரிசை வீரர்களான ஷிவம் துபே, ஆகாஷ் பர்கர், ராய்ஸ்டன் தயாஸ் ஆகியோர் அவுட் செய்து ஐந்து விக்கெட்டுகளை அள்ளினார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடுவதன் மூலம், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரில் பாண்ட்யா மீண்டும் இடம் பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடும் வீரர்கள், இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதால், பாண்ட்யாவின் வருகை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க - கோலி, ரஹானேவின் 'இன்னிங்ஸ் சேவ்' பார்ட்னர்ஷிப், ஆட்ட நேர முடிவில் இந்தியா 172-3