Hardik Pandya - WI v IND 3rd T20 Tamil News: வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது. அடுத்ததாக இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் 3 ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசிலும், கடைசி இரு ஆட்டங்கள் அமெரிக்காவிலும் நடைபெறுகிறது.
இந்நிலையில், முதல் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா 2-வது ஆட்டத்திலும் இதே போல நெருங்கி வந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் பணிந்தது. இதனால் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2- 0 என்கிற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3வது டி20 கிரிக்கெட் போட்டி கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஆடிய இந்தியா சூர்யகுமார் யாதவ் அதிரடியால் 17.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் ரசிகைக்கு ஹர்திக் கொடுத்த பரிசு!
இந்தப் போட்டியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 20 ரன்கள் எடுத்தார். போட்டி முடித்த உடனேயே, ஹர்திக் பாண்டியா, தனது பேட்களுடன், பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் ஒரு குறிப்பிட்ட ஸ்டாண்டை நோக்கி விரைந்தார். ஹர்திக் கையொப்பமிடப்பட்ட பந்தை தன்னுடன் எடுத்துச் சென்றபோது, அவர் ஜாக்கிங் செய்து இளம் பெண் ரசிகையை சந்தித்தார். ஹர்திக் பின்னர் ஸ்டாண்டை அடைய தடுப்பு வேலியை குதித்து பந்தை ரசிகரிடம் ஒப்படைத்தார். பந்தை பெற்றுக்கொண்ட அந்த ரசிகை நெகிழ்ந்து போனார். மேலும் கையில் பந்துடன் ஹர்திக்கை நோக்கி கை அசைத்தார்.
முன்னதாக, இந்தியா வெற்றி பெற வேண்டிய போட்டிக்காக ஹர்திக் பாண்டியா தீவிர வலைப் பயிற்சி செய்து கொண்டிருந்தார். அவர் அதிரடியாக பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, போட்டியை பார்க்க சீக்கிரமாகவே வந்த வெஸ்ட் இண்டீஸ் ரசிகை மீது பந்து தாக்கியது. ஸ்டாண்டில் அமர்ந்திருந்த அவரது கன்னத்தில் அடிபட்டது.
இதனால், கவலையடைந்த ஹர்திக் பாண்டியா, தற்செயலான தாக்குதலுக்குப் பிறகு ரசிகை நலமாக இருப்பதை உறுதி செய்யுமாறு பிசிசிஐ மருத்துவக் குழுவை வலியுறுத்தினார். மேலும், அவரை ஓய்வில் இருக்கும்படி வற்புறுத்தினார். அந்த ரசிகைக்கு ஏற்பட்ட சிரமத்தை ஈடுசெய்ய ஒரு சிறப்பு பரிசு தருவதாக உறுதியளித்தார். அதன்படி, போட்டிப் பந்தை அவருக்கு பரிசாக கொடுத்து நெகிழ்ச்சியடைய செய்தார். அவரது இந்த செயல் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது. மேலும், இந்த தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.