10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். டி20 தொடரின் 18-வது சீசன் வருகிற 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. அன்றைய தினம் இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2025: Why Suryakumar Yadav and not Hardik Pandya will captain MI vs CSK in Chennai?
இந்தத் தொடரில் முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தனது முதலாவது ஆட்டத்தில் 23 ஆம் தேதி அன்று சேப்பாக்கத்தில் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுவார் என்று ஹர்திக் பாண்டியா அறிவித்திருக்கிறார்.
கடந்த சீசனில் குறிப்பிட்ட நேரத்தை தாண்டி பந்து வீசியதாக கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த சீசனில் அதாவது இந்த சீசனில் தொடக்க ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதனால், அவர் இந்த சீசனில் சென்னை அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் ஆட மாட்டார். எனவே, தனக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இருப்பார் என்று அறிவித்தார்.
ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் மும்பை அணிக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் அணியின் கேப்டனாக செயல்படலாம் எனப் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், ஹர்திக் சூர்யகுமாரை நியமித்து இருக்கிறார். இதுபற்றி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில்,
"நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கின்றேன். ஏனென்றால் எங்கள் அணியில் மூன்று கேப்டன்கள் என்னுடன் விளையாடுகிறார்கள்.
ரோகித் சர்மா, சூரியகுமார், பும்ரா ஆகிய மூன்று வீரர்களும் எனக்கு துணை நிற்பார்கள். எனக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், அவர்கள் நிச்சயம் எனக்கு அறிவுரைகளை வழங்குவார்கள். சி.எஸ்.கே-வுக்கு எதிரான முதல் போட்டியில் தடை காரணமாக நான் விளையாடவில்லை. எனக்குப் பதில் சூரியகுமார் கேப்டனாக செயல்படுவார். தடை பெற்றது என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை. கடந்த ஆண்டு இந்த தவறு நடைபெற்றது. நாங்கள் இரண்டு நிமிடம் தாமதமாக ஓவர்களை வீசி இருக்கிறோம்." என்று அவர் கூறியுள்ளார்.
சென்னை மண்ணில் சி.எஸ்.கே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், கேப்டன் ஹர்திக் தொடக்கப் போட்டியிலே இல்லாதது அந்த அணிக்கு சற்றுப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக மும்பையின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா-வும் சென்னைக்கு எதிரான போட்டியில்
விளையாட மாட்டார். அவர் விலகி இருப்பதும் கூடுதல் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.